சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளவுண்டர் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 22 நபர்களும் விடுதலை

0

சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளவுண்டர் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 22 நபர்களும் விடுதலை

சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறி டிசம்பர் 21 ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இந்த வழக்கில் சதித்திட்டம் மட்டும் கொலைக்கான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் திருப்திகரமாக இல்லை என்று வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் அமித் ஷா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இவ்வழக்கில் விசாரிக்கப்பட்ட 210 சாட்சியங்களில் 92 நபர் பிறழ் சாட்சியாக மாறியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவ்வழக்கில் இத்தனை சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறியது ஏன் என்றும் சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டதா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், தற்போது இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி, இவ்வழக்கில் அரசு எந்திரம் அதிகப்படியான சிரத்தை எடுத்துக்கொண்டது என்றும் மொத்தம் 210 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையிலும் போதுமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அதிலும் 92 பேர் பிறழ் சாட்சியாக மாறிவிட்டனர் என்றும் சாட்யிங்கள் பேசாததற்கு வாதத்தரப்பு எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ குற்றபத்திரிகை தாக்கல் செய்த 38 நபர்களில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி 16 நபர்களை முன்னர் நீதிமன்றம் விடுவித்திருந்தது. இதில் பாஜக தலைவர் அமித் ஷா, ராஜஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கடாரியா, குஜராத் முன்னாள் காவல்துறை தலைவர் P.C.பாண்டே மற்றும் குஜராத் மூத்த காவல்துறை அதிகாரி வன்சாரா ஆகியோர் அடக்கம்.

Comments are closed.