ஜியோ – வரமா சாபமா?

0

தொலை தொடர்பு நிறுவனங்களின் தூக்கத்தை கெடுத்துள்ள அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சேவை பற்றிய அறிவிப்பு. பலதரப்பட்ட மக்களாலும் தொலைதொடர்பு நிறுவனங்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட ஜியோ சேவை குறித்த அந்த அறிவிப்புகளை முகேஷ் அம்பானி இன்று வெளியிட்டுள்ளார்..

2016 ஆம் ஆண்டு இறுதிவரை இலவச இணைய இணைப்பு, இந்தியா முழுவதுமான ரோமிங் கட்டணமற்ற இலவச தொலைபேசி அழைப்புகள், 1Gb 50 ரூபாய், மாணவர்களுக்கு 25% கூடுதல் இணைய பயன்பாடு, மற்றும் இதர சேவைகளான திரைப்படங்கள், தொலைகாட்சி தொடர்கள், என்று பல சலுகைகளை அள்ளி வீசியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இந்த ஜியோ சேவையின் அறிவிப்பினால் போட்டி நிறுவனங்களின் பங்குகள் ஏறத்தாள 12000 கோடி ருபாய் நஷ்டமடையும் அளவிற்கு இந்த அறிவிப்பு அமைந்துள்ளது என்றால் இது எத்தகைய எதிர்பார்ப்புள்ள அறிவிப்பு என்பது விளங்கும்.
இலவசங்களால் ஈர்க்கப்படும் நம் மக்களின் மனோபாவமும் ஜியோ வின் இந்த வெற்றிக்கு ஒரு காரணம் என்றாலும் அது மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. பொதுவாக இலவசங்களை விரும்பி ஒரு பொருளை வாங்குபவர்கள் அந்த இலவசங்களின் கால அளவு முடிந்ததும் அப்பொருளை தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் ஜியோவின் விஷயத்தில் அவ்வாறல்ல. மக்கள் ஜியோவை வரவேர்ப்பதற்கு காரணம் முன்னர் இந்த சேவைகளை வழங்கிக் கொண்டிருந்த நிறுவங்கள் ஆடிய ஆட்டங்களும் தங்களது வாடிக்கையாளர்களிடம் நடத்திய சுரண்டல்களும் தான்.

காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு மக்களுக்கு பயன்படும் சேவைகளை வழங்காமல் ஏற்கனவே அதிக விலையில் கொடுக்கும் இணைய சேவைகளின் மூலம் அவர்கள் பெரும் லாபம் போதாதென்று வேறு எவ்வாறெல்லாம் மக்களை சுரண்டுவது என்றே திட்டம் தீட்டினர். இணைய இணைப்பை தனித்தனியாக பிரித்து வாட்ஸ்சப் போன்ற சேவைகளுக்கு ஒரு தனி கட்டணம், ஸ்கைப் போன்ற வீடியோ அழைப்பு சேவைகளுக்கு தனி கட்டணம், இணையவழி தொலைபேசி அழைப்புகளுக்கு தனிக் கட்டணம் என்று தனித்தனியாக பிரித்து கூட தங்களின் இலாபப் பசியை அடக்க முடியுமா என்று எண்ணினர். இவர்களின் இத்தகைய திட்டத்திற்கு மக்களிடம் இருந்து பெரிதும் எதிர்ப்புகள் கிளம்பவே  தங்களது அந்த முயற்சியை கைவிட்டனர்.

இதனை ரிலையன்ஸ் ஒரு பாடமாக எடுத்துகொண்டதோ என்னவோ, அது ஜியோ சேவை மூலம் சரியான திசையில் தங்கள் காய்களை நகர்த்தியுள்ளது. இதற்கு முன்னர் பிற தொலை தொடர்பு நிறுவனங்கள் எது தங்களுக்கு நஷ்டமளிக்குறது என்று கூறினார்களோ அதுவே நேற்றைய ஜியோ அறிவிப்பின் பிரதானங்களில் ஒன்றாக உள்ளது. இணைய வழி அழைப்புகள், அதுவும் முற்றிலும் இலவசம். இனி வரும் காலம் மக்கள் முற்றிலும் இணையம் சார்ந்தே இருக்கப் போகின்றனர் என்று உணர்ந்து மக்கள் எதை விரும்புவார்கள் என்று அறிந்து அதனை மக்களுக்கு கொடுத்துள்ளது இந்த ஜியோ சேவை.

