சோனிபட்: தலித்கள் மீது தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள்

0

ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள தலித்கள் மீது ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினர் நடத்திய தாக்குதல் அப்பகுதி மக்களிpடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 23 அன்று இச்சம்பவம் நடைபெற்றது.
அன்றைய தினம் ராஜேந்திர நகர் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது அவர்களின் பந்து அருகில் உள்ள ஆர்.எஸ்.எஸ். மாவட்ட அலுவலகத்தில் சென்று விழுந்துள்ளது. அதில் ஒரு சிறுவன் பந்தை எடுக்க சென்ற போது அங்கிருந்தவர்கள் அச்சிறுவனை பலமாக தாக்கினர்.
இதனை கேட்க சென்ற சிறுவனின் தந்தை ராஜிவ் குமார் மற்றும் அவரின் தாயாரையும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் தாக்கினர். இது போதாதென்று ராஜேந்திர நகர் பகுதிக்குள் நுழைந்த ஏறத்தாழ ஐம்பது ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் அப்பகுதி மக்களை கடுமையாக தாக்கினர். ராஜேந்திர நகரில் வால்மீகி சமூகத்தை சேர்ந்த தலித்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கையில் லத்தி மற்றும் இரும்பு கம்பிகளுடன் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நடத்திய தாக்குதலுக்கு சிசிடிவி காட்சி பதிவுகள் ஆதாரமாக இருந்த போதும் காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை அவர்களை காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நடவடிக்கை எடுக்க மறுத்த காவல்துறை ஏப்ரல் 25 அன்று ஆர்.எஸ்.எஸ்.காரர்களுடன் அப்பகுதி மக்களை ஒரு ஒப்பந்தத்தில் வற்புறுத்தி கையெழுத்திட வைத்தது. இரு தரப்பினரும் யார் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில்லை என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதல் என்றே அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கொலைவெறி தாக்குதல் குறித்தோ சிறுவர்கள் பந்து எடுக்க சென்றது குறித்தோ அதில் எதுவும் சொல்லப்படவில்லை.
ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களின் தாக்குதலும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் போக்கும் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.