டில்லி பல்கலைகழகம்: தன் பாடங்களின் பெயர்கள் கூடத் தெரியாத ABVP தலைவர்
டில்லி பல்கலைகழ மாணவர் அமைப்புத் தலைவராக ABVP யின் அன்கிவ் பைசோயா தேர்வு செய்யப்பட்டதில் இருந்து பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. முதலில் இந்த தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்கள் தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்கு எந்திரங்கள் என்று கூறப்பட்ட நிலையில் பின்னர் அதனை தேர்தல் ஆணையம் மறுத்து அது குறித்து விசாரணை நடத்தப் போவதாக தெரிவித்தது. இந்நிலையில் தனது பெயரில் டில்லி பல்கலைக்கழக அனுமதியின் போது பைசோயா வழங்கிய கல்விச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் போலியானது என்று திருவள்ளுவர் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
2013 இல் இருந்து 2016 வரையிலான காலகட்டத்தில் திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் தான் பயின்றதாக கூறிய அன்கிவ் பைசோயாவிடம் தொலைகாட்சி நிருபர் ஒருவர், பைசோயா படித்த பாடங்கள் குறித்து கேள்வி எழுப்ப அதற்கு பதில் தெரியாமல் பைசோயா தடுமாறும் காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது.
2016 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் இருந்து பட்டம் பெற்றதாக பைசோயா அளித்த சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் மாணவர் பிரிவு சோதனைக்காக திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த ஆவணங்களை சோதித்து பார்த்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் அலுவலகம் குறிப்பிட்ட ஆவணங்கள் போலியானது என்று கடிதம் மூலம் பதிலளித்துள்ளது.
இது குறித்து பைசொயாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தனது வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் முதலில் மின்னணு வாக்கு எந்திரம் குறித்து சர்ச்சை எழுப்பியதாகவும் அது அவர்களுக்கு பயனளிக்கவில்லை என்ற நிலையில் தற்போது இந்த மதிப்பெண் சர்ச்சையை எழுப்பியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் காண்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பதை தான் நிரூபிப்பதாகவும் அதற்க்கான விசாரணைக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக தனக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்த என்றும் ஆனால் அதில் ஒன்று கூட தனது பல்கலைகழகத்திடம் இருந்து தனது சான்றிதழ் போலியானது என்று கூறி வரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் பல்கலைகழகமோ அன்கிவ் பைசோயா என்கிற பெயரில் தங்களிடம் எவரும் பயிலவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அன்கிவ் பைசோயா அளித்த சான்றிதழ்கள் போலியானது என்றால் அவரை பல்கலைகழகத்தில் இருந்து நீக்கவேண்டிய பொறுப்பு டில்லி பல்கலைகழகத்திற்கு உள்ளது என்றும் அப்படியானால் அவர் டில்லி பல்கலைகழக மாணவ அமைப்பின் தலைவராக தொடர முடியாது என்றும் இந்திய தேசிய மாணவ கூட்டமைப்பின் தலைவர் ருசி குப்தா தெரிவித்துள்ளார். இடது சாரி மாணவ அமைப்பினரோ, டில்லி பல்கலைக்கழகத்திடம் இருந்து நரேந்திர மோடி பெற்ற அரசியல் அறிவியல் கல்விச் சான்றிதழே போலியானது என்ற குற்றச்சாட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
தான் திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் பயின்றதாக அன்கிவ் பைசோயா கூறிய காலகட்டத்தில் அது தொடர்பாக எந்த ஒரு தடையமும் அன்கிவ் பைசோயாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் இல்லை. மாறாக டில்லி பல்கலைகழகத்தில் அவர் இருக்கும் புகைப்படங்களே அதிகம் காணப்படுகிறது.
இது குறித்து பத்திரிக்கையாளர் பைசோயாவிடம் கேள்வி எழுப்பிய போது அவர் தனது பாடங்களின் பெயர்களை கூட கூற முடியாமல் தவித்தார். மேலும் அவருக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்கள் தனக்கு விருப்பமான ஆசிரியர்கள் என யாரும் உள்ளனரா என்றும் அவர்களின் பெயர்களை குறிப்பிட முடியுமா என்று பைசோயாவிடம் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியதற்கும் பதில் தெரியாமால் பைசோயா பேசியதையே மீண்டும் மீண்டும் பேசியதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதுமட்டுமல்லாது தனது மதிப்பெண் பட்டியல் என்று பைசோயா வழங்கிய மதிப்பெண் பட்டியலிலும் பல தவறுகள் காணப்படுகின்றன. பாடங்களின் பெயர்களில் இருந்து பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முகவரி வரை அப்பட்டியலில் தவறாக உள்ளது.
இத்தனை குளறுபடிகள் இருந்தும் அன்கிவ் பைசோயாவை ABVP ஆதரித்து வருகிறது. இது குறித்து அவ்வமைப்பின் ஊடக ஒருங்கிணைப்பாளர் கருத்து தெரிவிக்கையில், “அன்கிவ் பைசோயா அளித்த ஆவணங்களை சரிபார்த்த பின்னரே பல்கலைகழகம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இன்றும் அவரது ஆவணங்களை சரிபார்க்கும் உரிமை டில்லி பல்கலைகழகத்திற்கு மட்டுமே உண்டு, அது இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பின் வேலையல்ல” என்று தெரிவித்துள்ளார்.
டில்லி பல்கலைகழகமோ தங்களிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டால் தான் மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதற்கென்றே பல்கலைகழகத்தில் தனித்துறை இருப்பதாகவும் அது அவ்வேலைகளை செய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இந்திய தேசிய மாணவ கூட்டமைப்பு, இந்த போலிச் சான்றிதழ் குறித்து காவல்துறையில் மோசடி வழக்கு ஒன்றும் பல்கலைகழகத்திலும் புகாரளிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.