 

ஜியோ சேவை அனைத்தும் இணையதளத்தை மையப்படுத்தி இருக்கும். இன்னும் வர இருக்கும் தொழில்நுட்பங்களான 5G, 6G முன்னேற்றங்களையும் தங்கள் பயனாளர்களுக்கு வழங்குவோம் என்ற அளவிற்கு ஜியோ சேவையை வருங்காலத்திற்கு ஏற்ப வடிவமைத்துள்ளனர். அடுத்தபடியாக FTTH எனப்படும் வீடுகளுக்கான ஃபைபர் மூலமாக 1Gbps வேக இனைய இணைப்புகளை வழங்குவது, 300 சானல்களை கொண்ட ஜியோ தொலைக்காட்சி என்று தொலை தொடர்பு சேவையை காலத்திற்கு ஏற்ப அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது ரிலையன்ஸ்.

தற்போது தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை உணர்ந்து தங்களது வாடிக்கையார்களை தக்க வைக்க அலைபேசிக்கான டேட்டா பாக்குகளின் விலையை அதிரடியாக குறைத்து வருகின்றன ஏர்டல், ஐடியா, வோடஃபோன் போன்ற நிறுவனங்கள். ஆனாலும் இது இவர்களுக்கு எந்த அளவிற்கு பயன் தரும் என்று தெரியவில்லை. Mobile Number Portability எனப்படும் அலைபேசி எண் மாற்றும் சேவையும் ஜியோவிற்கு வழங்கப்பட்டால் இவர்களின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடக்கூடும். இனி இவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்ப அவர்களின் எதிர்காலம் கணிக்கப்படும்.

ஒரு வேலை ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டபடி எல்லாம் அவர்கள் கை கூடி வந்தால்? இதர தொலைதொடர்பு நிறுவனங்களில் பல ரிலையன்ஸுடன் இணைக்கப்படும். சில நிறுவனங்கள் மூடப்படலாம்.

ஜியோ அறிவிப்புகளின் போது அம்பானியின் கூறியது போல 90% இந்தியர்கள் ஜியோவின் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் என்ற அவரது இலக்கு நிறைவேறினால் அடுத்து நிகழப்போவது ஒற்றை தொலைதொடர்பு நிறுவனம் ஒன்றின் மன்னாரட்சியாகத் தான் இருக்க முடியும். புரியும் படி கூறவேண்டும் வேண்டுமானால் அடுத்து அவர்கள் வைத்தது தான் சட்டம், அவர்கள் நிர்ணயிப்பது தான் கட்டணம். எதிர்த்து கேட்கவும் முடியாது, சேவையை மாற்றவும் முடியாது. மாற்ற நினைத்தால் மாற சேவைகளும் இருக்காது. அப்படியே இருந்தாலும் அதுவும் வேறு பெயர் கொண்ட ரிலையன்ஸின் சேவையாக இருக்கும். (கண்ணாடி சந்தையில் Luxotica வின் பங்கு குறித்து தெரிந்தவர்களுக்கு இதனை புரிந்துகொள்வது எளிது). இவை அனைத்தும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நோக்கம் மக்களின் பணத்தை மக்களிடம் இருந்தே பெறுவதாக மட்டுமிருந்தால்.

