சேஷசமுத்திரம் : பறிக்கப்பட்ட தலித் மக்களின் சுதந்திரம்

0

 – அஹமது சலீம்

“ஆயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறந்து போவதே சாலச்சிறந்தது” என்ற அம்பேத்கரின் வரிகள், இன்றைய காலக்கட்டத்திலும் பொருந்தும் என்பதற்கு நல்லதொரு உதாரணம்தான் விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கிராமம்.

தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஒற்றை வார்த்தையைக் கொண்டு, அதிகார வர்க்கங்களும், பெரும்பான்மை பலத்துடன் வசிக்கக்கூடிய மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களின் மீது ஏவும் அடக்குமுறைகளும் தாக்குதல்களும் இன்றும் இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக, ஜாதி என்ற பெயரில் அவர்களுக்கு நடக்கும் பாரபட்சங்களை துடைத்தெறிவதே முதல் சமூகப்பணி என்று தன்னையே அர்ப்பணித்து, தமிழக மண்ணில் திராவிடத்தை நிலைபெறச் செய்த பெரியாரின் மண்ணில், தலித் மக்களின் உரிமையும், அவர்களின் சுதந்திரமும் பறிக்கப்படுவது என்பது, அதிகார வர்க்கங்களின் செயல்பாடுகளுக்கு எதிராக, போராடுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது.

இந்திய தேசத்தின் 69வது சுதந்திர தினத்தை ஆகஸ்டு 15 அன்று நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடி கொண்டிருந்தபோது, விழுப்புரம் மாவட்ட சேஷசமுத்திரம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது என்றே சொல்லலாம்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமம்தான் சேஷசமுத்திரம். இந்தக் கிராமத்தில் தலித்துகள் ஒரு பகுதியாகவும், வன்னியர்கள் ஒரு பகுதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். தற்போதைய, பிரச்சனை தேர் இழுப்பது தொடர்பாகவே மூண்டுள்ளது. ஏற்கெனவே, வன்னியர் சமூகத்தினர் தேர் இழுக்கும்போது, தலித் மக்களை புறக்கணித்ததால் பிரச்சனைகள் எழவே, மாவட்ட நிர்வாகம் தேர் இழுப்பதை தடை செய்து தேரையும் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தேர் இழுப்பது ஒரு பிரச்சனையாக பார்க்கப்பட்டாலும், தலித் மக்கள் மீது பாரபட்சம் காட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. கோயிலில் கும்பிடுவது, கோயில் கொடைகளில் பங்கேற்பது என எந்த அனுமதியையும் அங்குள்ள ஜாதிய பிரிவுகள் தலித்களுக்கு வழங்கவில்லை. சுருக்கமாக கூறினால், கடவுளை வழிபடும் உரிமை தலித்களுக்கு மறுக்கப்பட்டது.

இதனால் தலித் மக்கள் தாங்களாகவே தங்களுடைய கோயில் திருவிழாவை தேரோட்டத்துடன் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர்.

2011ம் ஆண்டே தலித் மக்கள் தேரோட்டம் நடத்துவதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால், இரு சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு அரசு அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் 2012ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து தலைவருக்கு மூன்று வன்னியர்கள் போட்டியிட்டனர். இதில், தே.மு.தி.க.வைச் சேர்ந்த சுப்ரமணியம் தலித் மக்களிடம் “நீங்கள் எனக்கு மொத்தமாக வாக்களித்தால், தேர் இழுப்பதற்கான வழிவகைகளை செய்து தருகின்றேன்” என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற சுப்ரமணியன் நன்கொடையாக ஒரு இலட்சமும் தலித் மக்கள் ஒரு இலட்சமும் கொடுத்து தேர் செய்தனர். ஆனால், தார் சாலை வழியாக தேர் வரக்கூடாது என்று வன்னியர்கள் கூற, தலித்கள் எதிர் கருத்து தெரிவிக்க பிரச்சனை வலுத்தது. தொடர்ந்து நடைபெற்ற 22 சமாதான பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாததால் வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இதனால் 2012ம் ஆண்டு, தேரை இழுப்பதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும், இதற்கு முழுப் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து 55 தலித் பெண்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இவ்வருடம் தேரோட்டம் நடத்துவதற்கான கோரிக்கையை வைத்தனர். ஆகஸ்ட் 14ம் தேதியன்று நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் இரு சமூகங்களும் ஒத்து வரவே, அரசும் தேர் இழுப்பதற்காக அனுமதி மற்றும் பாதுகாப்பை வழங்குவதாக உறுதியளித்தது.

