ஜூனைத் கான் கொலை வழக்கு: குற்றவாளிகளை தப்புவிக்க முயலும் அரசு வழக்கறிஞர்

0

கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி ஓடும் ரயிலில் 15 வயது ஹாஃபிழ் ஜுனைத் கான் கொலை செய்யப்பட்டார்.(பார்க்க செய்தி) இவர்களை தாக்கியவர் இவர்களை தேச விரோதிகள் என்றும் மாட்டிறைச்சி உண்பவர்கள் என்றும் கூறி தாக்கினர். தற்போது நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தப்புவிக்க அரசு வழக்கறிஞர் முயற்சி செய்கின்றார் என்று வழக்கை விசாரித்த நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி, கூடுதல் வழக்கறிஞர் நவீன் கெளஷிக் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான நரேஷ் குமாருக்கு உதவுகிறார் என்று ஒரு இடைக்கால உத்தரவு மூலம் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி Y.S.ரத்தோர் தெரிவித்துள்ளார். மேலும் நவீன் கெளஷிக் இவ்வழக்கு குறுக்கு விசாரணையின் போது சாட்சியங்களிடம் என்னென்ன கேள்விகள் கேட்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார் என்றும் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

“வழக்கறிஞர் நவீன் கௌஷிக்கின் இந்த செயல் தொழில் ரீதியிலான முறைகேடு மற்றும் இது சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது. இத்தகைய ஒரு செயலை ஒரு வழக்கறிஞரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது, குறிப்பாக இவர் சட்ட அதிகாரியாகவும், ஹரியானா மாநில கூடுதல் Advocate General ஆகவும் இருப்பதனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று நீதிபதி ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இது மிக முக்கியமான வழக்கு என்பதாலும் இதில் கொல்லப்பட்டிருப்பது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த சிறுவன் என்பதாலும் மேலும் அவரை கொலை செய்தவர்கள் மத ரீதியிலான அவதூறுகளை கூறியவாறு அச்சிருவனை தாக்கிய நிலையில் வழக்கறிஞர் கெளஷிக் கொலையாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது தவறான கருத்துக்களை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் என்றும் இது சுதந்திரமான மற்றும் நடுநிலையான விசாரணை நடத்துவதற்கு தடையாக இருக்கும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதனால் வழக்கறிஞர் கெளஷிக் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கும், மாநில அரசு மற்றும் Advocate General அலுவலகத்திற்கும் பஞ்சாப் மற்றும் ஹரியானா பார் கவுன்சிலுக்கும் கடிதம் எழுத்தப்பட வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஆனால் தன் மீது சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டு உண்மையற்றது என்றும் தான் எதிர்தரப்பினருக்கு உதவவில்லை என்றும் இந்த வழக்கிற்கும் தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் நவீன் கௌஷிக் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹரியானா அட்வோகேட் ஜெனெரல் பல்தேவ் ராஜ் மஹாஜனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது தனக்கு இது தொடர்பாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை என்றும் தன் கவனத்திற்கு இந்த விஷயம் முறையாக கொண்டுவரப்பட்டால் அது தொடர்பாக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் அட்வோகேட் ஜெனெரலாக பணியாற்றுபவர்கள் தனியாக வழக்குகளில் பங்கெடுப்பது தடுக்கப்படவில்லை. ஆனால் அரசு ஒரு கட்சியாக உள்ள எந்த வழக்கிலும் அவர்கள் பங்கெடுக்க முடியாது. ஜுனைத் கான் வழக்கோ நரேஷ் குமார் எதிர் ஹரியானா மாநில அரசாகும். இப்படியிருக்க நவீன் கௌஷிக் இந்த வழக்கில் பங்கு பெறக் கூடாது என்று நீதிபதி ரத்தோர் உத்தரவு பிறப்பித்தும் அவர் நீதிமன்றத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆஜராகியுள்ளார். இதனை நீதிபதி ஆட்சேபிக்கவே இந்த வழக்கு நிலவரங்களை கண்டு தெரிந்துகொள்ள மட்டுமே தான் வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையும் நீதிபதி ஆட்சேபிக்க அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஜுனைத் கான் கொலை வழக்கை சிதைக்க பல முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்று ஜுனைதின் தந்தை தரப்பில் கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையிலேயே அரசு வழக்கறிஞர் நவீன் கௌஷிக்கின் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. மேலும் இந்த வழக்கில் குற்றம் புரிந்தவர்களே சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் சாட்சியங்களின் வாக்குமூலங்களில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கொடுத்து வழக்கை சிதைக்க முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராமேஷ்வர் தாஸின் பிணை மனுவை நிராகரிக்கையில் இதனை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக நீதிபதியால் கண்டிக்கப்பட்ட வழக்கறிஞர் நவீன் கௌஷிக்கிற்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இருப்பது தற்போது செய்திகளில் வெளியாகியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் பாஜக அரசு அமைத்ததும் ஹரியான அரசு வழக்கறிஞர் குழுவில் சேர்க்கப்பட்ட முதல் சில வழக்கறிஞர்களில் நவீன் கௌஷிக்கும் ஒருவர். மேலும் இவர்தனது சிறுவயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்பில் இருந்தவர் என்றும் பல்வேறு தொலைகாட்சி விவாதங்களில் பாஜக தரப்பில் கலந்துகொண்டவர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

Comments are closed.