சீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம்  உடல் உறுப்புகள்!

0

சீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம்  உடல் உறுப்புகள்!

அன்வர் தோஹ்தி… சீனாவில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுள் ஒருவர். 1995 ஜூன் மாதம் தனது சீனியர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததை தொடர்ந்து அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்காக சென்றார். அவர் சென்ற இடம் உரூம்கி தடுப்பு முகாம். அங்கு கண்ட காட்சிகள் அன்வரை உலுக்கியது. பத்து உய்கூர் முஸ்லிம்கள் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்களில் ஒருவருக்குதான் அன்வர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். உடலின் வலது பகுதியில் சுடப்பட்ட அந்த நபர் இன்னும் இறக்கவில்லை. அவரின் உயிரை காப்பாற்றவா அன்வர் அழைத்து வரப்பட்டுள்ளார்? யோசித்துக் கொண்டிருந்த அன்வருக்கு அடுத்த உத்தரவு இரத்தத்தை உறையச் செய்தது.

துடித்துக் கொண்டிருக்கும் அந்நபரின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை அகற்ற வேண்டும். அதுவும் அந்த நபருக்கு மயக்க மருந்து கொடுக்காமல்! இடப்பட்ட உத்தரவை வேறு வழியின்றி செய்து முடித்தார் அன்வர். எந்த தவறும் செய்யாத ஒரு அப்பாவியின் உடல் உறுப்புகள் திருடப்பட்டு கள்ளச் சந்தையில் கொள்ளை இலாபத்தில் விற்கப்பட்டது. இது ஒரு தனித்த நிகழ்வல்ல. சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஏராளமான உய்கூர் இன முஸ்லிம்களுக்கு இதே கொடுமைதான் நிகழ்த்தப்படுகிறது. ஒரு தவறுக்கு நாமும் துணையாகி விட்டோமே என்ற எண்ணம் அன்வரை உறுத்திக் கொண்டே இருந்தது. மூன்றாண்டுகள் கழித்து சீனாவில் இருந்து தப்பிச் சென்றவர் இங்கிலாந்தில் அடைக்கலம் அடைந்தார். 2002ல் இங்கிலாந்து அரசாங்கம் அவருக்கு அரசியல் அடைக்கலம் கொடுத்தது.

இங்கிலாந்து சென்றவர், சின்ஜியாங் மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அணு ஆயுத சோதனை காரணமாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை சுட்டிக் காட்டினார். இதனை அடிப்படையாக வைத்து அங்குள்ள ஊடக நிறுவனங்கள் ‘டெத் ஆஃப் த சில்க் ரோட்’ என்ற ஆவணப்படத்தை தயாரித்தன. அன்வர் கொடுத்த தகவல்கள் சீனாவில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத ஆயுத விற்பனை குறித்த செய்திகளுக்கு வலு சேர்த்தன. இவ்வாறு சட்டவிரோதமாக திருடப்படும் உடல் உறுப்புகள் பெரும்பாலும் சவூதி அரேபியாவை சேர்ந்தவர்களுக்கு பல்லாயிரம் டாலர்களுக்கு விற்கப்படுகின்றன என்று சென்ற மாதம் ரேடியோ ஃப்ரீ ஏசியாவிற்கு கொடுத்த பேட்டியில் அன்வர் கூறியிருந்தார். அதிர்ச்சி தரும் இச்சம்பவங்கள் குறித்து கட்டுரை எழுதி வந்த பத்திரிகையாளர் வெர்லிமேன், சவூதிகள் இத்தகைய உடல் உறுப்புகளை வாங்குவது குறித்து அன்வரிடம் கேட்ட போது, தன்னால் உறுதியாக தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

சில நாட்கள் இடைவெளியில் தனது கூற்றை அன்வர் மாற்றிக் கொண்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அன்வர் இங்கிலாந்தில் இருந்தாலும் அவரின் தாயார் இன்னும் சீனாவில்தான் இருக்கிறார். தனது பேச்சு தனது தாயின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்ற பயத்தில்தான் கூற்றை மாற்றியுள்ளார் அன்வர். உய்கூர் முஸ்லிம்களுக்கு எதிராக தான் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் குறித்து வெளியுலகிற்கு சொல்பவர்களின் குடும்பத்தினரை சீனா விட்டு வைப்பதில்லை.

