ஜூன் 20  உலக அகதிகள் தினம்

0

 – செய்யது அலீ

ஜூன் 20, ஆண்டுதோறும் உலக அகதிகள் தினமாக நினைவு கூறப்படும் நாள். அகதி எனும் வார்த்தைக்கு திட்டவட்டமாக ஒரு வரையறை கிடையாது. தான் வாழும் பிரதேசத்தை விட்டு அகன்றவர்களை அகதிகள் என்று பொதுவாக கூறுவார்கள். 1951ம் ஆண்டின் அகதிகளின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை, அகதிகள் பற்றி கீழ்க்கண்டவாறு வரைவிலக்கணம் வகுத்துள்ளது.

‘அகதி என்பது, இனம், சமயம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்மை, அரசியல் கருத்து என்பவை காரணமாக குற்றம் சாட்டப்பட்டவரும், அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும் அந்நாட்டினுடைய பாதுகாப்பை பெற முடியாத அல்லது பயம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாதவருமான ஒருவரைக் குறிக்கும்’.

பின்னர் நடந்த இணைப்புகள் மற்றும் ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடந்த பிரதேச மாநாடுகளில் இந்த வரைவிலக்கணம் விரிவாக்கம் பெற்றது. அதன்படி, ‘சொந்த நாட்டில் நடைபெறும் போர் அல்லது வேறு வன்முறைகள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறுபவர்களும் அகதிகள்’ என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தற்போதைய கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் சுமார் நான்கு கோடிக்கும் மேற்பட்ட அகதிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டு உயிர் வாழ்கின்றனர். இன்று ஆப்கான், பர்மா, ஃபலஸ்தீனம், சிரியா போன்ற நாடுகளில் இருந்து நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.

அகதிகள் சந்திக்கும் கொடூர சூழலை ஆசிய நாடுகளிடம் புகலிடம் கேட்டு கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதுமட்டுமல்ல, ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக நினைவு கூறப்படும் அகதிகள் தினம் என்பது வெறும் சடங்கே என்பதை ரோஹிங்கியா அகதிகள் விவகாரத்தில் உலக நாடுகளும், ஐ.நா.வும் காட்டும் மௌனமும், மெத்தனமும் நமக்கு எடுத்தியம்புகின்றன.

கடலில் தத்தளிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்

உலகில் மிகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மை சமூகம் என்று ரோஹிங்கியா முஸ்லிம்களை சர்வதேச ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் வர்ணிக்கின்றன. மியான்மர் அரசு மற்றும் அதன் ஆதரவுடன் செயல்படும் புத்தமத தீவிரவாதிகளின் தலைமையில் பல்லாண்டுகளாக மிகவும் கொடூரமான துயரங்களை ரோஹிங்கியா முஸ்லிம்கள் அனுபவித்து வருகின்றனர்.

மியான்மர்  வங்காளதேச எல்லையில் அமைந்துள்ள அராகான் மாகாணத்தில்தான் பெரும்பாலான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். 20 லட்சம் மக்கள் தொகையில் ஏறத்தாழ 12 லட்சம் பேர் அகதிகளாக உள்ளனர். சவூதி அரேபியா, பாகிஸ்தான், வங்காளதேசம், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அவர்கள் அகதிகளõக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள்தாம் புத்த தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர்.

உலகில் எந்தவொரு நாடும் அக்கறை செலுத்தாத சமூகமாக அவர்கள் உள்ளனர். முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மியான்மர் அரசு ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு குடியுரிமையை மறுத்து வருகிறது. இது உலகின் அபூர்வமான விஷயம். ரோஹிங்கியா முஸ்லிம்கள் சந்திக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து விளக்கும் அறிக்கையொன்றை 2013ம் ஆண்டு ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற அமைப்பு வெளியிட்டது. மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இவ்வுலகின் ஒரு பகுதியில் நடக்கும்போது சர்வதேச சமூகம் காட்டும் மௌனத்தை வெளிச்சம் போட்டு காட்டும் அந்த அறிக்கையின் தலைப்பு, அடூடூ தூணித ஞிச்ண ஞீணி டிண் ணீணூச்தூ என்பதாகும்

