சுதந்திர போராட்டத்தின் முன்னோடி தீரன்  திப்பு சுல்தானின் மணிமண்டபத்தை தமிழக அரசு உடனே திறக்க வேண்டும். – பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை

0

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலக குழு கூட்டம் 29.10.2017 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் A.ஹாலித் முஹம்மது,செயலாளர்கள் A.முஹைதீன் அப்துல் காதர், A.முஹம்மது பயாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

 

தீர்மானம் 1 : சுதந்திர போராட்டத்தின் முன்னோடி தீரன் திப்பு சுல்தானின் மணிமண்டபத்தை தமிழக அரசு உடனே திறக்க வேண்டும்.

ஆங்கிலேய ஏகாதிபத்திய சக்திகளுக்கு சிம்மசொப்பனமாக நின்று தீரத்துடன் போர்புரிந்து போர்க்களத்திலேயே தன் இன்னுயிர் நீத்த தீரன் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலிக்கு திண்டுக்கல்லில் மணிமண்டபம் கட்டப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் சட்டசபையில் அறிவிப்பு செய்தார். அதை தொடர்ந்து திண்டுக்கல்லில் மணிமண்டபம் கட்டுவதற்க்கான வேலைகள் தொடங்கப்பட்டது. கட்டிடப்பணி நிறைவடைந்து பல மாதங்களாகியும் மணிமண்டபத்தை தமிழக அரசு இதுவரை திறந்து வைக்கவில்லை. திப்புவின் மணிமண்டப அறிவிப்புக்கு பின்பு அறிவிப்பு செய்யப்பட்ட சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை தற்போது தமிழக அரசு திறந்து வைத்துள்ளது. எனவே தேசத்தின் விடுதலை போரின் முன்னோடி தீரன் ஹைதர் அலி, திப்பு சுல்தானின் மணிமண்டபத்தை இனியும் காலம் தாழ்த்தாமல் வரும் நவம்பர் 10 திப்பு ஜெயந்தி அன்று திறந்து வைக்க வேண்டும் என தமிழக அரசை இந்த கூட்டம் கேட்டுக்கொள்கின்றது.

தீர்மானம் 2 : ரேசனில் வழங்கப்படும் சர்க்கரை விலையேற்றத்தை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.

மக்களின் அடிப்படை வாழ்வாதார தேவைகளை நிறைவு செய்வதற்காக ரேசன் மூலம் மானிய விலையில் அத்தியாவசிய உணவு பொருள்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது ஆளும் மத்திய அரசு உணவு பாதுகாப்பு சட்டம் என்று கூறிக்கொண்டு ரேசன் முறையினை இல்லாமலாக்கி கார்பரேட் பெருமுதலாளிகளின் வியாபார வளர்ச்சிக்கு உதவி செய்யும் செயல்திட்டத்தை தேசம் முழுவதும் செயல்படுத்தி வருகின்றது. மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் நடைமுறை படுத்தப்படாது, தற்போதைய நிலையிலேயே மானிய விலையில் பொருள்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் கூறினார். ஆனால் தற்போது ரேசன் முறையை அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொருள்களின் விலையை நூறு சதவிகிதம் அளவிற்கு தமிழக அரசு உயர்த்த துவங்கியுள்ளது. இதன் முதல்கட்டமாக சர்க்கரையின் விலையை தமிழக அரசு ஒருகிலோ ரூ.13.50 லிருந்து ரூ.25 ஆக உயர்த்தியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த விலையேற்றத்தை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும், ரேசன் முறையை ஒழித்துக் கட்டி கார்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளை இலாபம் அடைய செய்யும் மத்திய அரசின் செயல் திட்டத்திற்கு தமிழக அரசு இடம் கொடுக்கக் கூடாது என தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றோம்.

 

தீர்மானம் 3 : மாநில செயலாளர் S.அஹமது நவவி அவர்கள் பொறுப்பிலிருந்து விடுவிப்பு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில செயலாளராக பணிசெய்து வந்த S.அஹமது நவவி அவர்கள் கூடுதல் பணிச்சுமை காரணமாக மாநில செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

 

தீர்மானம் 4 : மழை வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் நிரந்தர ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்!

கடந்த வருடங்களில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் சொல்லெனாத் துயரங்களை அனுபவித்த நிகழ்வை யாரும் மறந்து விட முடியாது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தமிழக அரசு பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. மக்களின் கண்துடைப்பிற்காக ஒருசில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதே தவிர நிரந்தரமாக வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைககளை தமிழக அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் இன்னும் ஆக்கிரமிப்பிலேயே உள்ளது. இந்த இடங்களில் வீடுகள்,அடுக்கு மாடி குடியிருப்புகள் தொடர்ந்து கட்டப்பட்டு வருகின்றது. மழைநீரை பயனுள்ள வழிகளில் பயன்படுத்தும் புதிய நீர் ஆதார செயல்திட்டங்கள் செயல்படுத்துவதிலும் பெரும் தொய்வு உள்ளது. தண்ணீர் வடிந்து செல்வதற்க்கான பாதைகளும் தூர்வாரப்பட வேண்டும். தமிழக அரசு மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை காவு வாங்கும் வெள்ளப்பெருக்கு குறித்து மழைக்காலங்களில் மட்டும் சிந்திக்காமல் நிரந்தரமான ஏற்பாடுகளை செய்ய முன் வர வேண்டும் என தமிழக அரசை இந்த கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.

 

இப்படிக்கு

ஹாலித் முஹம்மது,

மாநில பொதுச்செயலாளர்,

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,

தமிழ்நாடு.

Comments are closed.