ஆகஸ்ட் 15ம் தேதி மாலை 5 மணிக்கு தேர் இழுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னிய சமூகத்தை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் திடீரென்று ஈடுபட்டனர். இரு தரப்பு மக்களும் ஒன்று திரளவே குறைவான எண்ணிக்கையில் இருந்த காவல்துறையினரால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதற்கிடையில், டிரான்ஸ்பார்மரை யாரோ சிலர் வெடிக்கச் செய்துள்ளனர். மின்சாரம் தடைபடவே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. காவல்துறையினர் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.  தடியடி, வானை நோக்கி துப்பாக்கி சூடு ஆகியவை நடத்தப்பட்டபோதும் தலித்களுக்கு ஏற்பட்ட பொருளாதார சேதத்தை தடுக்க முடியவில்லை.

ஐந்து வீடுகள் முழுமையாகவும், நான்கு வீடுகளின் ஒரு பகுதியும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த உணவு, உடை, பாத்திரம், பணம், மாணவர்கள் சான்றிதழ், அரசு வழங்கியுள்ள குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சõம்பலாயின.

சேஷ சமுத்திரம் கிராமத்திற்குள் நாம் செல்ல முயன்றபோது 144 தடை உத்தரவை காரணம் காட்டி யாரையும் அனுமதிக்க முடியாதென்று காவல்துறையினர் கூறிவிட்டனர். பாதிக்கப்பட்ட தலித் மக்கள் பக்கத்து ஊரான கள்ளக்குறிச்சியில் தங்கி இருந்தனர். அவர்களில் ஒருவர் கூறும்போது, “தேர் இழுப்பதற்கு இரு சமூகத்தவரும் சம்மதம் தெரிவித்துதான் காவல்துறையினரும் அரசும் அனுமதி கொடுத்தார்கள். ஆனால், சம்பவத்தன்று திட்ட மிட்டு சாலை மறியலில் ஈடுபட்டு எங்களையும், எங்களுடைய வீடுகளையும் தாக்க ஆரம்பித்து விட்டார்கள். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் புதுமுகங்களாக இருந்தனர். முழுமையான ஏற்பாடுகள் இல்லாமல் இந்த தாக்குதலை நடத்தியிருக்க முடியாது. எங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளுக்கு அரசு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

வன்னிய சமூகத்தை சேர்ந்தவரான அங்குள்ள வார்டு உறுப்பினர் மணிகண்டனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, “காவல்துறையினர்தான் இதற்கு முழு காரணம். பிரச்சனைகள் இருக்கும்பொழுது தேர் இழுப்பதற்கு அவர்களுக்கு மட்டும் அனுமதி கொடுப்பது தவறு” என்றார்.

பஞ்சாயத்து தலைவர் சுப்ரமணியன் தலைமறைவாக உள்ளார். ஊரில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் வீடு திரும்பாமல், அருகில் உள்ள ஊர்களில் உறவினர்களின் வீடுகளில் இருக்கின்றனர். பா.ம.க. தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவல்துறை அதிகாரிகள் சுமித்சரண், நரேந்திரன் நாயர் உள்ளிட்ட அதிகாரிகள்தான் இந்த அடக்குமுறைகளுக்கு காரணமானவர்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

