சுட்டுக்கொல்லப்பட்ட சிமி அமைப்பினரிடம் துப்பாக்கிகள் இல்லை: நேரில் பார்த்தவர்கள்

0

போபால் சிறையில் இருந்து தப்பிய சிமி அமைப்பை சேர்ந்தவர்களை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதை பல பேர் நேரில் பார்த்திருக்க அதில் எவரும் அந்த சிமி அமைப்பினர் கைகளில் ஆயுதங்கள் இருந்தது என்றோ அல்லது அவர்கள் காவல்துறையினரை நோக்கி சுட்டனர் என்றோ கூறவில்லை.

சிமி அமைப்பினர் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு கட்டுமான பகுதியின் காவலரான ராம் குமார் சோனி சம்பவ இடத்திற்கு முதலில் வந்த சிலரில் ஒருவர். இது குறித்து அவர் கூறுகையில், “சில காவலர்கள் எங்களிடம் வந்து 8 பேர் கொண்ட குழுவினரை குறித்து விசாரித்தனர். அதன் பிறகு சில கிராம மக்களிடம் இருந்து அவர்கள் குறித்து தகவல் கிடைக்கவே உடனடியாக அருகில் உள்ள காவல்துறையினரிடம் தெரிவிக்க தான் விரைந்தேன்” என்று கூறியுள்ளார்.
சிமி அமைப்பினரை சுடுவதற்கு முன் காவல்துறையினர் அவர்கள் இருந்த பகுதி நோக்கி அவர்கள் வாகனத்தால் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்றதாகவும் பின்னர் வாகனத்தில் இருந்து இறங்கி விரைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற போது சிமி அமைபினர் இருந்த பாறையை காவல்துறையினர் சுற்றி வளைத்திருந்ததாகவும் அவர்களால் எங்கும் தப்பிக்க இயலாத நிலையில் காவலர்களை நோக்கி கற்களை எரிந்ததாகவும் சோனி தெரிவித்துள்ளார்.

இதே போன்று பப்பு மீனா என்ற விவாசாயி இது குறித்து கூறுகையில், கொல்லப்பட்டவர்களில் சிலர் காவல்துறையினரை நோக்கி கைகளை அசைத்து சமிக்ஞ்சை செய்ததாகவும் சிலர் கற்களை எரிந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் அவர்களில் எவரும் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுடவில்லை என்றும் சுட்டுக் கொல்லப்பட்ட அவர்களின் உடல்கள் அருகிலும் துப்பாக்கிகள் எதுவும் காணப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அவர்களில் சிலர் தங்கள் கைகளை அசைத்து கொண்டிருந்தனர். சிலர் கற்களை வீசினர். அதன் பின்னர் காவல்துறையினர் எங்களை எங்களது பாதுகாப்பிற்காக அங்கிருந்து செல்லுமாறு கூறினர்.” என்று தெரிவித்துள்ளார்.

மனோஜ் மீனா என்பவர் சிமி அமைப்பினர் கொல்லப்பட்ட பகுதிக்கு கீழ் இருந்துள்ளார். “நான் எனது நண்பரின் விவசாய நிலத்தில் இருந்த போது சில காவலர்கள் என்னை அணுகி சிமி அமைப்பினர் இருந்த பாறைக்கு செல்ல வழி காட்டும்படி கேட்டுக்கொண்டனர். நாங்கள் அருகே செல்ல எங்களை நோக்கி கற்கள் வீசப்படவே எங்களை கீழே படுக்கும்படி காவல்துறையினர் கூறினர். பின்னர் காவல்துறையினர் அவர்களை நோக்கி சுடத்தொடங்கினர். ஆனால் எதிர்தரப்பில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை.” என்று கூறியுள்ளார்.

இந்த தாக்குதலை நேரில் பார்த்த பலரும் சிமி அமைப்பினர் தப்பித்துச் செல்ல எந்த ஒரு வழியும் இருக்கவில்லை என்றும் அவர்குளுக்கு ஒரு புறம் காவல்துறையும் மறுபுறம் 50 அடி பள்ளமும் இருந்தாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் மத்திய பிரதேஷ் முதல்வர் சிவராஜ் சவ்ஹான், இந்த என்கெளவுண்டர் விஷயத்தை எதிர்கட்சிகள் அரசியலாக்குகின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் கைதிகள் தப்பிக்கும் போது கழுத்தறுத்து கொல்லப்பட்டதாக கூறப்பட்ட காவலரின் குடும்பத்திற்கு ரூபாய் 15 லட்சத்தை அவர் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Comments are closed.