புத்த தீவிரவாதிகள், அஷின் விராது என்ற விஷத்தை கக்கும் ஒரு புத்த சன்னியாசியின் தலைமையில் ரோஹிங்கியா முஸ்லிம்களை தாக்குகிறார்கள். அவர்களுடைய வீட்டை தீக்கிரையாக்குகின்றனர். அமெரிக்க எழுத்தாளர் நிகோலஸ் கிறிஸ்டோபர் “ரோஹிங்கியா மக்கள் அரக்கான் மாவட்டத்தில் வசிக்கின்றனர். பர்மா வம்சாவழியினர் அரக்கானை ஆக்கிரமித்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால், மியான்மர் அரசு ஒன்றரை லட்சம் ரோஹிங்கியாக்களை வதை முகாமில் அடைத்துவைத்துள்ளது. அங்கு நான் சென்றிருந்தேன். பட்டினி கிடக்கும் குழந்தைகளையும், சிகிட்சை கிடைக்காத ரோஹிங்கியாக்களையும் நான் அங்கே கண்டேன்” என்கிறார்.

ரேஹிங்கியா முஸ்லிம்களைக் குறித்து இங்கே குறிப்பிடுவதற்கான காரணம் உண்டு. பிறந்த மண்ணில் கொடுமைகளை தாங்க முடியாமல் தப்பித்த ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் படகில் மலேசியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையேயான கடல் பகுதியில் அலைந்து திரிகின்றனர். ஆனால், நாட்டின் உள்ளே நுழைய இந்தோனேஷியா இராணுவம் அனுமதிக்கவில்லை. அதற்கு பதிலாக உணவையும், தண்ணீரையும் அளிக்க அவர்கள் முன்வந்தனர்.

மலேசியாவை நோக்கிச் சென்றால் அந்த நாடும் அவர்களை ஏற்றுக்கொள்ள தயாரில்லை. இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடலில் அலைந்து திரிபவர்களும் அவர்களில் உண்டு என்கிறார் ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் பிரதிநிதி ஃபில் ராபர்ட்ஸன். இவர்களை அனுமதித்தால், லட்சக்கணக்கானோர் தொடர்ந்து வருவார்கள். அவர்களையெல்லாம் ஏற்றுக்கொள்ள இயலாது என்று இந்தோனேஷியாவும், மலேசியாவும் நியாயம் கூறுகின்றன.

அகதிகளை ஏற்றுக்கொள்வது, அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக 1951ம் ஆண்டு ஐ.நா. மாநாட்டின் தீர்மானத்தின்படி பாதுகாப்பையும், பராமரிப்பையும் பெறுவதற்கான சமூகம்தான் ரோஹிங்கியாக்கள். ஆனால், இந்தியா, வங்காளதேசம், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட மியான்மருக்கு அருகில் உள்ள நாடுகள் இந்த தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்பது அந்த சமூகத்தின் துயரங்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவை போன்ற சர்வதேச முகமைகள் இவ்விவகாரத்தில் முற்றிலும் தோல்வியை தழுவியுள்ளன. சர்வதேச ஊடகங்கள் இதற்கு ஒரு முக்கியத்துவமும் அளிப்பதில்லை.

தாங்கள் ஏற்றுக்கொண்ட நம்பிக்கையின் பெயரால் ரோஹிங்கியாக்கள் கொடுமைகளுக்கு ஆளாகும்போது சர்வதேச முஸ்லிம் சமூகமும் இவ்விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. துருக்கி பிரதமர் அஹ்மது தாவூத் ஓக்லு வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது 2013 நவம்பரில் மியான்மரின் அராக்கான் மாகாணத்திற்கு

சென்று ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமைகளை நேரில் கண்டறிந்தவர். துருக்கி ஓரளவுக்கு இவ்விவகாரத்தில் தலையிடுகிறது. அதற்கு அப்பால் சர்வதேச சமூகத்தின் கவனம் செல்லவில்லை.