சவூதியில் உள்ள தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இத்தகைய உறுப்புகள் ‘ஹலால்’ ரகத்தை சேர்ந்தவை என்று கொஞ்சமும் வெட்கமின்றி விளம்பரம் செய்கிறது சீனா. இந்த உறுப்புகள் அனைத்தும் சீனாவில் உள்ள மக்கள் அவர்களாக விரும்பி முன்வந்து தானமாக கொடுத்தவை என்றும் சீனா அரசாங்கம் கூறுகிறது.

உடல் உறுப்புகளின் மிகப்பெரிய சந்தையாக சவூதி அரேபியா திகழ்கிறது. 2012 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் 4000 சவூதிகள் எகிப்து, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக உடல் உறுப்புகளை வாங்கியதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அங்கு 7000 நபர்கள் சிறுநீரக மாற்று தேவையுடையோராக உள்ளனர் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. உய்கூர் முஸ்லிம்களின் உரிமைகளை முற்றிலுமாக மறுத்து வரும் சீனா அவர்களின் உடல் உறுப்புகளை விற்பனை செய்து கொள்ளை இலாபம் ஈட்டி வருகிறது. கள்ளச் சந்தையில் 1,65,000 டாலர் வரை சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உய்கூர் முஸ்லிம்களிடமிருந்து கட்டாய இரத்த மாதிரியை சேகரித்து தகவல் தரவை (டேட்டா பேஸ்) சீனா பேணி வருகிறது. தேசிய சுகாதார ஆய்வு என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உடல் உறுப்புகள் தேவைப்படும் வாடிக்கையாளருக்கு ஏற்ற நபரை இந்த தகவல் தரவில் இருந்து பெற்று அவரின் உடல் உறுப்பை சட்டவிரோதமாக எடுத்து உரிய இடத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக திருடப்படும் உடல் உறுப்புகள் குறித்த அறிக்கையொன்று (ஙிறீஷீஷீபீஹ் பிணீக்ஷீஸ்மீst/ஷிறீணீuரீலீtமீக்ஷீ) 2016ல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தவிர பத்திரிகையாளர்களின் ஆய்வுகளும் இந்த திருட்டை உறுதிப்படுத்துகின்றன. உய்கூர் இன முஸ்லிம்கள் மட்டுமின்றி திபத்தியர்கள், ஃபலன் கேங் அமைப்பினர் உள்ளிட்டவர்களிடமிருந்தும் உடல் உறுப்புகள் திருடப்படுகின்றன.

உய்கூர் இன முஸ்லிம்களுக்கு எதிரான கடுமையான நெருக்கடிகளையும் சித்திரவதைகளையும் மேற்கொள்ளும் சீன கம்யூனிச அரசாங்கம் அவர்களை வதை முகாம்களில் வகைதொகையின்றி அடைத்து வைத்துள்ளது. சீன கலாசாரத்துடன் முஸ்லிம்களை கலக்கச் செய்யும் ‘பண்பாட்டு முகாம்கள்’ என்று இந்த வதைமுகாம்களை சீனா அழைக்கிறது. பத்து இலட்சம் முதல் இருபது இலட்சம் வரையிலான உய்கூர் முஸ்லிம்கள் இத்தகைய வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் வருடத்திற்கு ஒரு இலட்சம் உறுப்பு மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் மற்றொரு அறிக்கை அதிர்ச்சி கொடுக்கிறது.

உய்கூர் முஸ்லிம்களின் உடல் உறுப்பு திருட்டு குறித்து சமீபத்தில் கட்டுரை (ழிமீஷ் பிஷீக்ஷீக்ஷீஷீக்ஷீs: சிலீவீஸீணீ லீணீக்ஷீஸ்மீstவீஸீரீ விusறீவீனீ ஷீக்ஷீரீணீஸீs வீஸீ நீஷீஸீநீமீஸீtக்ஷீணீtவீஷீஸீ நீணீனீஜீs) எழுதிய பத்திரிகையாளர் சி.ஜே. வெர்லிமேன், சீன அரசாங்கத்தின் கூலிப்படைகளால் தான் விரைவில் கொலை செய்யப்படலாம் என்ற தனது அச்சத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். சீன அரசாங்கத்தின் மிரட்டல்கள் எந்தளவிற்கு இருக்கின்றன என்பதை இவரின் இப்பதிவு உணர்த்துகிறது.

