ஜிக்னேஷ் மேவானிக்கு SDPI நிதியளித்ததாக பாஜக அவதூறு: வழக்கு தொடரப்போவதாக ஜிக்னேஷ் பதில்

0

குஜராத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக களம் இறங்கிய தலித் சமூக தலைவர் ஜிக்னேஷ் மேவானி மீது பாஜக அவதூறுகளை அள்ளித்தெளித்து வந்தது. இதில் ஒரு பகுதியாக ஜிகேன்ஷ் மேவானியின் தேர்தல் செலவுகளுக்கு SDPI கட்சி பணம் கொடுத்ததாக பாஜக தலைவர் சம்பித் பத்ரா கூறினார்.

சனிக்கிழமையன்று பத்திரிகையாளர்களை அகமதாபாத்தில் வைத்து சந்தித்த பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ஜிக்னேஷ் மேவானிக்கு தேர்தல் நிதி அளித்ததாக SDPI ஒப்புக்கொண்டுள்ளது என்று கூரியுள்ளார். மேலும் இவ்விஷயம் தொடர்பாக காங்கிரஸ் ஏன் அமைதி காக்கிறது என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர், “மேவானிக்கு SDPI பொருளாதார உதவி அளித்தது தொடர்பாக காங்கிரஸ் அமைதி காப்பது மிக ஆபத்தானது. அது மட்டுமல்ல மேவானிக்கு ஆதரவாக காங்கிரசஸ் பிரச்சாரம் செய்தும் வருகிறது.” என்று அவர் கூறினார்.

மேலும் கூறிய அவர், பாப்புலர் ப்ரண்ட் தீவிரவாத அமைப்பு என்று பாஜக அல்ல தேசிய புலனாய்வுத்துறை கூறுகிறது. சமீபத்தில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை ஒன்றையும் NIA தாக்கல் செய்துள்ளது என்று சம்பித் பத்ரா கூறியுள்ளார். இவரது இந்த கூற்றை கடுமையாக மறுத்த பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா தங்களை NIA தங்களது நடவடிக்கை தொடர்வாக இதுவரை அணுகவே இல்லை என்று கூறியுள்ளது.

சம்பித் பத்ராவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜிக்னேஷ் மேவானி குஜராத் தேர்தல் முடிவடைந்ததும் பாஜகவிற்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் CROWD FUNDING முறையில் தங்களுக்கான நிதியை சேகரிப்பதாகவும் அதில் யார் வேண்டுமானாலும் தங்களது கட்சிக்கு அவர்களது பங்களிப்பை கொடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “யார் வேண்டுமானாலும் எங்கள் கட்சிக்கு நிதியுதவி செய்யலாம். கருப்புப்பணம் மற்றும் ஊழலை அனுமதித்து சில கார்பரேட்களை மற்றும் வளரவிடும் சக்தி எங்களது நிதி ஆதாரத்தை குறித்து கேள்வி எழுப்புகிறது” என்று அவர் கூறியுள்ளார். இன்னும் “சட்டமன்ற தேர்தல்கள் முடிவடையட்டும், பாஜக விற்கு எதிராக நான் மான நஷ்ட வழக்கு பதிவு செய்யப் போகிறேன். அவர்கள் நான் தீவிரவாத இயக்கங்களிடம் இருந்து நிதியுதவி பெற்றதாக கூறுகின்றனர். நான் உங்களிடம் ஒன்று கூறுகிறேன், நான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடம் இருந்து எந்த நிதியும் வாங்கவில்லை. இந்த சக்திகள் குப்பைத் தொட்டியில் போடப்பட வேண்டியவை” என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.