சுவாதி கொலையை மத மோதலாக மாற்ற முயன்றவர் மீது நடவடிக்கை: காவல்துறை உறுதி

0

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டதும் அவரை கொலை செய்தவர் பிலால் மாலிக் என்ற ஒரு இஸ்லாமியர் என்று சமூக வலைதளங்களில் பரவலாக ஒருகுழு விஷமா கருத்துக்களை பரப்பியது. இதில் பிரபல நகைச்சுவை நடிகர் Y.G. மகேந்திரன், எஸ்.வி.சேகர் போன்ற பல பிரபலங்களும் அடக்கம்.

அதே போன்று ட்விட்டரில் இந்த கொலையை செய்தவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று ராம்கி என்ற நபர் செய்திகளை பரப்பி வந்தார். இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் ராம்குமாரை கைது செய்தும் அவர் தனது விஷம பதிவை நீக்கவில்லை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக இவர் பிரதமர் நரேந்திர மோடியால் ட்விட்டரில் பின்தொடரப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ட்விட்டர் பக்கத்தில் இவர் தன்னை ஒரு பா.ஜ.க தொண்டர் என்றும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு கொலையை வைத்து சமூக பிளவை ஏற்படுத்த எத்தனித்த இவரை பொதுமக்கள் தொடங்கி பல தலைவர்கள் வரை கடுமையாக கண்டித்துள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால் “இது மிகவும் அதிர்ச்சியளிக்கும் செய்தி” என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சஞ்சய் ஜா ராம்கி போன்ற நபர்கள் மீது வெறுப்பை பரப்புவதற்காக ட்விட்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் வெறுமனே இவரது கணக்கை முடக்குவதோடு நில்லாமல் இவர் மேல் காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து காவல்துறை துணை கமிஷனர் கே.ஷங்கர் கருத்து தெரிவிக்கையில், தங்களுக்கு ராம்கி குறித்து தகவல் கொடுத்தமைக்கு நன்றி என்றும், மேலும் இத்துனை நாட்கள் சுவாதியின் கொலைகாரனை தேடுவதில் மும்முரம் காட்டி வந்ததினால் தங்களால் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், இவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  கூறியுள்ளார்.

Comments are closed.