ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக குழு வெளியிட்டுள்ள அறிக்கை!

0
ஜார்கண்ட் அரசாங்கம் CLA Act 1908-ன் 16-வது பிரிவின் கீழ் பாப்புலர் ஃப்ரண்டை தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது செயலிழந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தால் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் கவரப்பட்டதை தடைக்கான காரணமாக மாநில முதல் அமைச்சர் கூறியுள்ளார். சிரியாவுக்கு சென்றதாக கூறப்படுபவர்கள் குறித்த உறுதி செய்யப்படாத தகவல்களை மாநில அரசாங்கம் மேற்கோள் காட்டியிருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடை பாரபட்சமானது. பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடை, மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை காட்டுமிராண்டி சட்டங்கள் மூலம் நசுக்கும் இந்துத்துவ அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையையும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதையும் தெளிவாகக் காட்டுகிறது.

2015 முதல் ஜார்கண்டின் சில பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்பட்டு வருகிறது. துரதிஷ்டவசமாக ஒருதலைப்பட்சமான அணுகுமுறையை அரசாங்க அதிகாரிகளிடமிருந்து இயக்கம் சந்தித்து வருகிறது. மக்களை அடித்துக் கொல்லும் பல்வேறு வழக்குகளுக்கு பெயர் போன மாநிலத்தில் குற்றவாளிகளை விசாரணையின் பிடியில் கொண்டு வருவதற்கு நமது உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான சட்டப் போராட்டங்களே இத்தடைக்கான காரணம் என நாம் நினைக்கிறோம்.

சென்ற வருடம் சராய்கலா என்ற இடத்தில் நான்கு அப்பாவிகள் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் சாட்சிகள் சாட்சியம் அளிக்க இருந்த தினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடை அறிவிப்பு வந்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் உள்ளூர் பா.ஜ.க. தலைவர் ஹிஸாபி ராயின் வெறுப்பு பேச்சிற்கு எதிராகப் போராட்டம் நடத்திய நமது உறுப்பினர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்த பாகூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு எதிரான ஒரு வழக்கும் விசாரணையில் உள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்றவை என்பதையும் இயக்கத்தை தடை செய்வதற்கான ஒரு முகாந்திரம் கூட இல்லை என்பதையும் நாம் தெளிவாக குறிப்பிடுகிறோம். இதனை நாம் ஜனநாயக வழிமுறைகளில் சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றியடைவோம் என்று நம்புகிறோம்.

இப்படிக்கு
M.முஹம்மது அலி ஜின்னா,
தேசிய பொதுச் செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

Comments are closed.