டில்லியில் பொது இடங்களில் புர்கா அணிய தடை விதிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

0

டில்லி உயர் நீதிமன்றத்தில் பொது இடங்களில் புர்கா அணிவதும், முகத்திரைகள் அணிவதும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு தடை விதிக்கக் கோரி சர்தார் ரவி ராஜன் சிங் என்பவரால் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

தனது மனுவில், அரசு கட்டடங்கள், பழங்கால வரலாற்று இடங்கள், ரயில் மற்றும் பேருந்துகளில் புர்கா, தலைக்கவசம், முக்காடு போன்றவற்றை பாதுகாப்பு காரணங்கள் கருதி அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். “(இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைப்பது போன்று) முகத்தை மறைத்துக் கொள்வதும் உடல் முழுவதையும் மறைக்கும் புர்கா போன்ற ஆடைகளும் மிகப்பெறிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என்றும் இதனால் நாட்டின் குடிமக்கள் தொடர் அச்சத்தில் வாழ்கின்றனர் என்றும் இது இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 21 இன் கீழ் பாதுகாப்பான வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கு எதிரானது” என்றும் கூறியுள்ளார்.

மேலும் நாட்டில் தீவிரவாத செயல்கள் பன்மடங்காக அதிகரித்துவிட்டன என்றும் இந்த செயல்களை செய்பவர்கள் புர்காவை மதிப்பதில்லை என்றும் அதனை அவர்கள் தங்களின் தீவிரவாத செயல்களை செய்யும் ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ரோகினி மற்றும் நீதிபதி சங்கீதா திங்கரா ஷேகல் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர். இது குறித்து  கருத்து தெரிவித்த நீதிபதிகள், “இது கொள்கை முடிவாக இருந்தால் அதனை அரசு பார்த்துக்கொள்ளும். இதனை நாங்கள் எப்படி அனுமதிக்க முடியும்” என்றும் “இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட முடியாது” என்றும் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.