ஐ.நா.வின் அறிக்கைப்படி அரசு ஆதரவுடன் புத்த தீவிரவாதிகள் நடத்தும் அட்டூழியங்களில் இருந்து தப்பித்து ஒன்றேகால் இலட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் கடல் வழியாக புலன் பெயர்ந்துள்ளனர். பலரும் ஆட்களை கடத்தும் கடத்தல்காரர்களின் பிடியில் சிக்குகின்றனர். கொடுமைக்கு ஆளாகின்றனர். அடிமைகளாக விற்கப்படுகின்றனர். தாய்லாந்தின் வதை முகாம்களில் விடுதலைக்கான ஈட்டுப்பணத்திற்காக பட்டினி போட்டு வதைக்கப்படுகின்றனர்.

அண்மையில் தாய்லாந்து காவல்துறை அத்தகையதொரு முகாமில் ஒரு கூட்டுக் கல்லறையை கண்டுபிடித்தது. தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகள் அவர்களை விரட்டியடிக்கின்றன. தெற்காசியாவில் எந்த தேசமும் அவர்களிடம் கருணை காட்டவில்லை. லிபியாவில் இருந்து மத்திய தரைக் கடலை கடக்கும் அகதிகளை ஐரோப்பிய நாடுகள் கடல் படையினரை பயன்படுத்தி காப்பாற்றுகின்றனர்.

ஆனால், ஆசிய நாடுகள் ரோஹிங்கியா முஸ்லிம்களிடமும் கொடூரமான முறையில் நடந்து கொள்கின்றனர்.

1939ம் ஆண்டு நாசிகளிடமிருந்து தப்பிக்க முயன்ற யூத அகதிகளுடன் கடலில் புறப்பட்ட எஸ்.எஸ். செயிண்ட் லூயிஸ் கப்பலின் கதையை பலர் மறந்திருக்கலாம். அன்று அமெரிக்காவும், கியூபாவும் அந்த கப்பலை தங்களது கடல் எல்லைக்குள் அனுமதிக்கவில்லை. இதன் விளைவாக அவர்கள் ஐரோப்பாவிற்கு சென்றனர். அங்கு இனப்படுகொலையில் கொல்லப்பட்டனர். அனேகமான செயிண்ட் லூயிஸ்கள் இப்போது அந்தமான் கடலில் சிக்கித் தவிக்கின்றனர்.

இனவெறி தலைவிரித்தாடும் மியான்மரிலிருந்து தப்பித்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் படகுகளில் புலன்பெயரும்போது கடலில் மூழ்கி இறக்கின்றனர். அண்டை நாடுகளின் கடற்படையினர் கையில் சிக்காமலிருக்க ஆட்களை கடத்துபவர்கள், அவர்களை கடல் அலைகளுக்கு பலிகொடுத்துவிட்டு தப்பித்துவிடுகின்றனர்.கடற்படையினரும் அவர்களை கடலுக்குள் தள்ள காத்திருக்கின்றனர். மியான்மருடன் தூதரக உறவை புதுப்பித்ததை பெரிய சாதனையாக கருதும் ஒபாமாவின் அரசு மௌனம் சாதிக்கிறது.

அமெரிக்க பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாம் ஆண்ட்ரூஸ்,“அந்தமான் கடல் ஒரு கூட்டு கல்லறை. அரசுகள் கடலில் மூழ்குபவர்களை மீட்பதற்கு எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்வதில்லை.ஆயிரக்கணக்கானோர் கூட்டுப்படுகொலை செய்யப்படுகின்றனர்” என்கிறார்.

அமெரிக்காவால் இவ்விவகாரத்தில் அழுத்தம் கொடுக்க முடியும். ஆசிய நாடுகளிடம் ரோஹிங்கியா அகதிகளை கடலில் தள்ளாதீர்கள் என்று கோரிக்கை விடுக்கலாம். ஆனால், தீவிர ரோஹிங்கியா எதிர்ப்பாளரான மூத்த மியான்மர் அதிகாரிக்கு அண்மையில் வெள்ளை மாளிகையில் வரவேற்பு அளித்தது ஒபாமா அரசு. உலகின் எந்த நாட்டிலாவது உள்நாட்டுக் கலவரமோ, பிரச்சனைகளோ ஏற்பட்டால் ஓடோடிச் சென்று அங்கு ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் மீட்பராக தன்னை காட்டிக்கொள்ளும் அமெரிக்கா, ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தில் மௌனம் சõதிப்பதிலிருந்து அதன் கபட வேடத்தை புரிந்துகொள்ளலாம்.

