டீஸ்டா ஸெடல்வாட் வேட்டையாடப்பட காரணம் என்ன?

0

 

 – செய்யது அலீ

மனித உரிமை ஆர்வலர்களான டீஸ்டாவும், அவரது கணவர் ஜாவேதும் இணைந்து 1993ஆம் ஆண்டு மும்பை வகுப்பு கலவரத்திற்கு பிறகு சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் சப்ரங் அறக்கட்டளையை தொடங்கினார்கள். குஜராத் இனப்படுகொலைகளுக்கு பிறகு 2002 ஏப்ரல் 1ஆம் தேதி நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு (சி.ஜே.பி) துவங்கப்பட்டது.

இனப்படுகொலையில் துயரங்களை சந்தித்தவர்களுக்கு உதவியும், குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் என்ற உறுதியான மனதோடு சி.ஜே.பி.யை டீஸ்டா முன்னெடுத்துச் சென்றபோது, குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உள்ளிட்ட 119 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்கள். இந்தியாவில் நடந்த வகுப்பு கலவரங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனையில் சாதனை இது.

குஜராத் கலவரத்தின் மிகக் கொடூரமான வழக்குகள் மறு விசாரணைக்காக நீதிமன்றத்தை அடைந்தன. ஆனால், 2002 இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கவில்லை. அதில் ஒன்றுதான் குல்பர்க் சொஸைட்டியில் நடந்த கூட்டுப்படுகொலை.

2002 பிப்ரவரி 28ஆம் தேதி காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட 69 பேரை இந்துத்துவா பயங்கரவாதிகள் எரித்துக்கொலை செய்தனர். முதல்வராக இருந்த மோடியின் மௌன அனுமதி இல்லாமல் இந்த அக்கிரமம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜகியா ஜாஃப்ரி உள்ளிட்டோர் நம்புகின்றனர். மோடி மற்றும் 59 பேர் மீது ஜக்கியா தொடுத்த வழக்கின் தொடர் நடவடிக்கைகள் துவங்கவிருக்கின்றன.

ஜகியாவின் சட்டரீதியான போராட்டம் வெற்றி பெற்றால் இந்தியாவின் சக்திமிக்க பிரதமர் என்று சங்கபரிவார்களால் புகழாரம் சூட்டப்படும் மோடி 15 குற்றங்களில் விசாரணையை சந்திக்க வேண்டிவரும். ஜகியா ஜாஃப்ரியின் சட்டரீதியான போராட்டத்திற்கு ஊக்கமளிப்பவர் டீஸ்டாவை தவிர வேறு யாரும் இல்லை. குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடத்தப்படும் நீதிக்கான போராட்டத்தின் இரை டீஸ்டா என்று முன்னாள் மத்திய கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் கூறியது முற்றிலும் உண்மையே.

டீஸ்டா மற்றும் ஜாவேத் ஆனந்த் மீது 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அஹ்மதாபாத் காவல்துறை  முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. குல்பர்க் சொஸைட்டி ஹவுஸிங் காலனியை ஒரு ரெசிடண்ட் மியூசியமாக (தங்குமிட அருங்காட்சியகம்) மாற்றுவதற்கு ஒரு திட்டம் இருந்தது. இதற்காக 2008ஆம் ஆண்டு திரட்டிய பணத்தை, சப்ரங், சி.ஜே.பி. அறக்கட்டளைகள் அப்பகுதி மக்களுக்கு வழங்காமல் கையாடல் செய்ததாக குஜராத் காவல்துறை குற்றம் சாட்டுகிறது.

அருங்காட்சியகம் திட்டத்திற்கான கோரிக்கையின் சுருக்கம் இதுதான்: மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தில் அரசு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கு அவர்கள் சந்தித்த அவமானத்திற்கும், அக்கிரமத்திற்கும் எதுவும் திரும்ப கிடைக்கவில்லை. மாநிலத்தில் மீண்டும் பா.ஜ.க. தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவர்களின் அவமானமும், வேதனையும் மேலும் அதிகரித்துள்ளது. அரசின் மௌனத்திற்கு, வலுவலான, கண்ணியமான, அமைதியான எதிர்ப்பு போராட்டமே இந்த திட்டத்தின் கருப்பொருள்.

