ஜெர்மன் பேக்கரி வழக்கு: ஹிமாயத் பேக்கிற்கு மரண தண்டனை ரத்து

0

புனே ஜெர்மனி பேக்கரி வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஹிமாயத் பேக்கிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை பம்பாய் உயர்நீதி மன்றம் நேற்று (மார்ச் 17) ரத்து செய்தது. சந்தேகத்திற்கு இடமின்றி வழக்கை நிரூபிப்பதற்கு அரசு தரப்பு தவறி விட்டதாலும் ஹிமாயத்திற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் மரண தண்டனையை ரத்து செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.
நீதிபதிகள் என்.ஹெச்.பாட்டீல் மற்றும் எஸ்.பி.சுக்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. இருந்தபோதும் வெடிபொருட்களை வைத்திருந்ததற்காக ஹிமாயத்திற்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது.
பிப்ரவரி 13, 2010 அன்று புனேயின் ஜெர்மன் பேக்கரியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 17 நபர்கள் இறந்தனர். இந்த வழக்கில் ஹிமாயத் பேக்கை தீவிரவாத எதிர்ப்பு படையினர் செப்டம்பர் 2010ல் கைது செய்தனர். 2013ல் புனேயின் செசன்ஸ் நீதிமன்றம் ஹிமாயத்திற்கு மரண தண்டனை விதித்தது. இந்த வழக்கில் எட்டு நபர்களை குற்றவாளிகளாக அறிவித்த போதும் அவர்களில் ஆறு நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு நபரான கதீல் சித்தீகி, புனேயின் எரவாடா சிறையில் நடைபெற்ற மோதலில் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஹிமாயத் பேக் தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொது நல வழக்கை தாக்கல் செய்த பத்திரிகையாளர் ஆஷிஷ் கேதான், இந்த வழக்கை தேசிய புலனாய்வு குழுமமான என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என்றும் முன்னர் கோரிக்கை வைத்திருந்தார்.

Comments are closed.