தனது நாட்டின் வட மேற்கு மாகாணமான சின்ஜியாங்கில் வசித்து வரும் உய்கூர் உள்ளிட்ட ஏனைய பூர்வ குடிகள் மீது கடுமையான சித்திரவதைகளையும் கண்காணிப்புகளையும் சீன கம்யூனிச அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. சுதந்திர கிழக்கு துர்கிஸ்தான் என்று அறியப்பட்ட இப்பகுதியை 1949ல் தன்னுடன் இணைத்துக் கொண்ட சீனா, இங்கு மிகப்பெரும் கலாசார இனப்படுகொலையை நடத்தி வருகிறது. 25 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட இப்பிராந்தியத்தில் உய்கூர் முஸ்லிம்கள் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளனர்.

இம்மக்களின் கலை, கலாசாரம், மொழி, மதம் என அனைத்தையும் சீரழிக்கும் வேலைகளை மேற்கொண்டு வருகிறது சீன அரசாங்கம். இஸ்லாத்தை பின்பற்ற கடும் நெருக்கடிகள் விதிக்கப்படுவதுடன் கட்டாய கம்யூனிச பாடங்களும் மக்களுக்கு திணிக்கப்படுகின்றன. இம்மக்களின் மொபைல் போன் பயன்பாடு, சமூக வலைதள பயன்பாடு என அனைத்தும் கடும் கண்காணிப்புகளுக்கு ஆளாக்கப்படுகின்றன. சோதனை சாவடிகளில் தங்கள் சமூக வலைதளங்களின் முழு விபரங்களையும் இவர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். சில பிரத்யேக செயலிகளை உய்கூர்கள் கட்டாயம் தங்கள் மொபைல் போனில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவது, வாசிப்பது, எழுதுவது என அனைத்தையும் இந்த செயலிகள் பதிவு செய்யும்.

உய்கூர் முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளுக்கு இஸ்லாத்தை சொல்லிக் கொடுக்கக் கூடாது, குர்ஆனை கற்றுக் கொடுக்கக் கூடாது, 18 வயதிற்கு கீழுள்ளவர்கள் பள்ளிவாசல்களுக்கு செல்லக் கூடாது, அரசாங்கம் நியமிக்கும் இமாம்கள் மட்டுமே பள்ளிவாசல்களில் இருக்க முடியும், அரசாங்கம்தான் மதரஸாகளை நடத்தும் என கடும் கட்டுப்பாடுகள். வெளிநாடுகளில் இருந்து வரும் உய்கூர்கள், வெளிநாட்டில் உள்ளவர்களிடம் தொடர்பு கொள்பவர்கள் மீது இரட்டிப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக கண்காணிப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்படுவதும் அவர்களில் சிலரை தவிர மற்றவர்கள் பல மாதங்கள் முகாம்களில் அடைக்கப்படுவதும் அங்கு வாடிக்கை. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடமும் உடனடியாக இரத்த மாதிரி சேகரிப்பு, கைவிரல் பதிவு, கண்விழி பதிவு உள்ளிட்டவை மேற்கொள்ளப் படுகின்றன.

பள்ளிக்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகள் என அனைத்தும் கண்காணிப்பு கேமராகள் மற்றும் கம்பி வேலிகளுக்கு மத்தியில் எப்போதும் பாதுகாப்பு வலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. வீதிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான கேமராகள் மக்களை படம்பிடித்து அவர்களின் நடமாட்டத்தை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கின்றன. மொத்தத்தில் மக்களின் அனைத்து நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுகின்றன.

