சொராபுதீன் ஷேக் போலி என்கெளவுண்டர் வழக்கு நிகழ்வுகளை ஊடகங்கள் வெளியிட தடையில்லை: பாம்பே உயர் நீதிமன்றம்

0

போலி என்கெளவுண்டரில் கொலை செய்யப்பட்ட சொராபுதீன் ஷேக் கொலை வழக்கு விசாரணை தொடர்பான விவரங்கள் எதனையும் பத்திரிகைகள் வெளியிடக்கூடாது என்று விசாரணை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த வேலையில் விசாரணை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்து பாம்பே உயர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

இப்படியான ஒரு உத்தரவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்ததை நீதிபதி ரேவதி மொஹிதே தேரே வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் இப்படியான ஒரு உத்தரவை உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமுமே பிறப்பிக்க முடியும் என்றும் அதுவும் மிகவும் அரிதான வழக்குகளுக்குகளில் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்திற்கு மட்டுமே இது பொருந்தும் என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சில பத்திரிகையாளர்கள் பாம்பே உயர் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் வழக்கு தொடர்ந்ததை அடுத்து தற்போது இந்த உத்தரவை பாம்பே உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. தினசரி பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சி சானல்களில் இருந்து ஒன்பது பத்திரிகையாளர்கள் விசாரணை நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும் பத்திரிகையாளர்கள் தங்களது கடமையை செய்ய இது மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமையும் என்றும் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.

கடந்த நவம்பர் 29 ஆம் தேதி இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், இவ்வழக்கு தொடர்பான விபரங்களை பத்திரிகைகள் வெளியிடுவதற்கு தடை வித்திக்கக் கோரி விண்ணப்பித்திருந்தனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு சொராபுதீன் ஷேக், அவரது மனைவி கெளசர் பீ மற்றும் துளசிதாஸ் பிரஜ்பாதி ஆகியோர் போலி என்கெளவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு இவ்வழக்கின் விசாரணை மும்பைக்கு மாற்றப்பட்டது.

Comments are closed.