டில்லியில் அடித்துக்கொலை செய்யப்பட்ட 8 வயது மதரஸா மாணவன்

0

டில்லியில் அடித்துக்கொலை செய்யப்பட்ட 8 வயது மதரஸா மாணவன்

டில்லியின் மாளவியா நகரில் உள்ள பேகம்பூர் பகுதியில் 8 வயதே நிரம்பிய மதரஸா மாணவனான முஹம்மத் அசீம் என்பவரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது.

கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு காவல்துரையால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் கடந்த வியாழன் மதியம் நடைபெற்றுள்ளது. அப்போது மதரஸா விடுமுறையாதலால் மதரஸா விடுதியில் தங்கி பயின்ற சில மாணவர்கள் வெளியில் சென்று விளையாடியுள்ளனர். அப்போது அவர்களை மதரஸாவின் அருகில் உள்ள பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தாக்கியதாக தெரிகிறது. இந்த தாக்குதலில் பல மாணவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். ஆனால் அசீமை அந்த வன்முறை கும்பல் இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது தூக்கி எறிந்துள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே நினைவற்று விழுந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ளவர்கள் தங்களை தொடர்ச்சியாக துன்புறுத்தி வந்ததாகவும் மதரஸா வளாகத்திற்குள் காலி மது பாட்டில்கள் வீசப்படுவதும் வாடிக்கையாக நடைபெற்றது என்று மதரஸா மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அப்பகுதி மசூதியின் இமாம் முஹம்மத் அலி ஜவ்ஹார், “அப்பகுதி இளைஞர்கள் தொடர்ச்சியாக எங்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தி வருபவர்கள். அவர்கள் மதரஸா வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்களை தாக்குவார்கள். மதராசவிற்குள் காலி மதுபாட்டில்களையும் அவர்கள் வீசி எறிந்துள்ளனர். இந்த நிலம் மதரசாவிற்கு சொந்தமானது. ஆனால் அவர்கள் இதனை ஆக்கிரமிக்க முயல்கின்றனர்.” என்று தெரிவித்துள்ளார். மேலும், “இவர்களால் தற்போது ஒரு அசீம் உயிரிழதுள்ளார். மேலும் பல அசீம்கள் ஆபத்தில் உள்ளனர்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை 10 இல் இருந்து 13 வயதிற்குள்ளான நான்கு சிறுவர்களை கைது செய்துள்ளது. அப்பகுதியில் உள்ள பெரியவர்கள், சிறுவர்கள் மனதில் வெறுப்பை வளர்க்கின்றனர் என்றும் அதன் விளைவாகத்தான் இந்த வன்முறையும் அதனை ஒட்டிய மரணமும் நிகழ்ந்துள்ளது என்று மதரஸா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.