2009 ஜூலையில் சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கொலை செய்யப்பட்ட உய்கூர் தொழிலாளர்களுக்கு நீதி வேண்டி மக்கள் போராட்டங்களை நடத்தினர். ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி மக்களிடம் செய்திகள் பகிரப்பட்டு போராட்டத்திற்காக மக்கள் திரட்டப்பட்டனர். அரசாங்கம் மக்கள் போராட்டத்தை ஒடுக்கியதை தொடர்ந்து வன்முறை வெடித்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் அதிகமானவர்கள் சீனாவின் பெரும்பான்மையினமாக ஹான் இனத்தை சேர்ந்தவர்கள். இதனை தொடர்ந்து உய்கூர்கள் மீதான அடக்குமுறைகளை சீன அரசாங்கம் அதிகப்படுத்தியது. 2010ல் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட வெளிநாட்டு சமூக ஊடகங்களை சீன அரசாங்கம் தடை செய்தது.

சீனாவில் உள்ள கடும் இணையதள கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் காரணமாக சின்ஜியாங் மாகாணத்தில் நடைபெறும் கொடுமைகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. வெளிநாடுகளில் வாழும் உய்கூர்கள் இக்கொடுமைகள் குறித்து வெளியே சொன்னால் சீனாவில் வாழும் இவர்களின் உறவினர்கள் காணாமல்  ஆக்கப்படுவார்கள் என்பதால் அவர்களும் தங்கள் வாய்களை திறப்பதில்லை. ஒரு சில பத்திரிகையாளர்களின் செய்திகள் மற்றும் தைரியத்துடன் முன்வந்து உண்மைகளை உறைக்கும் உய்கூர் மக்களின் கூற்றுகளில் இருந்தே சீனா அரங்கேற்றும் மனித உரிமை மீறல்களை குறித்து நாம் அறிய முடிகிறது.

எவ்வித கட்டுப்பாடின்றி மக்களை கைது செய்து வதைமுகாம்களில் கம்யூனிச பாடத்தை நடத்தி வந்தவர்கள் சமீபத்தில் உய்கூர் மக்களின் வீடுகளுக்கே சென்று, அவர்களின் அனுமதியின்றி வீடுகளில் தங்கி கம்யூனிச கலாசாரத்தை புகுத்துகின்றனர். இஸ்லாத்தை பின்பற்றுவதும், தொழுவதும், நோன்பு நோற்பதும், குர்ஆன் வைத்திருப்பதும், இஸ்லாத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதும் கடும் குற்றங்களாக கருதப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது.

சமீபத்தில் சின்ஜியாங்கின் கஷ்கர் பகுதிக்கு சென்ற பத்திரிகையாளர் பவுல் மோசர் அப்பகுதியில் கட்டிடக் கலையை சீன அரசாங்கம் அழித்து வருவதை புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார். அரசாங்கத்தின் நெருக்கடி காரணமாக பள்ளிவாசல்களுக்கு மக்கள் வருவதில்லை என்றும் பள்ளிவாசல்களில் ஏராளமான கண்காணிப்பு கேமராகள் பொருத்தப்பட்டுள்ளதையும் வெளியிட்டார். நகரின் முக்கியமான ஈத்கா பள்ளிவாசலில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராகள் இருப்பதை குறிப்பிட்ட அவர், பள்ளிவாசலின் மைய அரங்கில் சீன கம்யூனிச கட்சியின் பொதுச் செயலாளர் சென் குவான்கோவின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதையும் தெரியப்படுத்தினார். திபெத்தியர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய இவரிடம்தான் தற்போது உய்கூர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டத்தின் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பவுல் சென்ற இடங்களுக்கெல்லாம் ஏழு காவல்துறையினரை கொண்ட படை அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளது. இவர் யாரிடமெல்லாம் பேசினாரோ அத்தனை நபர்களிடமும் அவர்கள் தகவல்களை திரட்டினர். ஒரு மாவட்டத்திற்கு இவர் செல்லக் கூடாது என்பதற்காக போலியாக ஒரு விபத்தையும் நடத்தி பின்னர் ஒரு நெடுஞ்சாலையை மூடினர். உய்கூர் முஸ்லிம்களுக்கு தாங்கள் செய்யும் அக்கிரமங்களை உலகம் அறிந்துவிடக் கூடாது என்பதற்காக சீன அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இவை.

