‘ஜிகாத்’ என்று கூறியதற்காக ஒருவரை பயங்கரவாதியாக அறிவிக்க முடியாது – நீதிமன்றம் உத்தரவு!

0

மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து, அந்த பிரச்சினையில் அப்துல் ரசாக் (வயது 24), சோயீப் கான் (24), சலீம் மாலிக் (26) ஆகியோர் பணியில் இருந்த போலீசாரை தாக்கியதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு நடந்தது.

மேலும் கைதான 3 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் மற்றும் மும்பை போலீஸ் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கடுமையான சட்டப்பிரிவுகளை நீக்கக்கோரி அவர்கள் அகோலா சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று நீதிபதி ஏ.எஸ்.ஜாதவ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அதில் கைதான 3 பேரும் முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்க சதி செய்ததாக பயங்கரவாத தடுப்பு படை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தடையை மீறி மாட்டு இறைச்சி பிரச்சனை தொடர்ந்து, அப்துல் ரசாக் அரசுக்கு எதிராகவும், வன்முறையில் ஈடுபட்டு கோபத்தை வெளிப்படுத்தியதாகவும், அவர் ‘ஜிகாத்’ என்று கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கு நீதிபதி ஏ.எஸ்.ஜாதவ் கூறியதாவது:-

“குற்றச்சாட்டப்பட்ட அப்துல் ரசாக் ‘ஜிகாத்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியாக போலீசார் தெரிவித்து உள்ளனர். ஜிகாத் என்றால், அரபு மொழியில் போராட்டம் என்று தான் அர்த்தம். எனவே ஒருவர் ஜிகாத் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக மட்டும், அவரை பயங்கரவாதியாக சித்தரித்து விட முடியாது” என்று நீதிபதி கூறினார்.

Comments are closed.