சொஹ்ராபுதீன் போலி என்கெளவுண்டரிலும் அவரது மனைவி கற்பழித்தும் கொல்லப்பட்டனர். சிபிஐ நீதிமன்றத்தில் சகோதரர் சாட்சியம்

0

சொஹ்ராபுதீன் போலி என்கெளவுண்டரிலும் அவரது மனைவி கற்பழித்தும் கொல்லப்பட்டனர். சிபிஐ நீதிமன்றத்தில் சகோதரர் சாட்சியம்

கடந்த சனிக்கிழமை சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளவுண்டர் குறித்து சிபிஐ நீதிமன்றத்தில் தனது சாட்சியத்தை தெரிவித்த சொஹ்ராபுதீன் ஷேக்கின் சகோதரர், 2005 ஆம் ஆண்டு சொஹ்ராபுதீன் ஷேக் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து தன்னிடம் துளசிராம் பிரஜாபதி தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த துளசிராம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றுமொரு போலி என்கெளவுண்டரில் கொலை செய்யப்பட்டார்.

சிபிஐ நீதிமன்றத்தில் தனது சாட்சியத்தை கூறிய சொஹ்ராபுதீன் ஷேக்கின் சகோதரர் ரூபாபுதீன், சொஹ்ராபுதீன் ஷேக்கை காவல்துறையினர் போலி என்கெளவுண்டரில் கொலை செய்தனர் என்றும் அவரது மனைவி கெளசர்பீ காவல்துறையால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நீதிமன்றத்தில் கூறுகையில், “எனது சகோதரர் கொல்லப்படும் போது அவரின் நண்பர் துளசிராம் அங்கு இருந்ததாக என்னிடம் கூறினார். அவர் ஏன் கொல்லப்படவில்லை என்று நான் அவரிடம் கேட்ட போது, தான் ஒரு ஹிந்து என்றும் தன்னை முஸ்லிமான சொஹ்ராபுதீனுடன் தீவிரவாதி என்று முத்திரை குத்த முடியாது என்று கூறினார். “ என்று ரூபாபுதீன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தங்களிடம் 2005 நவம்பர் 26 சொஹ்ராபுதீன் கொல்லப்பட்டுவிட்டார் என்றும் அவரது உடலை அஹமதாபாத் பொது மருத்துவமனை சென்று பெற்றுக்கொள்ளுமாறு உறவினர் ஒருவர் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் உடலை பெற அஹமதாபாத் சென்றோம். அப்போது நாங்கள் தீவிரவாத தடுப்புபடை அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு அதிகாரிகளிடம் எனது சகோதரர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்றும் கெளசர் பீ குறித்தும் கேட்டேன்.” என்றும் அங்கு தனக்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என்றும் இது தொடர்பாக குஜராத் காவல்துறைக்கு கடிதம் எழுதியும் அங்கும் தனக்கு எவ்வித பதிலும் தரப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“2007 ஜனவரியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் காவல்துறை போலி என்கெளவுண்டரில் ஈடுபட்டதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். அத்துடன் கெளசர் பீ குறித்து தகவல் தருமாறும் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தேன். இதற்கு பதிலளித்த குஜராத் அரசு கெளசர் பீயும் கொல்லப்பட்டுவிட்டதாக பதிலளித்தது.” என்று ருபாபுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த போலி என்கெளவுண்டர் வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட மொத்தம் 38 நபர்களில், பாஜக தலைவர் அமித் ஷா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் காவல்துறையின் மூத்த அதிகாரிகள் உட்பட 16 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.