சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் வன்சாரா

0

சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி டி.ஜி.வன்சாராவை மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. அவருடன் சேர்த்து ராஜஸ்தான் காவல்துறை அதிகாரி எம்.என்.தினேஸையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது. பன்னிரெண்டு ஆண்டுகள் நடந்து வரும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 38 நபர்களில் இதுவரை 15 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள வன்சாரா தான் குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட வன்சாராவிற்கு, மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, 2014ல் ஜாமீன் வழங்கப்பட்டது. இஸ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கிலும் இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து 2015 பிப்ரவரியில் இவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
சொஹ்ராபுதீன் ஷேக் மற்றும் அவர் மனைவி கௌசர் பீ ஆகியோரை ஹைதராபாத்தில் இருந்து வரும் போது வன்சாரா உள்ளிட்ட அதிகாரிகள் கடத்தி சென்று சொஹ்ராபுதீன் ஷேக்கை, குஜராத் முதல்வர் நரேந்தி மோடியை கொலை செய்ய வந்ததாகக் கூறி போலி என்கௌண்டரில் (நவம்பர் 2005) கொலை செய்தனர். அதன் பின்னர், அவர் மனைவி கௌசரும் கொலை செய்யப்பட்டார். இவர்களுடன் பயணம் செய்தவரும் இவர்களின் கடத்தலை கண்ட சாட்சியுமான துளசிராம் பிரஜாபதி 2006ஆம் ஆண்டு மற்றுமொரு போலி என்கௌண்டரில் கொல்லப்பட்டார்.
சொஹ்ராபுதீன் வழக்கில் இருந்து பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, காவல்துறை அதிகாரிகள் அபய் சுதாசமா, கீதா ஜோஹ்ரி, பி.சி.பாண்டே, ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா ஆகியோர் இதுவரை விடுவிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.
குஜராத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை, 2012ல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து மஹாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது. வன்சாரா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து கருத்து தெரிவித்த சொஹ்ராபுதீனின் சகோதரர் ருபாபுதீன், தனது சட்டப்போராட்டத்தை தான் தொடர உள்ளதாக கூறினார்.

(கோப்புப் படம்)

Comments are closed.