இல்லாமல் மக்களுக்கு வழங்கும் சேவைகளுக்காக வேறு யாரிடம் கட்டணம் வசூலிக்க முடியும்? மக்களுக்கு சேவைகளை இலவசமாக அல்லது குறைந்த விலையில் கொடுத்து மக்களிடம் இருந்து வேறு தகவல்களை பெற்று அதனை அதிக விலை தருபவர்களுக்கு (வியாபார நிறுவனங்கள், அரசு?) விற்பது மூலம்? இன்னும் சொல்லபோனால் தனக்கு போட்டியற்ற நிலை ஏற்பட்டால் இந்தியாவின் இணையதள வாயிற்காப்பாலராக ரிலையன்ஸ் நிறுவனம் மாறக்கூடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இரண்டு விபரீதங்கள் ஏற்படலாம். ஒன்று சீனா, வட கொரியா, தற்பொழுது ஈரான் போன்ற நாடுகளை போல கட்டுப்படுத்தப்பட்ட இணையதளம் இந்தியாவில் வழங்கப்படலாம். ஆனால் அப்படி ஒன்று நடந்தால் இந்திய மக்களிடம் பெரும் அதிருப்தி அலைகளை அது ஏற்படுத்தும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இப்படி ஒரு கட்டப்பாடு விதிக்கப்பட வாய்ப்புகள் மிக மிக மிகக் குறைவு தான். ஆனாலும் சமீபத்தில் வெளியான தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்வையிட்டால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்ற செய்தி நமக்கு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. மேலும் தற்போதுள்ள அரசு போன்ற ஒரு அரசின் கீழ் அது எடுக்கும் எத்தகைய மக்கள் விரோத கொள்கைகளையும் மக்களுக்கு சிறந்தது போல் திரித்து பரப்பும் அறிவு ஜீவிகளும் அதனை கேள்விகளற்று அப்படியே ஏற்றுக்கொள்ளும் கொள்கை வேந்தர்களும் இருக்கும் வரையில் இதுவும், எதுவும் சாத்தியம் தான்.
இரண்டாவது விபரீதம், Mass Surviellance. ஒரு தேசத்தின்  90% பயனாளர்களின் இணையதள இணைப்பை வளங்குபவர்களிடம் எத்தகைய ஒரு சக்தி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எட்வார்ட் ஸ்நோடனை அறிந்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். புரியாதவர்களுக்கு உங்களது செல்ஃபி களின் ஒவ்வொரு சிரிப்பும், உங்களது ஒவ்வொரு நள்ளிரவு அழைப்பும், உங்கள் மூன்றாம் நான்காம் மின்னஞ்சல் முகவரிகளின் பரிமாற்றங்களும், நீங்கள் மறக்காமல் அழித்துவிடும் பிரவ்சர் ஹிஸ்டரிகளும் பதிவு செய்யப்படும் என்பதே. உணகளுக்கு இணைய இணைப்பு வழங்குபவரான ISP ஆகவும், அதே நேரம் Internet Gateways எனப்படும் தேசத்தின்இணையதள வாயிற்காப்பாலராகவும் ஒருவரே இருந்தால் அவர்களை தாண்டிச் செல்லும் அனைத்து தகவல்களும் அவர்களின் கருணையில் விடப்படும். அதாவது உங்களது சந்தோசம், துக்கம், கோபம் ஆறுதல் என அனைத்தும் பட்டியலிடப்பட்டிருக்கும்.

கூகிள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் இலவச இணைய இணைப்பு வழங்க முன் வந்ததும் வருவதும் இதற்காகத்தான் – Data Mining. உங்களை குறித்து சேகரிக்கப்படும் இத்தகவல்கள் உங்களது அதார் கணக்குடன் இணைக்கப்பட்டால் Personal Profiling என்பதை இந்த ஒரு திட்டம் மிக மிக எளிமையாக்கிவிடும். இணைய இணைப்பிற்காக நீங்கள் குறைந்த கட்டணம் செலுத்தினாலும் உங்களது தகவல்கள் மூலம் அதற்காக மாபெரும் விலையை கொடுக்க நேரிடும்.

இவை அனைத்தும் மிகுந்த அச்ச உணர்வில் கூறப்படும் எச்சரிக்கையாக தோன்றினாலும் இவை அனைத்திற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். இவை நிறைவேற்றப்படுவதற்கு குறிப்பிட்ட அரசோ அல்லது கேள்விகளற்று கேட்டதை பரப்பும் கொள்கைத் தொண்டர்களோ தேவையில்லை. அதிகார ஆசை கொண்ட எந்த அரசும் இதனைத் தான் விரும்பும். மக்களின் கண் துடைப்பிற்காக சில சட்டங்கள் இவை நடைபெறாமல் தடுக்கும் என்று கூறப்படலாம். ஆனால் தற்போது உடைக்கப்படும் சட்டங்களின் ஓசையில் அந்த கூற்று ஒலி இழந்து போகும்.

இறுதியில் நம் அனைவருக்கும் விளங்கும், “எதுவும் இலவசமல்ல”

Comments are closed.