ஜார்கண்ட்: ஆட்கடத்தலுக்கு எதிராக பிரச்சாரம் செய்துவந்த ஐந்து பெண்கள் கடத்தப்பட்டு கற்பழிப்பு

0

ஜார்கண்ட்: ஆட்கடத்தலுக்கு எதிராக பிரச்சாரம் செய்துவந்த ஐந்து பெண்கள் கடத்தப்பட்டு கற்பழிப்பு

பாஜக ஆளும் ஜார்கண்ட் மாநிலத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் ஆட்கடத்தலுக்கு எதிராக பிரச்சங்கள் செய்து வந்த ஐந்து பெண்களை மர்ம நபர்கள் கடத்திச் சென்று கூட்டு பாலாத்காரம் செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 19 ஆம் தேதி கொசாங்க் கிராம்த்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆட்கடத்தலுக்கு எதிராக வீதி நாடகம் மூலம் பிரச்சாரம் செய்து வந்த இந்த பெண்களை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

காவல்துறையின் கூற்றுப்படி அந்தப்பெண்களை ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு கடத்திச் சென்ற கடத்தல்காரர்கள் அங்கு அப்பெண்களை கூட்டு பலாத்காரம் செய்து அதனை வீடியோ பதிவும் செய்துள்ளனர். மேலும் அப்பெண்கள் இந்த நிகழ்வு குறித்து காவல்துறையில் புகாரளித்தால் அந்த வீடியோவை இணையதளத்தில் பரவவிட்டுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த ராஞ்சி பகுதி துணை இன்ஸ்பெக்டர் ஜெனெரல் ஏ.வி.ஹோம்கார், “கடத்தல்காரர்கள் அப்பெண்களை மூன்று மணிநேரத்திற்கு பிறகு விடுவித்துள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. “ என்று தெரிவித்துள்ளார். மேலும் இவர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்செயலுக்கு பின்னால் பதல்காடி இயக்கம் உள்ளது என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. பதல்காடி இயக்கம் என்பது ஆதிவாசி மக்கள் வசிக்கும் பகுதிகளில் தற்போது பேர்பெற்றுவரும் இயக்கமாகும். இது, தங்கள் பகுதியின் கிராம நிர்வாகம் தவிர்த்து அரசு உட்பட எவருக்கும் அங்கு அதிகாரம் இல்லை என்று கற்களில் பொரிக்கப்பட்டு கிராம பகுதிகளில் வைக்கப்படும் இயக்கம். இந்த பதல்காடி இயக்கம் சமீபத்தில் காலூன்றிய பகுதிகளில் கொசாங்க் பகுதியும் ஒன்று. ஆனால் தங்களுக்கும் இந்த பெண்கள் கடத்தப்பட்டு கற்பழிக்கப் பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தங்களை குறித்து மோசமான செய்திகளை பரப்ப காவல்துறை பரப்பும் பொய்ப் பிரச்சாரம் தான் அது என்றும் அவ்வியக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.