டில்லியில் அடித்துக் கொல்லப்பட்ட 16வயது முஸ்லிம் சிறுவன்

0

டில்லியில் அடித்துக் கொல்லப்பட்ட 16வயது முஸ்லிம் சிறுவன்

கான்பூரில் இருந்து வேலை தேடி டில்லிக்கு வந்த 16 வயது சிறுவனை டில்லியைச் சேர்ந்த ஆறு பேர் கடந்த செவ்வாய் அதிகாலை அடித்துக் கொலை செய்துள்ளனர்.

இந்த கொலையில் ஈடுபட்ட ஆறு நபர்களில் இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. மற்ற நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர். கைது செய்த நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த சிறுவன் தங்கள் வீட்டில் இருந்து திருடியதாகவும் அதனால் அவர்கள் அவனை அடித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பீகாரின் ஆராரியா பகுதியை சேர்ந்த அந்த சிறுவன் கான்பூரில் உள்ள மதரஸா ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளார். தனக்கு வேலை தேடி டில்லி வந்த அவர் முகந்த்பூரில் உள்ள ஒரு கடையில் மின்பணியாளராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார். அங்கு தனது சகோதரர் மற்றும் உறவினருடன் தங்கியுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற தினத்தன்று அதிகாலை 6:30 மணிக்கு காவல்துறைக்கு முக்குந்த்பூர் பகுதியில் இருந்து திருடன் ஒருவன் பிடிப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் சாக்கடை அருகே ஒரு சிறுவனின் நினைவற்ற உடல் கிடப்பதை கண்டுள்ளனர். அந்த சிறுவன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படவே அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதன் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் ராஜ்குமார் என்ற ஆட்டோ ஓட்டுனர் ஒருவரையும், நந்த் கிசோர் என்ற தொழிலாளி ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த இருவரும் சகோதரர்கள் ஆவர். இவர்களின் மூன்றாவது சகோதரர் திரிவேணி மற்றும் அவர்களின் உறவினர்கள் மேலும் மூன்று நபர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இது குறித்து காவல்துறை துணை ஆணையர் அஸ்லம் கான், இவர்கள் அச்சிறுவனை அதிகாலை 3:30 மணியளவிலேயே பிடித்துவிட்டார்கள் என்றும் ஆனால் காவல்துறைக்கு 6:30 மணியளவில் தான் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்கள், அச்சிறுவன் பணம் மற்றும் நகைகளைத் திருட அவர்களது வீட்டிற்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளனர் என்றும் இவர்களில் ஒருவரது போன் அச்சிறுவனின் பையில் இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவு 304 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட சிறுவனின் சகோதரரான முஷாஹித்திற்கு இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். ஆனால் அச்சிறுவன் அதற்குள் கொலை செய்யப்பட்டுள்ளான். இது குறித்து அவர் கூறுகையில், “நான் அங்கு செல்லும் போது அவன் ஏற்கனவை உயிரிழந்துவிட்டான். நான் அவனை முந்தைய இரவு கடைசியாக பார்த்த போது அவன் கருப்பு சட்டை அணிந்திருந்தான். ஆனால் இறந்து கிடந்த அவனது உடலில் வெள்ளை நிற சட்டை அணிவிக்கப்பட்டிருந்தது. அவன் உடலில் வெட்டுக் காயங்களும், கை கால்களில் தழும்புகளும் இருந்தது. இதன் மூலம் அவன் கட்டப்பட்டு தாக்கப்பட்டுள்ளான் என்று தெரிகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கோ தங்களுடன் தங்கியிருந்த தனது உறவினருக்கோ இரவுப் பொழுதில் எந்த ஒரு கூச்சல்களும் கேட்கவில்லை என்றும், தன் சகோதரர் பிறர் வீட்டிற்குள் சென்றிருந்தால் நிச்சயம் சப்தம் ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். “அவன் அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டு கட்டிவைத்து அடித்துக் கொல்லப்பட்டுள்ளான்.” என்று முஷாஹித் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட சிறுவனின் உடலை முதலில் பார்த்தவர்களில் அப்பகுதியில் வசித்து வரும் ரீதா தேவி என்பவரும் ஒருவர். அவர், முந்தைய இரவு எந்த ஒரு சப்தத்தையும் தான் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார். “திருட்டு போன்ற சம்பவம் நடைபெற்றால் வழக்கமாக மக்கள் சப்தம் எழுப்பவோ அல்லது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவோ செய்வார்கள். ஆனால் அது போன்று எதுவும் முந்தைய இரவு நடைபெறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்துக் காவல்துறை துணை ஆணையர் கான் தெரிவிக்கையில், “முதற்கட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் நடைபெற்ற இடத்தை ஜோடித்தது போன்று தெரிகிறது. நாங்கள் அவர்களை விசாரித்து வருகிறோம். தலைமறைவான நான்கு பேர்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.