டாக்டர் முஹம்மது முர்ஸி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் துணிச்சலான தியாகி: PFI

0

பத்திரிகை செய்தி

டாக்டர் முஹம்மது முர்ஸி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் துணிச்சலான தியாகி: பாப்புலர் ஃப்ரண்ட்!

டாக்டர் முஹம்மது முர்ஸி தனது கடைசி தருணங்கள் வரை ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் துணிச்சலான பாதுகாவலராக திகழ்ந்தார் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் இ.அபுபக்கர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதிக மக்கள் தொகை கொண்ட அரபு நாடான எகிப்தின் வரலாற்றில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அதிபரான டாக்டர் முஹம்மது முர்ஸி இவ்வுலகை விட்டு பிரிந்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின்படி திங்கள் கிழமை அன்று கெய்ரோ நீதிமன்ற அறையில் நடந்த விசாரணையின்போது முர்ஸி கீழே சரிந்து விழுந்து மரணித்துள்ளார். சிறந்த மருத்துவ சிகிட்சையை மறுத்ததும், எகிப்திய ராணுவ அரசின் கொடூரமான நடத்தையுமே அவரது மரணத்திற்கு காரணம் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற அமைப்புகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன.

முல்லைப்பூ புரட்சி என்று புகழ்பெற்ற அரபுலக எழுச்சியும், அதனைத் தொடர்ந்து 2012-ல் முஸ்லிம் சகோதரத்துவ தலைவர் முர்ஸியின் தேர்தல் வெற்றியும் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் மற்றும் சியோனிசம் ஆகிய தீய கூட்டணிக்கு பலத்த பின்னடைவாக அமைந்தது. இது சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் நீதி ஆகியவற்றின் புதிய சகாப்தமாகவும் மற்றும் பல தசாப்தங்களாக மக்களை மூச்சுத்திணறச் செய்யும் மேற்குலக ஆதரவுடன் கூடிய மிருகத்தன சர்வாதிகார ஆட்சிகளின் முடிவின் தொடக்கமாகவும் பரவலாக கருதப்பட்டது. இருப்பினும் ஒரு வருடத்திற்குள் எகிப்திய ஜனநாயக அரசுக்கு கொடூரமான முறையில் முடிவுக் கட்டப்பட்டது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் டாக்டர் முர்ஸி, இறக்கும் வரை அடிப்படை மருத்துவ வசதி கூட இல்லாமல் ஆறு ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உண்மையில், டாக்டர் முர்ஸி இயற்கையான மரணத்தை சந்திக்கவில்லை. எகிப்து மட்டுமல்லாமல் குறுகிய நலன் கொண்ட அதிகார மையங்களால் மெதுவாகவும், படிப்படியாகவும் திட்டமிட்டு முர்ஸி கொலைச் செய்யப்பட்டுள்ளார். பிராந்திய சர்வாதிகாரிகளும், அவர்களின் மேற்கத்திய எஜமானர்களும் இணைந்து ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் நீதி ஆகியவற்றின் மீதான மக்களின் அபிலாஷைகளை அழிக்க நடத்திய சதித்திட்டத்தில் எகிப்திய ராணுவம் இழிவான அடியாளுக்குரிய வேடத்தை தரித்தது. ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை கொண்டு வருகிறோம் என்ற போலிக்காரணத்தை கூறி இதர நாடுகள் மீது போர்த்தொடுக்கும் மேற்கத்திய நாடுகள் எகிப்திய மக்களுக்கு எதிராக அநீதியை நடைமுறைப்படுத்த சீசியின் ராணுவ அரசுக்கு உதவுவது கொடூரமான முரண் நகையாகும்.

முர்ஸியின் மரணம் சாதாரணமானதல்ல. கடைசி மூச்சு வரை அவர் நிலைத்து நின்ற உயரிய மதிப்பீடுகளுக்காக வீர மரணத்தை எய்தியுள்ளார். கொடூரமான சர்வாதிகாரிகளை எகிப்திய மக்கள் வெற்றிக்கொண்டதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது. சீசி மற்றும் அவரது எஜமானர்களையும் அவர்கள் வெற்றிக்கொள்வார்கள். முர்ஸியின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக உறுப்பினர்கள் மற்றும் எகிப்திய மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக ஆழ்ந்த இரங்கலை இ.அபுபக்கர் தெரிவித்தார்.

இப்படிக்கு

டாக்டர். முஹம்மது ஷம்மூன்,
தலைவர், ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு,
பாப்புலர் ஃப்ரண்ட், தலைமையகம், புது தில்லி.

Comments are closed.