சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை

0

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்க தவறியதாக நீதிபதி குமாரசாமி தெரிவித்தார்.
ஏழத்தாழ 17 வருடங்கள் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நால்வருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டு அவர் முதல்வர் பதவியையும் இழந்தார். ஒரு மாதம் கழித்து இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடகா உயர்நீதி மன்றத்தின் சிறப்பு அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. அந்த தீர்ப்புதான் இன்று வழங்கப்பட்டது. ஜெயலலிதா உள்ளிட்டோருக்கான சிறை தண்டனையை ரத்து செய்ததுடன் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையையும் நீதிபதி குமாரசாமி ரத்து செய்தார்.
இந்த தீர்ப்பு குறித்து தமிழக எதிர்கட்சிகள் மாற்று கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜெயலலிதாவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.