சின்ஜியாங் மாகாணத்தையும் தாண்டி, பெய்ஜிங், ஷாங்காய் போன்ற பகுதிகளில் வாழும் உய்கூர் மக்கள் கூட கடும் நெருக்கடிகளை சந்திப்பதை வெர்லிமேன் மற்றொரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இப்பகுதிகளில் வாழும் உய்கூர் முஸ்லிம்களுக்கு விடுதிகளில் தங்குவதற்கு கூட இடம் கிடைப்பதில்லை என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். உயர் படிப்புகளை படித்தாலும் உயர் பதவிகளில் இருந்தாலும் இனத்தின் அடிப்படையில் இவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. தங்களின் அடையாள அட்டையை சீனர்கள் எப்போதும் தங்களுடன் வைத்திருக்க வேண்டும். உய்கூர்களின் அடையாள அட்டையில் மட்டும் பிரத்யேகமாக ஒரு கருப்பு புள்ளி இருக்கும், சம்பந்தப்பட்ட நபரை உய்கூர் இனத்தவர் என்று அடையாளப்படுத்தும் விதத்தில். சின்ஜியாங் மாகாணத்திற்கு வெளியில் வசிக்கும் உய்கூர்கள் தங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் மாதத்திற்கு ஒரு முறை சென்று ஆஜராகி தங்களின் முகவரி மற்றும் தான் தங்குவதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும். எத்தனை வருடங்கள் தங்கியிருந்தாலும் இந்த முறையை ஒவ்வொரு மாதமும் பின்பற்ற வேண்டும்.

உய்கூர் பகுதிகளில் பழமையான கட்டிடங்களை இடிப்பதற்கும் டிஜிட்டல் கண்காணிப்புகளை மேற்கொள்வதற்கும் வழக்கமான இரண்டு காரணங்கள் சீனா கூறுகிறது. வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு. சின்ஜியாங்கின் உரூம்கி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் கேள்வி எழுப்பிய போதுதான் சீனா இந்த பதிலை கொடுத்தது. சில நாட்களுக்கு முன் நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை மேற்கோள் காட்டி இதன் காரணமாகத்தான் பள்ளிவாசல்களில் தாங்கள் கண்காணிப்பு கேமராகளை வைத்துள்ளதாக விசித்திரமான காரணத்தை கூறியுள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் தற்போது உரூம்கி மற்றும் காஷ்கர் நகரங்களில் உய்கூர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பழமையான கட்டிடங்கள் இடிக்கப்பட்டு நவீன அடுக்குமாடி குடியிருப்புகள் அதிக கண்காணிப்பு வசதிகளுடன் கட்டப்படுகின்றன. இதற்காக பல பில்லியன் டாலர்கள் செலவு செய்யப்படுகின்றது. அதிக எண்ணிக்கையில் உய்கூர் மக்களை சிறையில் அடைத்துள்ள அரசாங்கம் தனது அடுத்த திட்டமாக இதனை செயல்படுத்துவதாக பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சீன கலாசாரத்தோடு உய்கூர் மக்களை ஒன்றிணைப்பதற்காக நடத்தப்படும் பயிற்சி முகாம்கள் என்று வதைமுகாம்களை குறிப்பிடும் சீனா தற்போது வளர்ச்சி என்ற பெயரில் அவர்களின் வாழ்விடங்களையும் பொருளாதாரத்தையும் நசுக்கி வருகிறது. இந்த புதிய வளர்ச்சி திட்டம் தொடங்கப்பட்ட 2017ஆம் வருடத்தில் இருந்து உரூம்கி பகுதியில் உய்கூர்களின் மக்கள் தொகை குறைந்துள்ளதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் குறிப்பிடுகிறது.

