சொஹ்ராபுதீன் ஷேக் வழக்கு: விடுவிக்க கோரும் ஐ.பி.எஸ். அதிகாரி

0

சொஹ்ராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி போலி என்கௌண்டர் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி ராஜ்குமார் பாண்டியன் தன்னை இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் இதற்கான மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதனையே காரணமாக காட்டி ராஜ்குமார் பாண்டியன் தனது கோரிக்கையை வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
இந்த வழக்குகளிலும் முக்கியமான குற்றவாளி ராஜ்குமார் பாண்டியன் என்று குற்றப்பத்திரிகைகளில் கூறப்பட்டுள்ளன. சொஹ்ராபுதீன் ஷேக்கை ஹைதராபாத்தில் இருந்து அஹமதாபாத்திற்கு கொண்டு வந்தது, போலி என்கௌண்டரில் அவரை கொலை செய்தது, அதன் பின் அவர் மனைவி கௌஸர் பீயை கொலை செய்து அவர் உடலை எரித்தது என அனைத்து சூழ்ச்சிகளிலும் ராஜ்குமார் பாண்டியன் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
நவம்பர் 2005ல் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறி சொஹ்ராபுதீனை குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை சுட்டுக் கொன்றது. முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி வன்சாரா தலைமையிலான இந்த குழுவில் ராஜ்குமார் பாண்டியனும் இடம் பெற்றிருந்தார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, ராஜஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கடாரியா, தொழில் அதிபர் விமல் பத்னி, முன்னாள் குஜராத் டிஜிபி பி.சி.பாண்டே, ஏடிஜிபி கீதா ஜோஹ்ரி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கடந்த மூன்று மாதங்களில் சிபிஐ தளர்த்தியுள்ளது.
ஏப்ரல் 2007ல் இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் பாண்டியன் தற்போது ஜாமீனில் உள்ளார்.

Comments are closed.