ஜார்கண்ட் மாநிலம் அலிமுதீனை கொலை செய்த 11 பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை

0

ஜூன் மாதம் 29 ஆம் தேதி ராம்கார்க் பகுதியில் வைத்து பசு பாதுகாவல் குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட அலிமுதீன் கொலை வழக்கில்  12  பேர் குற்றவாளி என்று நிறுவப்பட்டது. அதில் ஒருவர் சிறாராக கருதப்பட்ட நிலையில் தற்போது இவ்வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜார்கண்ட் விரைவு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

இந்த கொடுஞ்செயலை புரிந்தவர்கள் தீபக் மிஸ்ரா, சோட்டு வெர்மா, சந்தோஷ் சிங், நித்யானந் மஹதோ, விக்கி சாவ், சிக்கந்தர் ராம், கபில் தாகூர், ரோஹித் தாகூர், ராஜூ குமார், விக்ரம் பிரசாத் மற்றும் உத்தம் ராம் ஆகியோர் ஆவர். இவர்கள் மீது இந்திய குற்றப் பிரிவு 147, 148, 149, 427 மற்றும் 302  ஆகிய பிரிவுகளில் கடந்த மார்ச் 16 ஆம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டது. குற்றவாளிகளில் தீபக், சோட்டு மற்றும் சந்தோஷ் ஆகியோரை இந்திய குற்றபிரிவு 120B இன் கீழும் நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்பளித்தது.

பசு பாதுகாப்பு என்கிற பெயரில் நாட்டில் பல கொலைகள் மற்றும் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டாலும் அந்த குற்றத்திற்காக குற்றவாளிகள் தண்டிகப்படுவது இதுவே முதல் முறை என்று வாதத்தரப்பு வழக்கறிஞர் சுஷில் குமார் சுக்லா தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீர்ப்பின் நகல் மாவட்ட சட்ட சேவை அதிகாரத்திடம் வழங்கப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் கொல்லப்பட்டவரின் மனைவிக்கு இழப்பீடு வழங்க முடியும் என்றும் நீதிபதி ஓம் பிரகாஷ் உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் வாத தரப்பு சார்பாக 19  சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டது. மேலும் சாட்சி கூற வந்த ஒருவரின் மனைவியும் மர்ம விபத்து ஒன்றில் நீதிமன்ற வளாகம் முன்பு கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் பாஜக மற்றும் ஏபிவிபியினர் முக்கிய குற்றவாளிகள் என்பதனால் அவர்கள் சாட்சியை அழிக்க முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை கொல்லப்பட்ட அலிமுதீனின் மனைவி மரியம் காத்துன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.