ஜூனைத் கான் படுகொலை: வழக்கை CBI க்கு மாற்ற ஹரியானா உயர்நீதிமன்றம் மறுப்பு

0

ஓடும் ரயிலில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட 16 வயது சிறுவன்  ஹாஃபிழ் ஜுனைத் கானின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற ஜுனைத் கானின் தந்தை அளித்த மனுவை பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இது குறித்து இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜன் குப்தா கூறுகையில், “இந்த வழக்கின் விசாரணையில், தற்போது நடைபெற்றுவரும் விசாரணையில் முறை கேடு நடைபெறுகிறது என்பதற்கு எந்த ஒரு பெரிய குறைகளையும் மனுதாரரால் சுட்டிக் காட்ட முடியவில்லை. மேலும் இந்த சம்பவத்தில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளைவுகளை ஏற்படுத்தும் அளவிற்கு எதுவும் இல்லை. அதனால் இது சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்படும் அளவிற்கு தகுதியான வழக்கல்ல.” என்று கூறியுள்ளார்.

ஜுனைத் கானின் தந்தை அளித்த மனுவில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 153A (மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்துவது), 153 B (தேசிய ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைவிப்பது), 120 B (கிரிமினல் சதித்திட்டம் தீட்டுதல்), மற்றும் 149 (சட்டவிரோத ஒன்றுகூடல்) ஆகிய பிரிவில் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் இந்த வழக்கை விசாரிக்கும் மாநில காவல்துறை விசாரணை முறையில் குறை உள்ளது என்றும் கூறியிருந்தார்.

இவரின் இந்த மனுவிற்கு மாநில அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை இது வரையில் நீதியுடன் பாராபட்சமின்றியும் நடைபெற்றுள்ளது என்றும் கூறியது. இந்த இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை தாமதப்படுத்தவில்லை என்றும் இந்த விசாரணையை துரிதமாக நடத்திவருகிறது என்றும் கூறி மாநில அரசின் தரப்பு கூறியதை ஏற்றுக்கொண்டது.

இது குறித்து நீதிமன்றம் கூறுகையில், “ மனுதாரர் தரப்பு மற்றும் மாநில அரசின் தரப்பு வாதங்களை கேட்கப்பட்டது. ஆயினும் இது தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் கூறி இந்த பிரச்சனைக்குள் மேலும் செல்ல இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. இந்த வழக்கின் விசாரணை முக்கியமான கட்டத்தில் உள்ளது. மேலும் இவ்வழக்கின் விசாரணைகள் தங்கள் தரப்பு வாக்குமூலங்களை அளிக்க வேண்டியுள்ளது. இதில் காயமடைந்த சிலரும் இருக்கலாம். அதனால் இந்த வழக்கு விசாரணை சரியான நோக்கத்துடன் செல்கிறது என்றும் ஆதாரங்கள் இதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்வது அவசியம். இந்த வழக்கு விசாரணையில் நியாயமான முடிவுக்கு விசாரணை நீதிமன்றம் வரும் என்பதில் இந்த நீதிமன்றத்திற்கு எந்த வித சந்தேகமும் இல்லை.” என்று கூறியுள்ளது.

முன்னதாக கூடுதல் செஷன்ஸ் நீதிபதி Y.S.ரத்தோர் கடந்த மாதம், மாநில கூடுதல் அட்வோகேட் ஜெனெரல் நவீன் கௌஷிக் குற்றவாளிகள் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞருக்கு உதவுகிறார் என்று குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. (பார்க்க செய்தி)

Comments are closed.