ஜார்கண்ட்: வீட்டில் இருந்த முஸ்லிம் இளைஞரை வெளியில் அழைத்து சுட்டுக் கொன்ற காவல்துறை

0

ஜார்கண்ட் மாநிலம் சாத்ரா மாவட்டத்தில் உள்ள பைப்பர்வார் பகுதியில் வசித்து வந்தவர் 19 வயதான முஹம்மத் சல்மான். கடந்த வெள்ளிக்கிழமை இரவு பத்துமணியளவில் சல்மானின் வீட்டில் இருந்த போது அங்கு வந்த காவல்துறையினர் சல்மானை வெளியில் அழைத்து தங்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

சல்மானின் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் அவர் எங்கே என்று கேட்டுள்ளனர். வீட்டில் இருந்த சல்மான் அவர்களிடம் என்னவென்று கேட்க அவரை அவரது வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.

காவல்துறையினரின் இந்த செயலை சல்மானின் தாயார் ஏன் என்று கேள்வி எழுப்பவே அந்த காவலர்கள் சல்மானிடம் சில கேள்விகளை தாங்கள் கேட்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆனால் சல்மானை அவரது வீட்டில் இருந்து அவர்கள் அழைத்துச் சென்றதுமே மூன்று முறை துப்பாக்கிச் சுடும் சப்தம் கேட்டுள்ளது. இதனை கேடு பதறியபடி வெளியே வந்த சல்மானின் குடும்பத்தினர் குண்டடி பட்டு கீழே சரிந்து கிடந்த சல்மானை காவல்துறையினர் இழுத்துச் செல்வதை கண்டுள்ளனர்.

சல்மானின் குடும்பத்தினர் அங்கு வந்ததை கண்டதும் அங்கிருந்து அந்த காவலர்கள் அவர்கள் வந்த வாகனத்தில் ஏரி தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சல்மானை கிராமத்தார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல, சல்மான் முன்னதாகவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவமனையில் கூறப்பட்டுள்ளது.

சல்மானின் கொலையை தொடர்ந்து அந்த கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. சுரங்க தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் பைபர்வார் மற்றும் அசோகா நிலக்கரி சுரங்கத்தில் தங்கள் பணிகளை செய்ய மறுத்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின்னணியில் இருப்பதாக கருதப்படும் ASI பிரேம் குமார் மற்றும் சல்மானின் வீட்டிற்கு வந்த காவலர்கள் கைது செய்யப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் சல்மானின் உடலை பிரதே பரிசோதனை செய்வதற்கும் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்று வருகிறது.

இரத்தத்தை உறைய வைக்கும் இந்த கொடூர கொலைக்கு காவல்துறை முதலில் என்கெளவுண்டர் சாயம் பூச முயற்சித்துள்ளது. ஆனால் தங்களின் கதையை இந்த கொலை விஷயத்தில் நம்ப வைப்பது கடினம் என்று அவர்கள் பின்வாங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் சில நிலக்கரி திருடர்களை காவல்துறையினர் துரத்திச் சென்றதாகவும் அந்த நேரத்தில் தவறுதலாக துப்பாக்கி சுட்டு விட்டதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. அப்படி தவறுதலாக சுடப்பட்டது என்றால் காவல்துறையினர் அவரை ஏன் மருத்துவமனையில் சேர்க்கவில்லை என்று பத்திரியையாளர்கள் கேட்ட கேள்விக்கு காவல்துறை தரப்பில் பதில் இல்லை.மேலும் சல்மானின் உடல் அருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் போது அங்கு எந்த காவலரும் இருந்திருக்கவில்லை.

அந்த காவலர்கள் சல்மானை சுடுவதற்கு அவர்களது பணியில் பயன்படுத்தும் துப்பாக்கியான INSAS ரக துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர். இன்னும் அவர்கள் சுட்ட துப்பாக்கிக் குண்டுகளின் காலி தோட்டாக்களும் அந்த இடத்தில் இருந்து பெறப்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி காவல்துறை கண்காணிப்பாளர் சத்ரா பைப்பர்வார் காவல்நிலைய அதிகாரி வினோத் சிங் மற்றும் மேலும் ஐந்து காவலர்களை பணிநீக்கம் செய்துள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஒரு காவலரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த சல்மானின் தந்தை அப்துல் ஜப்பார் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கையில்,

ஒரு நாள் முன்பு தான் சல்மான் தனது மாத ஊதியத்தை பெற்றார் என்றும் ஈத் திருநாளை ஒட்டி புதுத் துணிகள் மற்றும் புதிய காலணிகளை அவர் வாங்கியிருந்தார். அந்த நாளே காவல்துறையினர் அவரை கொலை செய்துவிட்டனர்

என்று கூறியுள்ளார்.

இந்த கொலை குறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில், “இது ஒரு இரக்கமற்ற படுகொலை. சல்மானை சுட்டுவிட்டு அவர்கள் ஓடிவிட்டனர். இந்த நிகழ்வு குறித்து காவல்துறையிடம் நாங்கள் கேள்வி எழுப்பினோம். ஆர்கள் எங்களை திசைதிருப்ப பார்கின்றனர். “ என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த கிராமம் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கிராம மக்களை நிர்வாகம் அமைதி படுத்தினாலும் முறையான நடவடிக்கை எடுக்காதவரை அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments are closed.