ஜம்மு கஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது- PFI

0

ஜம்மு கஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது: பாப்புலர் ஃப்ரண்ட்

ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்தை மாற்றுவதற்கான மத்திய அரசாங்கத்தின் முடிவும் அதனைக் கொண்டு வந்த விதமும் ஜனநாயகம் மற்றும் இந்தியாவின் அரசியல் சாசன நெறிமுறைகளை மீறுவதாகும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபுபக்கர் தெரிவித்துள்ளார். ஜம்மு கஷ்மீர் தொடர்பான ஷரத்துகள் 370 மற்றும் 35A ஆகியவற்றை நீக்குவதற்கான முடிவு தேசத்திற்கும் மக்கள் நலனுக்கும் உகந்ததல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட NIA, UAPA, RTI போன்ற மசோதாக்களுடன் சிறப்பு அரசியல் சாசன அங்கீகாரத்தை பெற்ற ஜம்மு கஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அந்தஸ்தை குறைத்திருப்பது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் எதிர் நோக்கி இருக்கும் இருண்ட காலத்தை பறைசாற்றுவதாக உள்ளது.

இந்தியா குடியரசாக உருவானதில் இருந்து கஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஷரத்துகள் 370 மற்றும் 35A சிறப்பு அரசியல் சாசன அந்தஸ்தை சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்துரையாடாமல் நீக்க முடியாது. ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் முடிவை நாடாளுமன்றத்தில் போதிய அளவு விவாதம் கூட இல்லாமல் பாஜக அரசாங்கம் நிறைவேற்றியிருப்பது வினோதமாக இருக்கிறது. இந்த நாடாளுமன்ற தொடரின் ஆரம்பத்திலேயே இந்த மசோதாவை தாக்கல் செய்து அது குறித்த அனைத்து கருத்துகளுக்கும் அரசாங்கம் செவிசாய்த்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் உத்தரவின் மூலம் நிறைவேற்றி, ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடும் ஒரு விசித்திரமான சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது.

2014 மற்றும் 2019ல் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பாஜக பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் இந்த விவகாரத்தில் இருந்து சம்பந்தப்பட்ட கஷ்மீரிகளை தூரமாக்கி இதற்கு முன்னர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முந்தைய முதலமைச்சர்களையும் தடுப்புக் காவலில் வைத்தது மத்திய அரசின் அரசியல் அராஜகத்தையும் பழிவாங்கும் போக்கையும் வெளிப்படுத்துகிறது.

நமது நாட்டின் வரலாற்றில் இதுவரை இதுபோன்ற நிகழ்வுகளை நாம் கேள்விப்பட்டதில்லை. இந்திய அரசாங்கத்துடன் உடன் நின்ற அரசியல் சக்திகள் மற்றும் தலைவர்களை இது ஏமாற்றுவதாகும். முந்தைய பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தவர்களும் இதில் அடங்குவர். மேலும், பெருமளவில் இராணுவ குவிப்பு மற்றும் மாநிலம் முழுவதும் ஒரு பயங்கர சூழலை உருவாக்கி இருப்பது கஷ்மீர் மக்களை இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து மேலும் அந்நியப்படுத்தவே செய்யும்.

ஜம்மு-கஷ்மீர் அரசாங்கத்தின் ஒப்புதலுடன்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகின்றது என்ற அரசாங்கத்தின் கூற்று வேடிக்கை அன்றி வேறொன்றுமில்லை. ஜம்மு கஷ்மீர் தற்போது ஜனாதிபதி ஆட்சியின்கீழ் இருக்கிறது. அங்கு நடத்தப்பட வேண்டிய சட்டமன்ற தேர்தல் வேண்டுமென்றே நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைத்து நடத்தப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் அரசியல் சாசன அந்தஸ்தை மாற்றுவதற்கான ஒப்புதலை மாநில அரசாங்கத்திடம் பெறாமல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் ஒப்புதலை மாநில அரசின் ஒப்புதலாக ஏற்பதாக இருந்தால் கூட்டாட்சி முறையின் இந்த வீழ்ச்சி இனி எந்த மாநிலத்தையும் தாக்கலாம். இந்திய ஒன்றியத்தில் அரசியல் சாசனத்தின் ஷரத்து 370ன் கீழ் சிறப்பு அந்தஸ்தை பெறும் ஒரே மாநிலம் கஷ்மீர் மட்டுமல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கலந்துரையாடல், விவாதம், ஒப்புதல் என எதுவும் இல்லாமல் எதிர்காலத்தில் இது போன்ற அடிப்படை மாற்றங்கள் பிற மாநிலங்களிலும் கொண்டுவரப்படலாம்.

கஷ்மீர் விவகாரத்தில் துயரம் நிறைந்த இந்த மாற்றம் சங்பரிவாரின் வெறுப்பு சித்தாந்தத்தில் தாக்கம் பெற்ற வகுப்புவாத வெறி கும்பலை திருப்திப்படுத்த போதுமானதாக உள்ளது என்றும் இ.அபுபக்கர் தெரிவித்தார். ஆனால் கஷ்மீர் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே கஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட முடியும். ஆளும் கட்சியின் அராஜகம் மற்றும் பெரும்பான்மை எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தால் நாளுக்கு நாள் குறைந்து வரும் நாட்டின் ஜனநாயக மற்றும் மதச்சார்பின்மையின் மாண்புகளை பாதுகாத்திடும் பொறுப்பை சிவில் சமூகம் ஏற்றெடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Comments are closed.