ஜார்கண்ட்:போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர்

0

ஜார்கண்ட் மாநிலத்தின் தர்பார் தோலா பகுதியில் வசித்து வந்த மின்ஹாஜ் அன்சாரி என்ற 22 வயது மொபைல் கடை உரிமையாளரை அக்டோபர் 3 ஆம் தேதி இரவு வாட்ஸ்அப் குழுமம் ஒன்றில் பகிரப்பட்ட ஆட்சேபனைக்குரிய பதிவிற்காக  காவல்துறையினர் கைது செய்து சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக சித்திரவதை செய்யப்பட்ட மின்ஹாஜ் அந்த காயங்களினால் உயிரிழந்துள்ளார்.

மத உணர்வுகளை புண்படுத்தும் விதம் இவரது பதிவு அமைந்திருந்ததாகவும் அதனால் மின்ஹாஜையும் அவருடன் மேலும் இருவரையும் கைது செய்ததாக காவல்துறை தெரிவித்திருந்தது. மின்ஹாஜ் அன்சாரியுடன் கைது செய்யப்பட்ட மற்ற இருவரை அடுத்தநாள் காலை காவல்துறையினர் விடுவித்தனர். ஆனால் மின்ஹாஜ் மட்டும் விடுவிக்கப்படவில்லை. காவல்துறையினர் விடுவித்த இருவரின் உடல்களின் தாக்கப்பட்டதற்கான பல காயங்கள் காணப்பட்டது.

விடுவிக்கப்பட்டவர்கள் மின்ஹாஜின் குடும்பத்தினரிடம் மின்ஹாஜின் கண்பார்வை போகும் அளவிற்கு அவர் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ச்சியுற்ற மின்ஹாஜின் குடும்பத்தினர் காவல்நிலையம் விரையவே அங்கு மின்ஹாஜிற்கு உடல் நிலை சரியில்லை என்றும் அவர் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளனர்.

முதலில் மின்ஹாஜ் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பின்னர் அங்கிருந்து அவரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மின்ஹாஜிற்கு என்ன ஆனது என்பது குறித்து பத்திரிகையாளர்களிடம் எதையும் கூற மறுத்த அதிகாரி, ஜம்தாரா மருத்துவமனையில் மின்ஹாஜின் உடல்நிலையில்  எந்த மாற்றமும் ஏற்படாததால் அக்டோபர் 5 ஆம் தேதி அவரை தன்பாத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்

இதனையடுத்து தன்பாத் அரசு மருத்துவமனைக்கு விரைந்த மின்ஹாஜின் குடும்பத்தினரை நாராயன்புரா காவல்நிலைய அதிகாரி ஹரிஷ் பதக் மின்ஹாஜை பார்ப்பதை விட்டு தடுத்துள்ளார். மின்ஹாஜின் தற்போதைய இந்த நிலைக்கும் இவரே காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் மின்ஹாஜின் குடும்பத்தினருக்கும் ஹரிஷ் பதகிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டுள்ளது. இதில் ஹரிஷ் பதக் மின்ஹாஜின் பெற்றோர்களை தாக்கியதாகவும் அவருக்கும் சில காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

அதே சமயம் மின்ஹாஜின் உடல்நிலை மேலும் மோசமடைய அவரை ராஞ்சிக்கு எடுத்துச் செல்ல மருத்துவர்கள் கூறியுள்ளனர். அப்போது மிஹாஜை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாயினர். அவரின் கண்கள் விரிய திறந்துள்ளது, ஆனால் அவருக்கு பார்வையில்லை. அவரது முதுகுத் தண்டு உடைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது கால்களும் உடைக்கப்பட்டுள்ளன. மிஹாஜின் குடும்பத்தினர் அவரை சந்தித்த போது மின்ஹாஜிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. இறுதியில் மின்ஹாஜ் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஞாயிறு இரவு மின்ஹாஜின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்து வந்த போது, பல காவல்துறை வாகனங்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டன. மேலும் அங்கிருந்தோரிடம் அவர்கள் ஏதாவது போரட்டங்களில் ஈடுபட்டால் அதனை இந்து முஸ்லிம் கலவரம் என்று கூறி அனைவரையும் தாக்குவோம் என்று காவல்துறையினர் கூறியதாக மின்ஹாஜின் உறவினர் இல்யாஸ் தெரிவித்துள்ளார். மேலும் மின்ஹாஜின் உடலை இரவோடு இரவாக அடக்கம் செய்யவேண்டும் என்றும் காவல்துறை வலியுறுத்தியதாக தெரிகிறது.

திங்கள் காலை அப்பகுதி டி.எஸ்.பி. மற்றும் எஸ்.பி மின்ஹாஜின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களிடம் இதற்கு காரணமான அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர். மேலும் மின்ஹாஜின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ருபாய் நிதியுதவியும் வளங்குவதாக கூறியுள்ளனர். “மின்ஹாஜிற்கு ஒரு வயது குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையிடம் இருந்து அதன் தந்தையை பிரித்துவிட்டு அவர்கள் கொடுக்கும் 2 லட்ச ரூபாயில் என்ன பயன்” என்று இல்யாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி ஹரிஷ் பதக் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இல்யாஸ் கூறுகையில், “காவல்துறையினரால் காவல்நிலையத்தில் வைத்தே ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய ஹரிஷ் மற்றும் பிற அதிகாரிகள் மீது IPC 302  வது பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இந்த கொலையினால் எங்களின் மொத்த ஊரே அதிர்ந்துள்ளது. நாங்கள் அனைவரும் துக்கத்தில் உள்ளோம். குறைந்தபட்சம் எங்களுக்கு நீதியாவது வேண்டும், ஆனால் அதுவும் மின்ஹாஜை திரும்பக் கொண்டுவரப் போவதில்லை.” என்று கூறியுள்ளார். இல்யாஸ்.

இது குறித்து கருத்துக்களை கேட்டறிய ஜம்தாரா எஸ்.பி. மனோஜ் குமாரை பத்திரிகையாளர்கள் தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

Comments are closed.