ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த செவ்வாய் மதியம் உஸ்மான் அன்சாரி என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவரது வீட்டின் ஒரு பகுதி தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இவரது வீட்டின் முன் ஒரு பசு இறந்து கிடந்ததே இந்த வன்முறைக்கு காரணமாக கூறப்படுகிறது.
காவதுரையினரின் கூற்றுப்படி, பேரியா ஹதியாதன்ட் கிராமத்திலுள்ள உஸ்மான் அன்சாரியின் வீட்டின் முன்பு ஒரு பசு இறந்து கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதியில் உள்ள ஒரு கும்பல் அன்சாரியின் வீட்டிற்கு சென்று அவரை கடுமையாக தாக்கியுள்ளது. மேலும் அவரது வீட்டையும் தீயிட்டு கொளுத்தியுள்ளது. இதில் வீட்டின் ஒரு பகுதி எரிந்து சேதமடைந்துள்ளது.
சம்பவத்தை கேள்விப்பட்டு அங்கு விரைந்த காவலர்கள் அந்த கும்பலிடம் இருந்து அன்சாரியையும் அவரது குடும்பத்தையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதற்கு அந்த வன்முறை கும்பலிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பவே காவல் துறையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்துள்ளனர். காவல்துறையினர் மீது வன்முறை கும்பல் நடத்திய கல்வீச்சில் சுமார் 50 காவலர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த கும்பலை கலைக்க காவல்துறை நடத்திய எச்சரிக்கை துப்பாக்கிச் சூட்டினால் பண்டிட் என்பவர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது அன்சாரி மற்றும் பண்டிட் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இருவரின் நிலையும் தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் மேலும் பதற்றம் ஏற்படுவதை தவிர்க்க காவல்துறை உயரதிகாரிகள் உட்பட சுமார் 200 காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.