சொராபுதீன் போலி என்கெளவுண்டர்: ஊடகங்களின் வாயை அடைத்து சாட்சியங்கள் மாற்றம்?

0

கடந்த 2005 ஆம் ஆண்டு சொராபுதீன் ஷேக், அவரது மனைவி கெளசர்பீ மற்றும் துளசிதாஸ் பிரஜ்பாதி ஆகியோர் தீவிரவாதிகள் என்று கூறப்பட்டு போலி என்கெளவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு இவ்வழக்கின் விசாரணை எவ்விதத்திலும் பாதிப்படைய கூடாது என்பதால் குஜராத்தில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.

2014 பாஜக மத்தியில் ஆட்சி அமைத்ததும் பாஜக தலைவர் அமித்ஷா இவ்வழக்கின் விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதன் பின்னணியில் தான் நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் தேதி இவ்வழக்கின் முதல் சாட்சியை சிபிஐ விசாரணை செய்ய தொடங்க இருகையில் இவ்வழக்கு தொடர்பான தகவல்களை ஊடங்கங்கள் வெளியிடக்கூடாது என்று விசாரானை நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்த தடை தற்போது பாம்பே உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இடைப்பட்ட இந்த காலத்தில் மட்டும் மொத்தமுள்ள 41 சாட்சியங்களில் 27  பேர் தங்களது வாக்குமூலங்களை மாற்றிக் கூறியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதில் சொராபுதீன் மற்றும் அவரது மனைவி கெளசர்பீ அவர்கள் சென்ற பேருந்தில் இருந்து அழைத்துச் செல்லப்படுவதை நேரில் பார்த்ததாக கூறியவர்களும் சொராபுதீனை பேருந்தில் இருந்து அழைத்துச் சென்று போலி என்கெளவுண்டரில் படுகொலை செய்த காவல்துறை படையில் இருந்த காவலர்களும் அடக்கம்.

சொராபுதீன், கெளசர்பீ மற்றும் பிரஜ்பாதி பயணம் செய்த பேருந்தில் பயணம் செய்தவர்கள், பேருந்து ஓட்டுனர், நடத்துனர், அவர்களுக்கு பயணச்சீட்டு வழங்கியவர், ஆகியோர், தற்போது குறிப்பிட்ட அந்த தேதியில் சொராபுதீன் ஷேக்கை தாங்கள் பாக்கவே இல்லை என்று கூறியுள்ளனர். காவல்துறையினரோ இந்த போலி என்கெளவுண்டரை செய்த சக காவலர்கள் யாரென்று தங்கள் நினைவில் இல்லை என்று கூறியுள்ளனர்.

முன்னதாக இவர்கள் துளசிதாஸ் பிரஜ்பாதி, சொராபுதீன் ஷேக் மற்றும் அவரது மனைவி ஆகியோர் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி நள்ளிரவு 1:30 மணியளவில் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டனர் என்றும் தங்கள் பேருந்தை வழிமறித்து நிறுத்திய குவாலிஸில் இருந்து இறங்கிய மூன்று பேர், இரண்டு ஆண்கள் மற்றும் புர்காவில் உள்ள ஒரு பெண்ணை பேருந்தில் இருந்து கடத்திச் சென்றனர் என்றும் அந்த மூவரில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்தார் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.