ஜார்கண்ட்: நான்கு குழந்தைகள் உட்பட 12 பேர் என்கௌண்டரில் கொலை

0

ஜார்கண்ட் மாநிலம் பலமாவ் மாவட்டத்தில் ஜூன் 8 இரவு நடைபெற்ற என்கௌண்டரில் நான்கு குழந்தைகள் உட்பட 12 நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்கள் மாவோயிஸ்ட்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர்களில் அனுராக் என்ற மாவோயிஸ்ட் கமாண்டரும் ஒருவர் என்று காவல்துறை மேலும் தெரிவித்தது. இரண்டு வாகனங்களில் மாவோயிஸ்ட்கள் வருவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தியதாகவும் அதில் முதல் வாகனம் பிடிபடாமல் சென்றாதாகவும் தெரிவித்தனர்.
இரண்டாவது வாகனத்தை வழிமறித்து அவர்களை சரணடைய கூறிய போது, வாகனத்தில் உள்ளவர்கள் காவல்துறையினரை நோக்கி சுட்டதால் என்கௌண்டர் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவர்களிடமிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் மேலும் கூறினர்.
கொலை செய்யப்பட்டவர்களில் குழந்தைகளும் இருப்பது குறித்து கேள்வி எழுந்தபோது, ‘தோட்டாகளுக்கு (சிறியவர், பெரியவர்) வித்தியாசம் தெரியாது. மாவோயிஸ்ட்களுடன் குழந்தைகள் இருந்தால் அவர்களும் கொலை செய்யப்படுவார்கள்’ என்று டி.ஜி.பி. டி.கே. பாண்டே தெரிவித்தார்.
ஆனால் காவல்துறையின் கூற்றுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. ‘இங்கு என்கௌண்டர் நடப்பதற்கான வாய்ப்புகளே இல்லை. காவல்துறையை சேர்ந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கொல்லப்பட்டவர்கள் மிக அருகில் இருந்து சுடப்பட்டது தெளிவாக தெரிகிறது’ என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Comments are closed.