ஜனநாயகத்தையும் நீதித்துறையையும் காப்பாற்றுங்கள்: நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

0

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் நடத்தையில் புகார் தெரிவத்து மக்கள் முன் வந்து ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றக் கோரி நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். இப்படியான ஒரு சம்பவம் நிகழ்வது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

இந்திய நீதித்துறையின் அதிகபட்ச அதிகாரம் கொண்டதான உச்ச நீதிமன்ற கொலிஜியம் அமைப்பின் நீதிபதிகள் செலமேஷ்வர், நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி மதன் பி லோகுர், மற்றும் நீதிபதி குரியன் ஜோசப் ஆகியோர் நீதிபதி ஜஸ்தி செலமேஷ்வர் இல்லத்தில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய நீதிபதி செலமேஷ்வர், “இந்த தேசத்துடன் உரையாடுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.” என்றும் கடந்த சில மாதங்களில் நீதித்துறையில் “பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவிட்டன.” என்றும் கூறியுள்ளார். மேலும், “சில விஷயங்கள் சரியான முறையில் இல்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் நாங்கள் கூட்டாக தெரிவிக்க முயற்சித்து அவர் அதனை சரி செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் எங்களது முயற்சிகள் தோற்றுவிட்டன.” என்று கூறியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்குமுன்னர் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவிற்கு எழுதப்பட்ட ஏழு பக்க கடிதம் ஒன்றையும் பொதுமக்களின் பார்வைக்கு நீதிபதிகள் வெளியிட்டனர். அதில், “நீதிமன்றம் பிறப்பித்த சில உத்தரவுகள் நீதித்துறையின் ஒட்டுமொத்த நடப்பையும் உயர் நீதிமன்றங்களின் சுதந்திரத்தையும் பாதித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தின் இயக்கத்தையும் பாதிக்கின்றது.” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், “தேசம் மற்றும் நீதித்துறை மீது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலான வழக்குகள் தலைமை நீதிபதியால் குறிப்பிட்ட சில பென்ச்களுக்கு அவரின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் எந்த ஒரு நியாயமான அடிப்படையும் இல்லாத நிலையில் ஒதுக்கப்படுகிறது. இது அனைத்து நிலையிலும் தவிர்க்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளனர்.

இன்னும், “இந்நாட்டின் நீதிபரிபாலனத்தில் தலைமை நீதிபதி அனைவரையும் போல் சமமானவர், அதற்கு கூடுதலோ குறைவோ அல்ல.” என்று கூறியுள்ளனர். “இந்த நிறுவனம் பாதுகாக்கப்பட்டு சமத்துவம் கடைபிடிக்கப்படாதவரை இந்நாட்டிலோ அல்லது எந்நாட்டிலும் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது. சிறந்த ஜனநாயகத்திற்கு அடையாளம் சார்பற்ற நீதித்துறை.” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், “இன்று காலை கூட குறிப்பிட்ட ஒரு வேண்டுகோளுடன் தலைமை நீதிபதியை நாங்கள் சந்தித்தோம். ஆனால் எங்களால் அவரை அவ்விசயத்தில் சமாதானம் செய்ய முடியவில்லை. அதனால் அது தொடர்பாக நாட்டு மக்களிடம் உரையாற்றுவதை தவிர எங்களுக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை. தயவு செய்து இந்த நிறுவனத்தையும் தேசத்தையும் பாதுகாத்திடுங்கள். இன்னும் 20 வருடங்கள் கழித்து செலமேஷ்வர், ரஞ்சன் கோகோய், மதன் லோகுர் மற்றும் குரியன் ஜோசெப் ஆகியோர் தங்களின் ஆன்மாக்களை விற்றுவிட்டனர் என்றும் இந்த நிறுவனத்தை அவர்கள் கவனிக்கவில்லை என்றும் தேசத்தின் பாதுகாப்பை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்றும் அறிஞர்களால் பேசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அதனால் இதனை இந்த தேசத்தின் முன்பு வைக்கின்றோம்.“ என்று நீதிபதி செலமேஷ்வர் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் தங்களின் கவலைகளை தெரிவிப்பது நீதிபதி லோயாவின் மரணத்தை விசாரிக்கும் வழக்கு குறித்தா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு நீதிபதிகள் ஆம் என்று கூறியுள்ளனர். சொராபுதீன் ஷேக் போலி என்கெளவுண்டர் வழக்கில் பாஜக தலைவர் அமித்ஷா மீதான விசாரணையை நடத்திவந்த போது தான் நீதிபதி லோயா மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் ஒரு கொலை என்றும் இதில் பல நீதிபதிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் நபர்களுக்கு தொடர்பு உள்ளது என்பதாக நீதிபதி லோயாவின் குடும்பம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. (பார்க்க செய்தி)

Comments are closed.