‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறச்சொல்லி இஸ்லாமியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பசு குண்டர்கள்!

0

மக்களவைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையோடு வென்று, இரண்டாவது முறையாக மோடி பிரதமர் பதவியேற்க உள்ளார். அதற்குள்ளாக, மத்தியப் பிரதேச மாநிலம் சியோனியில் மூன்று இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி எடுத்துச்செல்வதாக செய்திகள் பரவியதைத் தொடர்ந்து ஒரு பெண் உட்பட மூன்று இஸ்லாமியர்களை பசு குண்டர்கள் கொலை வெறியுடன் தாக்கியுள்ளனர். மேலும், தங்களை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷங்களை எழுப்பும்படி பசுப் பாதுகாவலர்கள் வற்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட மூன்று இஸ்லாமியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மூன்று நபர்களும் தாக்கப்பட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளன.

அந்த வீடியோவில் பசு குண்டர்கள் கைகளில் கம்புகளுடன் நிற்கின்றனர். மூன்று இஸ்லாமியர்களை ஒருவர் பின் ஒருவராக மரத்தில் கட்டி கடுமையாக தாக்குகின்றனர். சுற்றி நிற்கும் மக்கள் வேடிக்கை பார்ப்பதுபோல வீடியோ வெளியாகியுள்ளது. ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லும்படி பசு குண்டர்கள் இஸ்லாமியர்களை தாக்கியுள்ளனர். மேலும் அவர்களுடன் வந்த பெண்ணை செருப்புகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதின் ஓவைசி தனது ட்விட்டர் பக்கத்தில், “மோடி வாக்காளர்களால் உருவாக்கப்பட்ட பசுப் பசு குண்டர்கள் இஸ்லாமியர்களை இப்படித்தான் நடத்துகின்றனர். மோடி சொன்ன ஒருங்கிணைந்த, மதச்சார்பற்ற புதிய இந்தியாவுக்கு வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.