ஜார்கண்ட் கூட்டுப் படுகொலை வழக்கு: பாப்புலர் ஃப்ரண்ட் தலையீட்டால்  14 பேர் பிணை மனு தள்ளுபடி

0

கடந்த 2017, மே மாதம் 18 ஆம் தேதி, ஜார்கண்ட் மாநிலம் ஷோபாபூர் கிராமத்தில் குழந்தைகளை கடத்த முயன்றதாகக் கூறி நான்கு முஸ்லிம் கால்நடை வியாபாரிகள் வன்முறை கும்பலால் அடுத்துக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேருக்கு பிணை விண்ணப்பித்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த பிணை மனு மீது பாப்புலர் ஃப்ரண்ட் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படவே அவர்களின் பிணை மனு நிராகரிக்கப்பட்டது.

இவ்வழக்கில் மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் E.அபூபக்கர் தலைமையிலான குழு சென்று சந்தித்தது. அப்போது இவ்வழக்கில் அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளும் வழங்கப்படும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்தது.

பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில தலைவர்கள், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராக எந்த ஒரு வழக்கறிஞரும் கிடைக்கவில்லை என்றும் அனைவரும் இந்த வழக்கில் ஈடுபட அச்சத்தின் காரணமாக தயக்கம் காட்டி வந்தனர் என்று தெரிவித்துள்ளனர். பின்னர் தொடர்ச்சியான முயற்ச்சிகளுக்குப் பிறகு சிலர் இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக ஆஜராக சம்மதித்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் ஆஜராக ராஞ்சியில் இருந்தும் வழக்கறிஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் உதவியுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொருவரின் பிணை மனுவிற்கும் பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 14 பேர் தாக்கல் செய்த 9 பிணை விண்ணப்ப மனுக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு பிணை மனுவும் ஒரு முன்ஜாமீன் மனுவின் மீதான விசாரணையும் நிலுவையில் உள்ளது. இது ஒரு சிறிய வெற்றி தான் என்றும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை பாப்புலர் ஃப்ரண்ட்டின் சட்டப்போராட்டம் தொடரும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.