ஜெர்மனி: பேருந்து தீவிரவாத தாக்குதல்: பணத்திற்காக முஸ்லிம்கள் மீது பழி சுமத்தியது அம்பலம்

0

போரஷ்ஷியா டோர்ட்மன்ட் அணி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஜெர்மானிய ரஷியர் ஒருவரை ஜெர்மனி காவல்துறை கைது செய்துள்ளது. இந்த அணியின் பேருந்து மீது மூன்று குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

டோர்ட்மன்ட் அணியின் பேருந்து விடுதியில் இருந்து கிளம்பி சாம்பியன்ஸ் லீக் போட்டியின் கால் இறுதி போட்டிக்காக வெஸ்ட்ஃபாலன்ஸ்டேடியன் செல்லும் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு விளையாட்டு வீரரும் ஒரு காவலரும் காயமடைந்தனர். இதனையடுத்து இந்த போட்டி மறுநாள் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாராணையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகே ஒரு கடிதம் இருந்ததாகவும் அதில், இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த தீவிரவாதிகள் இந்த குண்டு வெடிப்பிற்கு பொறுப்பேற்பது போன்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் இந்த கடிதத்தின் நம்பகத் தன்மையை சந்தேகிப்பதாக் ஜெர்மானிய காவல்துறை தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை காலை இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக ஜெர்மானிய காவல்துறை தெரிவித்தது. அவரது பெயர் செர்கெய்.W என்றும் இவர் டுபின்ஜென் பகுதியை சேர்ந்தவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இவர் மீது கொலை முயற்சி, குண்டு வடிப்பு நிகழ்த்தியது மற்றும் மோசமான உடற் காயங்களை ஏற்ப்படுத்தியது தொடர்பான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த குண்டு வெடிப்பிற்கு இஸ்லாமிய தீவிரவாதிகளின் தொடர்பு எதுவும் இல்லை என்று கண்டறிந்த பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த தாக்குதலில் ஈடுபட்ட செர்கெய் இதனை பணத்திற்காக செய்ததும் பின்னர் இஸ்லாமியர்கள் மீது பழி போட்டதும் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு முந்தைய நாள் பல்லாயிரக் கணக்கான யூரோக்களை இவர் பெற்றதும் அதை வைத்து போரஷ்ஷியா டோர்தமன்ட் அணிகளின் பங்குகளைப் பெற்றதும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த பங்குகளை வாங்கும் போது பங்குகளின் விலை சரிந்தாலும் முன்பே நிர்ணயம் செய்யப்பட்ட குறிப்பிட்ட விலைக்கு இந்த பங்குகளை விற்கும் வகையில் இவர் இந்த பங்குகளை வாங்கியுள்ளார்.

ஒரு அணியின் வீரருக்கு காயமுற்றாலோ அல்லது ஒரு வீரர் மரணமடைந்தாலோ அந்த அணியின் பங்குகள் சரிவது வழக்கம். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு செர்கெய் பொருளாதார ஆதாயம் பெற முயற்சித்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

Comments are closed.