ஜே.என்.யூ. சங்பரிவாரத்தின் சோதனை கூடமா?

0

ஜே.என்.யூ. சங்பரிவாரத்தின் சோதனை கூடமா?

ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) மாணவர்களின் போராட்டம் தொடருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கொடூரமாக தாக்கியும், மாணவர் தலைவர்களை கைது செய்தும் காவல்துறையும், அரசும் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதும் அன்றாடம் போராட்டம் வலுவடைந்து வருகிறது. போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய மாணவர்களை காவல்துறை கைது செய்து இழுத்துச் சென்றது. காவல்துறை நடத்திய தடியடியிலும், அத்துமீறலிலும் மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் முதலான நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். போராட்டம் நடந்த பகுதியில் மின்சார விளக்குகளை அணைத்து விட்டு காவல்துறை மாணவர்களை வேட்டையாடியது.

விடுதி கட்டண உயர்வு, ஆடை ஒழுங்கு, விடுதியில் தங்கும் மாணவர்கள் திரும்பும் நேரத்தை அமல்படுத்துதல் ஆகியன தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் தயாரித்துள்ள விடுதி கையேடு வரைவை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மாணவர்கள் போராட்டம் நடத்துவதற்கான இடம் மற்றும் நேரத்தை நிர்ணயிப்பதன் மூலம் மாணவர்களின் அரசியல் சுதந்திரம் மற்றும் கலாச்சார செயல்பாடுகளை கட்டுப்படுத்த பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்திருந்தது. சமீப காலத்தில் மிகப்பெரிய மாணவர் போராட்டத்திற்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சாட்சியம் வகிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. தவிர அனைத்து மாணவர் அமைப்புகளும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. டெல்லி பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக விடுதியில் கடுமையான கட்டண உயர்வை நிர்வாகம் அறிவித்தது. ஒரு மாணவருக்கு ரூ. 20 ஆக இருந்த விடுதி கட்டணம் ரூ. 600 ஆக அதிகரித்துள்ளது. இது நாள் வரை இலவசமாக வழங்கப்பட்ட குடிநீர், மின்சாரத்திற்கு இனி மாணவர்கள் கட்டணம் செலுத்தவேண்டும். துப்புரவு மற்றும் சமையல் ஆகியவற்றுக்காக மாணவர்கள் இனி மாதந்தோறும் ரூ.1700ஐ தனியாக கட்டவேண்டும். ஜே.என்.யூ.வில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலோர் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் என்பதால் இந்த கட்டண உயர்வை எவ்வகையிலும் அங்கீகரிக்க முடியாது என்பது மாணவர் அமைப்புகளின் நிலைப்பாடு. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்துவதற்காக கட்டண உயர்வை பாதியாக குறைத்து, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்த பிறகும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர். கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெறும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஜே.என்.யூ. மாணவர்களின் போராட்டம் வெறும் கட்டண உயர்வு முதலான பிரச்சனைகளுக்கான போராட்டமல்ல. உயர் கல்வி நிறுவனங்களில் மத்திய அரசின் ஆதரவோடு சங்பரிவாரத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகங்கள் திணிக்கும் மாணவர் நலனுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து நடக்கும் போராட்டமும் கூட. நிதி, மானியம், கல்வி உதவித் தொகை ஆகியவற்றை கணிசமாக குறைத்தல், ஆசிரியர்கள் நியமனத்தில் அகடாமிக் குழுக்களின் சிபாரிசுகளை புறக்கணித்து, மெரிட் முறைக்கு முரணாக தங்களது ஆதரவாளர்களை உள்ளே நுழைவிப்பது, மாணவர்களுக்கு எதிரான சர்வாதிகார குணாதிசயம் கொண்டவர்களை உயர்மட்ட நிர்வாகிகளாக நியமித்தல், தேசத்துரோக குற்றம் சாட்டி மாணவர் தலைவர்களை வேட்டையாடுதல், பல்கலைக்கழகத்தின் அகடாமிக் ஜனநாயக உரிமைகளை சீர்குலைத்தல் முதலான ஒரு வகையான பாசிச ஆட்சிதான் உயர் கல்வி நிறுவனங்களில் நடக்கிறது.

பொது கல்வித் துறையில் குறைந்தபட்சமாக நிலவும் பன்முகத்தன்மையை ஒழித்துக் கட்டிவிட்டு வகுப்புவாத பாசிசத்தின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பல்கலைக்கழக சட்டங்களை ஒழுங்குப்படுத்துவதே மத்திய அரசின் திட்டமாகும். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பெயரின் மீதே சங்பரிவாருக்கு ஒவ்வாமை உண்டு. நேருவிற்கு பதிலாக நரேந்திர மோடியின் பெயரை சூட்டி என்.எம்.யூ.வாக மாற்றம் செய்ய வேண்டும் என்று அண்மையில் டெல்லி நார்த் வெஸ்ட் தொகுதி பா.ஜ.க. எம்.பி. ஹன்ஸ் ராஜ் கோரிக்கை விடுத்திருந்தார். மாணவர் சமூகத்தில் எதிர் கருத்துக்களையும், அமைதியான போராட்டங்களையும் அனைத்து விதமான அரசு இயந்திரங்களையும் பயன்படுத்தி அடக்கி ஒடுக்குவதோடு, வகுப்புவாத பாசிசத்தையும், அரசின் ஊனமான கொள்கைகளையும் விமர்சிப்பவர்களை தேசத்துரோகிகளாக சித்தரிக்கின்றனர் பல்கலைக்கழக நிர்வாகிகள். எதிர் கருத்துக்களை கூறும் மாணவர்களை காவல்துறையையும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஏ.பி.வி.பி. குண்டர்களையும் பயன்படுத்தி தாக்குகின்றனர்.

ஜே.என்.யூ.வில் கணிசமான மாணவர்கள் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் இந்த சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிப்பை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும். கட்டண உயர்வுகளின் பின்னணியில் இத்தகையதொரு செயல் திட்டம் உள்ளதா? என்ற சந்தேகம் எழுகிறது. தலித்களும், மத சிறுபான்மையினரும் உயர் பதவிகளுக்கு வருவதை சங்பரிவார் சற்றும் விரும்புவதில்லை.

சர்வதேச அளவில் பிரபலமான நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் ஒன்று ஜே.என்.யூ. 2016ல்` மிகச் சிறந்த கல்வி நிறுவனத்திற்கான குடியரசு தலைவர் விருதை பெற்றது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், நோபல் விருது பெற்ற பொருளாதார நிபுணர்களை உருவாக்கிய ஜே.என்.யூ.வின் சுதந்திர குணாதிசயமும், ஏழை மாணவர்களும் கல்வி கற்பதற்கு ஏற்ற குறைவான கட்டணமும் தொடரவேண்டும். வகுப்புவாத பாசிசத்தின் அச்சில் வார்க்கப்பட்ட குறுகிய மற்றும் ஊனமான சிந்தனைகளை கொண்ட சங்பரிவார்களை உருவாக்கும் நிறுவனமாக ஜே.என்.யூ. மாறிவிடக்கூடாது. கல்வித்துறையில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் காவி மயம் மற்றும் வியாபார மயத்தின் சோதனை கூடமாக ஜே.என்.யூ.வை மாற்றுவதை ஒருபோதும் ஜனநாயக சக்திகள் அனுமதிக்க கூடாது. அரசின் அடக்குமுறைக்கு முன்னால் எதிர் வினை ஆற்றலின் வீரியம் சற்றும் குறையாத மாணவர் சமூகத்தின் பின்புலத்தில்தான் இந்த பல்கலைக்கழகத்தின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

Comments are closed.