சொராபுதீன் ஷேக் வழக்கில் இருந்து அமித்ஷா விடுதலை: தொடர்ந்த மரணங்களும் அதிகரிக்கும் சந்தேகங்களும்

0

சொராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கில் இருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்டதை சுற்றி பல மர்ம மரணங்களும் அந்த மரணங்களை சுற்றி பல சந்தேகங்களும் சூழ்ந்துள்ளன. இந்த வழக்கு தொடர்பாக மர்மான முறையில் இறந்தவர் நீதிபதி லோயா மட்டுமில்லை என்றும் நீதிபதி லோயாவின் நம்பிக்கைக்குறிய ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரும் மற்றுமொரு வழக்கறிஞரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தற்போது உயருடன் உள்ள ஒரே சாட்சியான வழக்கறிஞர் உய்கேவை கொலை செய்யும் முயற்சிகளும் நடைபெற்றுள்ளது. இவை அனைத்தும் சுதந்திரமான சார்பற்ற விசாரணை நடத்த வேண்டும் என்பதற்கான காரணங்களாக உள்ளன என்று காங்கிரஸ் தலைவர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித், விவேக் தன்ஹா மற்றும் ராஜ்தீப் சுர்ஜெவாலா ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வழக்கின் விசாரணை NIA மற்றும் CBI ஆகிய நிறுவனங்களிடம் வழங்கப்படக் கூடாது என்றும் நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பாம்பே உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மொஹித் ஷா வின் கீழ் பாம்பே உயர்நீதிமன்றத்தில் பதிவாளராக பணியாற்றிய நீதிபதி லோயா, சொராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி வழக்கத்திற்கு மாறாக புனேவிற்கு மாற்றப்பட்டதும் அவ்வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டார்.

இது குறித்து நேஷனல் ஹெரால்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், 2014 அக்டோபர் மாதம் இரண்டாவது வாரம் நீதிபதி லோயா, வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் கந்தல்கர் மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பிரகாஷ் தொம்ப்ரே ஆகியோர் மூலமாக வழக்கறிஞர் சதீஷ் உய்கே வை அணுகியுள்ளார். அத்துடன் வழக்கறிஞர் உய்கே, வழக்கறிஞர் கந்தல்கர் மற்றும் நீதிபதி தொம்ப்ரே ஆகியோர் உடனான வீடியோ உரையாடல் ஒன்றின் போது நீதிபதி லோயா, அப்போதைய தலைமை நீதிபதி மொஹித் ஷா பெயரை மட்டுமல்லாது நீதிபதி BR.காவாய், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் நாக்பூரை சேர்ந்த சுபன்ஷு ஜோஷி ஆகியோர் தன்னை இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவான உத்தரவை பிறப்பிக்குமாறு வற்புறுத்துவதாக கூறியுள்ளார்.

மேலும் தன்னிடம் தான் பிரப்பிக்கவேண்டிய உத்தரவின் நகல் ஒன்றும் கொடுக்கப்பட்டதாக நீதிபதி லோயா இவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த உத்தரவின் நகல் ஒன்றை ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தொம்ப்ரேவிற்கு நீதிபதி லோயா அனுப்பியுள்ளார்.

நீதிபதி லோயாவின் மர்ம மரணத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக நீதிபதி தொம்ப்ரே மற்றும் வழக்கறிஞர் உய்கே இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களிடம் ஆலோசிக்க புது டில்லி சென்றுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுக இது போதுமான ஆதாரம் அல்ல என்று அவர்கள் கருதியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உய்கே மற்றும் நீதிபதி  தொம்ப்ரே நவம்பர் 9 அன்று நாக்பூர் திரும்பியுள்ளனர்.

இதன் பின்னர் நீதிபதி லோயா நவம்பர் 30 ஆம் தேதி சக நீதிபதி ஒருவரின் மகள் திருமணத்திற்கு வருமாறு அவரது விருபத்திற்கு மாறாக வற்புறுத்தப்பட்டுள்ளார். திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மறுநாள் காலை அவர் மாரடைப்பில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் வழக்கறிஞர் கந்தல்கர் தனக்கு நீதிபதி காவாய் மற்றும் வழக்கறிஞர் கேட்கி ஜோஷி ஆகியோரிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வருவதாக வழக்கறிஞர் உய்கேவிடம் கூறியுள்ளார். 2015 நவம்பர் 29 ஆம் தேதி அவரது உடல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து கிடைக்கப்பட்டது. இவர் அவ்வளாகத்தின் எட்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்பட்டுள்ளது. நவம்பர் 28 விடுமுறை நாள் என்பதால் அவரது உடல் இரண்டு நாட்கள் கழித்தே கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி தொம்ப்ரேவும் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் தனக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தை நீதிபதி காவாய் நிறுத்திவிடுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார். பின்னர் 2016 மே மாதம் 16  ஆம் தேதி நாக்பூரில் இருந்து பெங்களூர் செல்லும் வழியில் ஹைதராபாத்தில் வைத்து மர்மான முறையில் அவரும் உயிரிழந்தார். அவர் ரயிலின் மேல் படுக்கையில் இருந்து கீழே விழுந்து முதுகுத் தண்டு உடைந்து மரணித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் சதீஷ் உய்கேவிற்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 2016 ஜூன் 8 ஆம் தேதி அவரது அலுவலக கூரையின் மீது 5000 கிலோ எடையுள்ள இரும்பு பொருட்கள் விழுந்து அவரது அலுவகத்தை முழுமையாக சேதப்படுத்தியது. இந்த சம்பவம் நிகழ்வதற்கு சில நிமிடங்கள் முன்பு வழக்கறிஞர் உய்கே அவரது அலுவலகத்தை விட்டு வெளியேறியதால் அவர் உயிர் பிழைத்தார். இது தொடர்பாக நாக்பூரில் புகாரளிக்கப்பட்டும் இது வரை முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை, எந்த ஒரு விசாரணையும் இது தொடர்பாக நடத்தப்படவில்லை. இத்தகைய சந்தேகத்திற்கு இடமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் சில கேள்விகளை முன் வைத்துள்ளனர். அவை,

2014  நவம்பர் 24ஆம் தேதியில் இருந்து நீதிபதி லோயாவிற்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு ஏன் விலக்கப்பட்டது? நாக்பூரில் ஏன் நீதிபதி லோயாவிற்கு எந்த ஒரு பாதுகாப்பும் வழங்கப்படவில்லை? மும்பையில் இருந்து நாக்பூர் சென்ற நீதிபதி லோயாவின் பயண பதிவுகள் எதுவும் ஏன் இல்லை? நீதிபதி லோயா அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது தங்கியதாக கூறப்படும் நாக்பூர் விருந்தினர் மாளிகையான ராஜ்பவன் பதிவேட்டில் நீதிபதி லோயாவின் வருகையோ அல்லது நீதிபதி மொடக்கின் வருகையோ ஏன் பதிவு செய்யப்படவில்லை? நீதிபதி லோயாவிற்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் தும்ராம், நீதிபதி லோயாவின் குடும்பத்தினருக்கு அவரது மரணம் குறித்த தகவல் தெரிவிக்கப்படாமல் ஏன் பிரேத பரிசோதனை செய்தார்? ஆகியன ஆகும்.

காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பின் முழு காணொளி:

Comments are closed.