செய்தித் துளிகள்

0

கருத்து சுதந்திரம்!

கேரளாவின் ஏசியாநெட் மற்றும் மீடியா ஒன் சேனல்களுக்கு 48 மணிநேர தடையை, மார்ச் 6 மாலை 7.30 மணி முதல், மத்திய தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் விதித்தது. தடைக்கு அரசாங்கம் கூறிய காரணங்கள் வினோதமானவை… டெல்லி வன்முறையில் வழிபாட்டுதலங்கள் மீதான தாக்குதல்களை ஒளிபரப்பி ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சாதகமாக நடந்து கொண்டது, டெல்லி காவல்துறை மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றை குற்றம் சாட்டியது போன்ற காரணங்களுக்காக தடை விதித்தது அமைச்சகம். மத்திய அரசின் இந்த போக்கை பலரும் கண்டித்ததை தொடர்ந்து தனது அறிவிப்பை அரசாங்கம் சில மணிநேரங்களில் விலக்கிக் கொண்டது. கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் எமர்ஜென்சியை அரசாங்கம் அவ்வப்போது நம் கண் முன் காட்டுகிறது.

டெல்லி வன்முறைக்கு ஈரான் கண்டனம்

டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஷரீஃப் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அனைத்து இந்தியர்களின் நலனையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வன்முறை சம்பவங்கள் தொடர அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து துருக்கி, மலேசியா, இந்தோனேஸியா நாடுகள் தங்களின் அதிருப்தியையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ள நிலையில், இந்தியாவின் நட்பு நாடாக பார்க்கப்படும் ஈரானும் இந்த கருத்தை தெரிவித்திருப்பது வெளியுறவில் இந்திய அரசு சந்தித்து வரும் தோல்விகளை பறைசாற்றுவதாக உள்ளது. ஈரான் அமைச்சரின் கருத்திற்கு டெல்லியில் உள்ள ஈரான் தூதரை அழைத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்தது.

ஆந்திராவில் என்.பி.ஆர். நிறுத்தம்

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் படிவத்தை மத்திய அரசு மாற்றியமைக்கும் வரை, என்.பி.ஆர். பணிகளை நிறுத்தி வைப்பதாக ஆந்திரா அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்களிடையே எழுந்துள்ள அச்சங்கள் களையப்பட வேண்டும் என்றும் அம்மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில் வலுக்கட்டாயமாக இதனை நிறைவேற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கம், கேரளா, பீகார், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் அரசுகள் என்.பி.ஆர்.யை நடைமுறைபடுத்த மாட்டோம் என்று ஏற்கெனவே அறிவித்துள்ளன. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் தமிழ்நாடு அரசுகள் இன்னும் முடிவெடுக்கவில்லை.

நீதியின் விலை!

டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு பா.ஜ.க. தலைவர்களின் வெறுப்பு பேச்சுகள் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த பேச்சுகளை நீதிமன்றத்திலேயே போட்டுக் காட்டிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர், சம்பந்தப்பட்ட பா.ஜ.க. தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று பிப்ரவரி 26 அன்று காவல்துறைக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை வழங்கிய அன்றிரவே பஞ்சாப் உயர்நீதிமன்றத்திற்கு முரளிதர் மாற்றப்பட்டார். இந்த வழக்கை பின்னர் விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.பட்டேல் மற்றும் நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை ஏப்ரல் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் பெயரில் மார்ச் 6 அன்று வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதே நீதிபதிகள் அடங்கிய அமர்வுதான் டிசம்பர் 2019இல் டெல்லி ஜாமிஆ மில்லியா மாணவர்களை கைது செய்வதிலிருந்து இடைக்கால பாதுகாப்பை வழங்க மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்த வழக்கை தாக்கல் செய்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஷ் மந்தர், வன்முறையை தூண்டும் பேச்சுகளை பேசியதாகவும் நீதிமன்றத்தை அவமதித்ததாகவும் கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி காவல்துறை முனைப்பாக உள்ளது. நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லை என்று அவர் கூறிய கருத்துகளுக்காக அவரின் வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

சி.ஏ.ஏ. எதிர்ப்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்

மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், இச்சட்டத்திற்கு எதிரான வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஐ. நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பேச்சலட் ஜெரியா சார்பாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விவகாரத்தில் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதில் உச்சநீதி மன்றத்திற்கு உதவி செய்ய மனித உரிமைகள் ஆணையம் விரும்புகிறது. எனவே இந்த வழக்கில் தங்களை அமிகஸ் கியூரேயாக (நீதிமன்றத்திற்கு உதவி புரிபவர்) இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நரோடா காம் வழக்கின்

நீதிபதி மாற்றம்

2002இல் குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான ஒன்பது வழக்குகளை சிறப்பு விசாரணை குழுவிடம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்தது. இந்த வழக்குகளில் ஒன்றான நரோடா காம் வழக்கின் விசாரணை தொடங்கி 11 வருடங்கள் கழிந்து இறுதிக் கட்டத்தில் இருந்த நிலையில் நீதிபதி எம்.கே.தவே, குஜராத் உயர்நீதிமன்றத்தால் மாற்றப்பட்டுள்ளார். வழக்கின் விசாரணையை எஸ்.கே.பக்க்ஷி இனி மேற்கொள்ளவுள்ள நிலையில் வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை மீண்டும் எடுத்து வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாற்றப்பட்ட அன்று, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர் மாயாபென் கோட்னானியின் வாதங்களை நீதிபதி கேட்டுக் கொண்டிருந்தார்.

2008இல் நரோடா பாட்டியா வழக்கில் கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனையை விசாரணை நீதிமன்றம் விதித்தது. ஆனால் 2018இல் குஜராத் உயர்நீதிமன்றம் அவரை விடுவித்தது.

Comments are closed.