சொஹ்ராபுதீன் வழக்கு:உயர்நீதிமன்றத்தை நாட சகோதரர் முடிவு

0

சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதில் முழுமையான விசாரணையை நடத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள சொஹ்ராபுதீன் சகோதரர் ருபாபுதீன் உயர்நீதி மன்றத்தின் உதவியை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எட்டு நபர்களை ஒவ்வொருவராக இந்த வழக்கில் இருந்து சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக, ஏப்ரல் 29 அன்று ஐ.பி.எஸ். அதிகாரி அபய் சுதாஸாமா இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு முன்னர் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா, தொழில் அதிபர் விமல் பட்னி, குஜராத் காவல்துறை முன்னாள் தலைவர் பி.சி.பாண்டே, ஏடிஜிபி கீதா ஜோஹ்ரி, அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் உயர் அதிகாரிகள் யாஷ்பால் சுதாஸாமா மற்றும் அஜய் பட்டேல் ஆகியோரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
‘இந்த வழக்கில் சிபிஐ முழுமையான விசாரணையை நடத்தாததால்தான் இவர்கள் அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.இந்த விவகாரத்தை நான் உச்சநீதி மன்றத்திற்கு கொண்டு செல்வேன். வழக்கில் இருந்து இந்த எட்டு நபர்களும் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்’ என்று ருபாபுதீன் தெரிவித்தார்.
‘மத்தியில் புதிய ஆட்சி அமைந்த பிறகு சிபிஐ ஒவ்வொரு குற்றவாளியையும் பாதுகாத்து வருகிறது. இந்த வழக்கை குறித்து முழுமையாக அறிந்த வழக்கறிஞர்களை அவர்கள் மாற்றினர்’ என்றும் ருபாபுதீன் குற்றம்சாட்டினார்.
‘இவர்கள் தங்களை குற்றமற்றவர்கள் என்று கூறியதை உச்சநீதி மன்றம் ஏற்க மறுத்தது. ஆனால் தற்போது கீழ் நீதிமன்றம் இவர்களை விடுவித்துள்ளது.சிபிஐ தனது நிலையை மாற்றிக் கொண்டது போல் தெரிகிறது’ என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோஹில் தெரிவித்தார்.
நவம்பர் 2005ல் குஜராத்தை சேர்ந்த சொஹ்ராபுதீன் ஷேக் ஒரு என்கௌண்டரில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் சாட்சியான துளசிராம் பிரஜாபதி டிசம்பர் 2006ல் நடைபெற்ற மற்றொரு என்கௌண்டரில் கொலை செய்யப்பட்டார்.

Comments are closed.