ஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்?

0

ஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்?

சர்வாதிகார ஆட்சியின் ஆபத்தான அறிகுறிகளை சுதந்திர இந்தியா கடந்து செல்கிறது. ஜனநாயகம் இனி எவ்வளவு காலம் நீடிக்கும்? என்ற கேள்வியை தேச நலனில் அக்கறைகொண்டவர்கள் எழுப்புகிறார்கள். 70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு-கஷ்மீரை மாற்றிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்த பாஜக அரசாங்கத்தின் நடவடிக்கை நாட்டின் நேர்மை மற்றும் இறையாண்மையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த எல்லை மாநிலத்தை இரண்டாக துண்டாடி மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. பிரிவு 35கி ஐ ரத்து செய்ததன் மூலம் கஷ்மீர் மக்களுக்கான சலுகைகளும் பறிக்கப்பட்டுள்ளன. கஷ்மீர் மக்களின் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் இந்த துரோக முடிவின் பின்னால் பாஜகவின் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளது.

கஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஆகியவற்றின் பெயரால் பீதியை உருவாக்கி ராணுவத்தினரை குவித்து விட்டு இந்த துரோக அரசியல் நடவடிக்கையை பா.ஜ.க அரசு எடுத்துள்ளது.ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து எதிர்கட்சி தலைவர்களெல்லாம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.தொலைபேசி, இணையதள தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.இந்த காஷ்மீர் மாதிரி அதனுடன் மட்டுப்படுத்தப்படும் என்று யாரும் கருதிவிடவேண்டாம்.அரசியல் சாசன விழுமியங்களான மதச்சார்பின்மை, கூட்டாட்சி மற்றும் பன்மைத்துவத்தையெல்லாம் பலி கொடுத்து மோடி அரசு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நாட்டை அழைத்துச் செல்லும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.காஷ்மீர் விவகாரம்,  நீண்டகால விளைவுகளை குறித்த எந்தவொரு ஆலோசனையும் இன்றி சர்வாதிகார ஆணவத்துடன் அவசரகோலத்தில் கையாளப்படும்போது கொலைச் செய்யப்படுவது இந்தியாவின் ஜனநாயகம் தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

மோடி அரசு முக்கியமாக முஸ்லிம் விரோத, இந்துத்துவ சித்தாந்தத்தை வலுப்படுத்தும் செயல்திட்டங்களைத்தான் முன்மொழிகிறது. கஷ்மீருக்கான அந்தஸ்தை ரத்து செய்தல், ராமர் கோயில் கட்டுதல் மற்றும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துதல் முதலான தேர்தல் வாக்குறுதிகளை மிக முக்கியத்துவத்துடன் அரசு கையாளுகிறது.

ஒரு புறம் தீவிர தேசியவாத உணர்ச்சிகளை தூண்டி, இந்துத்துவ அஜண்டாக்களை நடைமுறைப்படுத்துவதில் மும்முரம் காட்டும் மோடி அரசு இன்னொரு புறம் நாட்டை பொருளாதார வீழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வேலை இழப்பை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது.இந்த உண்மையை அங்கீகரிப்பதற்கு மறுத்த அரசு பின்னர் வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.அனைத்து துறைகளிலும் இதுதான் நிலைமை. 2019 ஏப்ரல் முதல் ஜூன் வரை, நாட்டின் கார் விற்பனையில் 23 சதவீதமும், இரு சக்கர வாகணங்களில் விற்பனையில் 14 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது.  பொருளாதாரம் தேக்கநிலையை நோக்கிச் செல்கிறது என்பதன் முதல் அறிகுறி, வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையில் ஏற்படும் சரிவு. இந்தியாவில் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பதில் முதன்மை நிறுவனமாக, வளர்ச்சி விகிதத்தில் எப்போதும் இரட்டை இலக்கமாக இருக்கும் ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட், நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் தற்போது முதல் காலாண்டில் வெறும் 7 சதவீதத்தை மட்டுமே எட்டியுள்ளது.

பொருளாதார வீழ்ச்சியை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்வதற்கு பதிலாக மக்களை தீவிர தேசியவாதத்தில் மூழ்கடித்து, வகுப்புவாத சிந்தனைகளை பரப்புரைச் செய்து “இங்கே எல்லாம் பாதுகாப்பாகத்தான் உள்ளது” என்பதை நிரூபிப்பதற்கு மோடி அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இவையெல்லாம் நாட்டிற்கு மிகப்பெரிய துயரத்தை தான் பரிசாக அளிக்கும்.

Comments are closed.