ஜெய் ஷா சொத்து குவிப்பு செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது மானநஷ்ட வழக்கு தொடர வேண்டாம்:உச்சநீதிமன்றம்

0

பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மகனின் சொத்து மதிப்பு 16000 மடங்கு அதிகரித்தது என்று தி வயர் பத்திரிகை செய்தி ஒன்று வெளியிட்டது. இதனையடுத்து அந்த பத்திரிகை மீது குஜராத் மெட்ரோபொலிட்டன் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்தார் அமித் ஷா மகன் ஜெய் ஷா. அதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் செய்திகளையும் வெளியிடுவதற்கு அந்த பத்திரிகைக்கு தடை விதிக்கப்பட்டது.

இது பத்திரிக்கை சுதந்திரத்தின் மீது விழுந்த அடி என்று கூறி இந்த வழக்கை தாங்கள் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்று கூறியது தி வயர் செய்தி நிறுவனம். இந்நிலையில் வியாழன் தி வயர் செய்தி நிறுவனம் மீது தொடர்ந்த மான நஷ்ட வழக்கை மேலும் தொடர வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆயினும் தி வயர் செய்தி வெளியிடுவதை குறித்து தங்களது அதிருப்தியை தெரிவித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய பென்ச், ஊடகங்கள் செய்தி வெளியிடுவதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த தி வயர் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், இது பத்திரிக்கை சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார். செய்தி நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் கபில் சிபல், இந்த விவகாரம் தொடர்பாக தி வயர் ஜெய் ஷாவிடம் சில கேள்விகளை தான் எழுப்பியது என்றும் பத்திரிக்கை துறை இப்படி நெறிக்கப்படுமானால் எந்த ஒரு பத்திரிகையாளராலும் கேள்விகளை எழுப்ப முடியாது என்று அவர் தெரிவித்தார்.

ஜெய் ஷா சார்பாக ஆஜரான மூத்த வழக்கைறிஞர் N.K.கவுல், தி வயர் நிறுவனத்தின் இந்த செய்தி முற்றிலும் தயார் செய்யப்பட்ட ஒரு செய்தி என்றும் ஜெய் ஷாவின் மதிப்பை குலைப்பதற்காகவே அது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் கூறினார். தி வயர் மீதான இந்த வழக்கை குஜராத் நீதிமன்றம் தடை செய்ய முன்னர் மறுத்தது. இந்த ஜெய் ஷா தரப்பு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி S.K.காத்வி இந்த விவாகாரம் தொடர்பாக CrPC பிரிவு 302 இன் கீழ் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டார். தனது மனுவில் எதிர்தரப்பு மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஜெய் ஷா சொத்துக்குவிப்பு செய்தி எதனையும் தி வயர் நிறுவனம் வெளியிடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அது பின்னர் இக்கட்டுரையில் இவ்விவகாரத்தில் நரேந்திர மோடியை தொடர்பு படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் டிசம்பர் மாதம் தளர்த்தப்பட்டது.

Comments are closed.