ஜம்மு கஷ்மீர் மாநிலம் நக்ரோடாவில் இராணுவத்தினர் மீது தாக்குதல்: 7 இராணுவத்தினர் உயிரிழப்பு

0

ஜம்மு கஷ்மீர் மாநிலம் நக்ரோடாவில் பயங்கரவாதிகள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதில் இரண்டு இராணுவ அதிகாரிகள் மற்றும் ஐந்து வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேரை சுட்டுக்கொன்று அவர்களிடம் சிக்கிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் மற்றும் 12 இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டனர்.

செவ்வாய் கிழமை அதிகாலை காவல்துறையினர் போல உடையணிந்து ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள் நக்ரோடாவில் உள்ள இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்குள்ள இராணுவ அதிகாரிகள் உணவகத்தில் நுழைந்த அவர்கள் முதலில் கையெறிகுண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் ஒரு அதிகாரி மற்றும் மூன்று இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அருகில் உள்ள குடியிருப்பில் பயங்கரவாதிகள் நுழைந்ததால் அங்கு இருந்த இராணுவத்தினரின் குடும்பத்தினர் பணயக்கைதிகள் போன்று மாட்டிக்கொண்டனர்.

இவர்களை பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற இராணுவம் நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு இராணுவ அதிகாரியும் இன்னும் இரண்டு வீரர்களும் உயிரிழந்தனர். இறுதியாக அந்த கட்டிடத்தில் சிக்கியிருந்த 16 பேர் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் வேறு யாரேனும் பதுங்கியுள்ளனரா என்று கண்டறியும் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது என்று இராணுவம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அத்துமீறலுக்கு துல்லிய தாக்குதல் மூலம் தகுந்த பதிலடி அளித்துவிட்டோம் என்று இந்திய இராணுவம் கூறிவந்த நிலையில் இந்திய இராணுவத்தினர் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மிகப்பெரியதாக கருதப்படும் இந்த தாக்குதல் நடந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் படைகள் அவ்வப்போது இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.

நக்ரோடாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் பெயர்களாவது:
மேஜர் கொசாவி குணால் மன்னாதிர்
மேஜர் அக்ஷய் கிரிஷ் குமார்
ஹல்விதார் சுக்ராஜ் சிங்
லான்ஸ் நாயக் கடம் சம்பாஜி எஸ்வத்ரோ
கிரநேடியர் ராகவேந்திரா சிங்
ரைஃபிள்மேன் அசிம் ராய்

Comments are closed.