சேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை

2

சேலம் கோமாளியூரை சேர்ந்தவர் சையத் என்ற சையத் இம்தியாஸ். இவர் கோமாளியூர் பகுதியில் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவருக்கும் சட்டூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பெண்ணின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொங்கலுக்கு முன்பு அந்த பெண்ணின் சித்தப்பா சையத்தை கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதனை சையத் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனை அடுத்து பொங்கல் முடிந்த மறுநாள் அவர் மீண்டும் சையத்தை அவர் பணி செய்துவரும் ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்று எச்சரித்து கொலைமிரட்டலும் விடுத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனையும் சையத் கண்டுகொள்ளாமல் இருக்க 20ஆம் தேதி இரவு சையத் உறங்கச்செல்லும் முன் சையதிற்கு மர்ம அழைப்பு ஒன்று வந்திருக்கிறது.

அதில் நாங்கள் உன்னை கொலை செய்ய வந்திருகின்றோம் என்றும் தைரியம் இருந்தால் வீட்டை விட்டு வெளியே வா என்றும் மர்ம அழைப்பை விடுத்தவர்கள் பேசியதாக தெரிகிறது. வழக்கம் போல இதனையும் பெரிதாக எடுத்துகொல்லாத சையத் அழைப்பை விடுத்தவர்களை பார்க்க வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

சையதின் வீட்டின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகே வைத்து அவரை வழிமறித்த கும்பல் அவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளது. இதில் சையதின் முதுகு பகுதி மற்றும் கண்ணுக்கு மேல் ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடந்த சம்பவத்தை விபத்துப் போல் காட்ட அவரது உடலை தண்டவாளத்தில் வீசிவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடிவிட்டனர்.

தண்டவாளத்தில் வீசப்பட்ட உடல் தண்டவாளத்தின் நடுவே கிடந்ததால் ரயில் போக்குவரத்து அவரது உடலை சிதைக்கவில்லை. லேசான சிராய்ப்புகள் மட்டும் ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு அதிகாலை சையத் வீட்டிற்கு பால் கொடுப்பவர் சையதின் சடலத்தை கண்டு அவர் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். உடனே அங்கு விரைந்த சையதின் பெற்றோர்கள் அவரது உடலை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

இந்த கொலையை அடுத்து அப்பகுதி பரபரப்பானது.  பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, த.மு.மு.க, எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட கூட்டமைப்பு இந்த கொலைக் குற்றவாளியை கைது செய்யவேண்டும் என்று புகாரளித்துள்ளனர். காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. அன்று மாலை அவரின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சுமார் 4:30 மணியளவில் ரயில்வே காவல் ஆய்வாளர் லாரன்ஸின் அழுத்தத்தின் பேரில் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது.

போஸ்ட்மார்டம் அறிக்கையில் இது விபத்து என்று அறிவிக்க அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர். தெளிவாக கொலை என்று தெரியும் வழக்கை விபத்து என்று மூடி மறைக்க முயல்கிறார்கள் என்று அப்பகுதி மக்கள் தெரிவிகின்றனர். பொதுவாக 4 மணியோடு அனைத்து போஸ்ட்மார்டங்களும் நிறுத்தப்படும் நிலையில் இந்த போஸ்ட்மார்ட்டம் அவசர அவசரமாக 4:30 மணிக்கு நடத்தப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருகின்றனர்.

இதனை அடுத்து சையதின் உடலை மறு போஸ்ட்மார்டம் செய்ய வேண்டும், அதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும், சையத்தை கொலை செய்தவர்களை கைது செய்யவேண்டும் என்றும் பொதுமக்களும் இயக்கங்களின் கூட்டமைப்பும் வலியுறித்தி வருகிறது. மேலும் இது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியரை சந்திக்கவும் முடிவு செய்துள்ளனர்.
பொதுமக்களின் இந்த கோரிக்கையை நிராகரிக்கப்படும் பட்சத்தில் மாபெரும் போராட்டம் ஒன்றையும் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.