தலைநகர் பெய்ஜிங்கை உலகின் எழுபது நாடுகளுடன் இணைக்கும் ஒரு திட்டத்தை 2013ல் இருந்து சீனா நடைமுறைபடுத்தி வருகிறது. சாலைகள், ரயில் வழிதடங்கள், கப்பல் போக்குவரத்து, எரிவாய்வு குழாய்கள் என பல முனைகளில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு ‘பெல்ட் அண்டு ரோட் இனிஷியேடிவ்’ என்று பெயர். இத்திட்டத்தின் மையப்புள்ளிகளில் ஒன்று சின்ஜியாங் மாகாணம். எனவேதான் தனது முந்தைய கெடுபிடிகளை தற்போது இன்னும் அதிகரித்துள்ளது சீனா. சின்ஜியாங் மாகாணத்தின் பெரும்பகுதியினர் முஸ்லிம்கள் என்ற போதும் சீனாவின் இந்த அத்துமீறல்களை பெரும்பான்மை முஸ்லிம் நாடுகள் கண்டுகொள்வதில்லை. 57 முஸ்லிம் நாடுகளின் அங்கமான ஓ.ஐ.சி. (ளிக்ஷீரீணீஸீவீக்ஷ்ணீtவீஷீஸீ ஷீயீ மிsறீணீனீவீநீ சிஷீஸீயீமீக்ஷீமீஸீநீமீ) சீனா தனது நாட்டின் முஸ்லிம்களை சிறப்பாக கவனித்து வருவதற்கு அந்நாட்டிற்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறது. தனது தேச நலன்களை பாதுகாப்பதற்கு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை சீனாவுக்கு இருக்கிறது என்று பிப்ரவரி மாதம் அங்கு சென்ற சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் கூறினார். சின்ஜியாங்கில் என்ன நடக்கிறது என்று தனக்கு தெரியாது என சுருக்கமாக முடித்துக் கொண்டார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். சீனா மேற்கொண்டு வரும் புதிய திட்டத்தில் இந்நாடுகள் ஏதேனும் வகையில் பலன் பெறுவதே அவர்களின் கள்ள மௌனத்திற்கு முக்கிய காரணம் என்பதையும் பத்திரிகையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மனித உரிமைகளை பேணிப் பாதுகாப்பதில் இவர்கள் வல்லவர்கள் என்பதால் சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து இவர்கள் வாய் திறக்காமல் இருக்கலாம். அவ்வப்போது வெளிவரும் உண்மை தகவல்களை மறைப்பதற்காக தான் தேர்ந்தெடுக்கும் பத்திரிகையாளர்களையும் வெளிநாட்டு தூதுவர்களையும் சின்ஜியாங் மாகாணத்திற்கு அழைத்துச் செல்லும் சீன அரசு குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் அவர்களுக்கு சுற்றிக் காண்பிக்கிறது. அவர்களும் பயணத்தை முடித்துவிட்டு சீனாவிற்கு நற்சான்றிதழ் வழங்குகிறார்கள்.

இத்தகைய அடக்குமுறைகளை ஏதேனும் ஒரு முஸ்லிம் அரசாங்கம் நிகழ்த்தியிருந்தால் இந்நேரம் உலகமே கொதித்து எழுந்திருக்கும். ஆனால் இங்கு பாதிக்கப்படுவது முஸ்லிம்கள் என்பதால் எந்த நாடும் வாய் திறக்கவில்லை, ஐக்கிய நாடுகள் சபையும் கண்டுகொள்ளவில்லை. தனது நாட்டின் கணிசமான குடிமக்களை நிரந்தரமாக கண்காணிப்பின் கீழ் வைத்து அவர்களின் மத, கலாசார மற்றும் மொழி உரிமைகளை மறுக்கும் வேறொரு நாடு உலகில் இப்போது இருக்கிறதா என்பது சந்தேகமே.

இத்தனை கெடுபிடிகள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உய்கூர் முஸ்லிம்கள் தங்கள் மார்க்கமான இஸ்லாத்தை கெட்டியாக பிடித்துள்ளனர் என்பதையும் பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்ட தவறவில்லை. இதுதான் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் சிறப்பியல்பு. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் தாங்கள் நேசிக்கும் இஸ்லாத்தை முஸ்லிம்கள் ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை. எதிரிகள் எத்தனை திட்டங்கள் போட்டாலும் இஸ்லாம் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி வாகை சூடும் வல்லமை கொண்டது. இந்த பாடத்தை ஏற்கெனவே பலரும் படித்துவிட்டார்கள். சீனா இப்போது இந்த பாடத்தை படித்துக் கொண்டிருக்கிறது.

-ரியாஸ்

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.