வங்காளதேச அகதிகள்  பா.ஜ.க.வின் இரட்டை வேடம்!

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்தமுறை பதவி வகித்தபோது, இந்திய குடியுரிமைச் சட்டம் 2003ல் திருத்தம் செய்யப்பட்டது. பாகிஸ்தானிலிருந்து வந்து ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை அளிப்பதை அந்த சட்டதிருத்தம் எளிமையாக்கியது. இப்போது இரு நாடுகளுக்கு இடையிலான நிலப் பகுதிகளை வங்கதேசத்துடன் பகிர்ந்துகொள்வதற்கான மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டிருக்கிறது.

வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வரும் இந்துக்களை வரவேற்று குடியமர்த்துவது, மற்றவர்களை வெளியேற்றுவது போன்ற வாக்குறுதிகளை பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித் ஷா, அசாம் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியிருந்தார். இந்திய குடியுரிமை பெற்ற முஸ்லிம்களை கூட வங்கதேசிகள் என்ற பொய்யை பரப்புரை செய்து கலவரங்களை நிகழ்த்தி அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்யும் அசாம் இனவாதிகளுக்கு இது நெஞ்சில் பால் வார்த்தது.

ஏற்கெனவே 2014 மக்களவை பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் வேட்பாளராகக் களத்தில் இருந்த நரேந்திர மோடி, “பிற நாடுகளில், இந்து என்பதற்காகவே அலைகழிக்கப்படும் மக்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது; அவர்கள் எங்கே போவார்கள்? நாம்தான் அவர்களுக்குப் புகலிடம் அளித்து காப்பாற்ற வேண்டும்” என்றெல்லாம் பேசினார். அதே காலக்கட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் பேசும்போது, “இங்கே கிடைக்கும் வேலைவாய்ப்புகளைப் பறித்துக் கொள்வோர் வெளியேற வேண்டும்; இந்த நாட்டை

சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதுதான் எங்களுடைய முன்னுரிமை. இதுதான் எங்களுடைய முதல் பொறுப்பு” என்று பேசினார்.

மத அடிப்படையில் அகதிகளை பிரித்துப் பார்ப்பதும் வெவ்வேறு வகையில் அவர்களை நடத்துவதும் இரு நாடுகளுக்கும் இடையில் உறவை சுமூகமாக்குவதற்குப் பதிலாக எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவப்பெயரையே தேடித்தரும்.ஆனால், எதையுமே மதக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் இந்துத்துவா பாசிசவாதிகள் அகதிகள் விவகாரத்தில் மட்டும் மாறி சிந்திப்பார்களா என்ன?

நோபல்  பரிசு பெற்ற  எழுத்தாளர் ஆல்பெர் காம்யு ஒரு முறை சொன்னார், “புள்ளிவிபரங்களில் ரத்தம் வடிவதில்லை”  ஆம்! ஆண்டுதோறும் அகதிகள் தினத்தில் புள்ளிவிபரங்களை பட்டியலிடுவதால் மட்டும் எந்த பலனும் விளையப்போவதில்லை.உயிர் வாழ்தல் ஒன்றைத் தவிர வேறு எந்த பலனும் இல்லாத அகதிகளின் மனக் குமுறல்களை உலகம் உணர வேண்டும் என்பதே இத் தினத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால், இதனை உலகம் உணரவில்லை என்பதுதான் தற்போதைய நிகழ்வுகள் நமக்கு சுட்டிக்காட்டும் கசப்பான உண்மையாகும்.

(ஜூன் 2015 இதழில் வெளியான கட்டுரை)

Comments are closed.