சேஷசமுத்திரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைப்பாளர் திருவருளிடம் பேசியபோது, “இந்த கலவரத்திற்கு காரணம் அன்புமணி ராமதாஸ்தான். ஆகஸ்டு 15 அன்று காலையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு இங்குள்ள வன்னிய கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சென்றனர். பொதுக்கூட்டம் முடிந்த பிறகு தனியாக ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில்தான், கலவரம் செய்வது தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களை பிளவுபடுத்தும் அரசியல் கட்சிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

சம்பவத்தன்று அந்தப் பகுதியில் நின்று புகைப்படங்களை சேகரித்த திராவிடர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் நாவப்பிள்ளையை சந்தித்தோம். அவர் கூறும்போது, “இந்தப் பிரச்சனை என்பது தேர் இழுப்பது தொடர்பான பிரச்சனையாக இருந்தாலும், தலித் மக்களுக்கு எதிரான  ஜாதிய கட்டமைப்புகள்தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. குழந்தைகள் மத்தியிலேயே ஜாதிய கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றனர். இதனால், வளர்ந்து வரும்பொழுது அவர்கள் தலித் மக்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் சூழல் ஏற்படும்” என்றார்.

கலவரம் தொடர்பாக தகவல் அறிந்து அங்கு சென்ற எஸ்.பி. நரேந்திரன் நாயரின் வாகனத்தின் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

தலித்களின் குடிசைகள் எரிக்கப்பட்டது, கற்கள் மற்றும் பெட்ரோல் எரிகுண்டுகள் கொண்டு தாக்கியது தொடர்பாக கு.எண் 329/2015 பிரிவுகள் 147, 148, 341, 323, 324, 307, 506(டிடி), 436 மற்றும் வன்கொடுமை தடுப்பு அவசரச் சட்டம் 3 (டிடி) (தி)(ச்) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 11 பெண்கள் உட்பட 88 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆதிக்கச் சாதியினரின் இத்தாக்குதலில் எட்டு போலீசாரும், கிராம உதவியாளரும் காயமடைந்தது தொடர்பாக ராஜன்பாபு என்கிற காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இவ்வழக்கில் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை. இரு வழக்கிலும் மற்றும் பலர் என சுமார் 500 பேர் பெயர் குறிப்பிடாமல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலை முன்நின்று நடத்தியதாக தலித் மக்கள் குற்றம்சõட்டக்கூடிய தற்போதைய பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன் (தே.மு.தி.க), துணைத்தலைவர் வேல்முருகன் (தே.மு.தி.க), முன்னாள் தலைவர் பூ.சின்னதுரை (தி.மு.க), ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை (அதிமுக) உள்ளிட்ட எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

காயமடைந்த காவல்துறையினர் எட்டு பேருக்கும் தலா 50 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளை முழுமையாக இழந்த ஐந்து குடும்பத்திற்கு தலா ஐந்து ஆயிரம் ரூபாயும், பாதி எரிந்த இரண்டு குடும்பத்திற்கு தலா 2,500 ரூபாயும், ஏழு குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி, வேட்டி, புடவைகள் தற்காலிக நிவாரணமாக அரசு வழங்கியுள்ளது.

இது பாதிப்பிற்கேற்ற போதுமான நிவாரணமில்லை என்பது வெளிப்படையாகும். எனவே, வன்கொடுமையால் பாதிப்புற்ற தலித் மக்களுக்கு சட்டத்தின்படி உரிய நிவாரண உதவிகள் உடனடியாக அளிக்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை.

கலவரத்திற்கு காரணமானவர்கள் மீதும், கலவரத்தை தூண்டியவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அனுமதி கொடுத்து நடைபெறக்கூடிய இதுபோன்ற நிகழ்வுகளில் வன்முறையை ஏற்படுத்தியக்கூடியவர்களுக்கு, அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கை தகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாகும். சாதி மோதல்கள் தமிழகத்தில் நிரந்தரமாகிவிடக்கூடாது என்பதுதான் மக்களின் விருப்பம்.

(செப்டம்பர் 2015 இதழில் வெளியான நேரடி ரிப்போர்ட்)

Comments are closed.