வகுப்பு கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவகம் என்ற கொள்கை பல வருடங்களுக்கு முந்தைய திட்டமாகும். நீதி மன்றங்களில் வழக்குகள் நகராமல் இருந்த வேளையில் 2007ஆம் ஆண்டு இந்த சிந்தனை உருவானது என்று குஞிணூணிடூடூ.டிண என்ற இணையதள பத்திரிகையின் செய்தியாளர் மிருதுலா சாரியிடம் டீஸ்டா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘கலவரத்தில் தப்பியவர்களிடம் மிகப்பெரிய நிராசை படர்ந்த காலத்தில், கஷ்மீர் பண்டிட்டுகள் முதல் குஜராத் 2002 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வரை அனைத்து இரைகளுக்கும் ஒரு நினைவகம் என்பதே நமது கொள்கை அது ஒரு பெரிய திட்டமாகும்,” என்றார்.

தங்களின் பெயரால் திரட்டிய பணம் கிடைக்கவில்லை என்று குல்பர்க் சொஸைட்டியில் வசிப்பவர்கள் அளித்த ஒன்பது மாதத்திற்கு முந்தைய புகாரை அடிப்படையாக கொண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. டீஸ்டாவும், ஜாவேதும் தேவையான விளக்கம் அளித்தனர். திரட்டிய பணத்தை வேறு எதற்கும் செலவழிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினர்.

மோடிக்கு எதிராக குற்றம் சாட்ட ஆதாரம் இல்லை என்று சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த அறிக்கை குறித்து கேள்வி எழுப்பி டீஸ்டாவும், ஜக்கியாவும் தாக்கல் செய்த மனுவை கீழ்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு குறித்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்று கூறிய இருவரும், முதல்வராக இருந்த மோடி மீது குற்றம் சுமத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோது குஜராத் காவல்துறை விழித்துக்கொண்டது.

இரண்டு அறக்கட்டளைகளும் நன்கொடை கோரியதாகவும், திரட்டியதாகவும் எஃப்.ஐ.ஆரில் உள்ளது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி அளிக்க வேண்டும் என்ற உத்தேசத்தில் சி.ஜே.பி செயல்படுகிறது. சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபடும் பொது அறக்கட்டளையே சப்ரங். நினைவகத்தை அமைப்பதற்கு சப்ரங்தான் திட்டமிட்டிருந்தது என்று டீஸ்டா கூறுகிறார்.

நினைவகம் கட்டுவதற்கான கோரிக்கை எழுந்த காலத்தில் குல்பர்க் சொஸைட்டியில் வீடுகளை வாங்க ஆட்கள் இல்லை. அஹ்மதாபாத்தில் இந்துக்கள் பெரும்பான்யைõக வாழும் பகுதியில் உள்ளது குல்பர்க் சொஸைட்டி. நன்கொடைகளை திரட்டி, அங்கு வசிப்பவர்களிடம் சந்தை விலையில் வீடுகளை வாங்கி நினைவகம் அமைக்க வேண்டும் என்பது சப்ரங்கின் திட்டமாகும்.

இதற்கு தேவையான தொகையை அறக்கட்டளை வசூலிக்கும் வரை வீடுகளை விற்பனை செய்ய மாட்டோம் என்று வசிப்பவர்களும் வாக்குறுதி அளித்தனர். அஹ்மதாபாத்தில் நிலத்தின் விலை நான்கு மடங்கு அதிகமானது. இதனைத்தொடர்ந்து வீடுகளை வாங்குவதற்கு தேவையான தொகையை நன்கொடையாக திரட்ட முடியாது என்பது தெளிவானது.

2012 ஆம் ஆண்டு அருங்காட்சியகம் திட்டத்தை கைவிட்டதால், அதற்காக திரட்டிய நான்கரை லட்சம் ரூபாய் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக திருப்பப்பட்டது. நன்கொடை அளித்தவர்களின் அனுமதியோடுதான் இந்த பணம் சட்ட உதவிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், தேவைப்பட்டால் அதற்கான அனுமதி பத்திரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்றும் டீஸ்டா தெரிவித்திருந்தார்.

2007 ஏப்ரல் 10 முதல் 2014 பிப்ரவரி 20 வரை அருங்காட்சியகத்திற்காக 2.62 கோடி ரூபாய் சப்ரங் அறக்கட்டளைக்கும், 1.31 கோடி ரூபாய் சி.ஜே.பி.க்கும் வெளிநாட்டு உதவி கிடைத்துள்ளதாக எஃப்.ஐ.ஆரில் குற்றம்சாட்டப்படுகிறது.

குற்றச்சாட்டு வெளியான உடனே டீஸ்டாவும், அவரது கணவரும் கொடுத்த பத்திரிகை அறிக்கையில் உண்மைகளை விவரித்துள்ளனர். வங்கி கணக்கின் முக்கிய பகுதிகளையும் அவர்கள் வெளியிட்டனர். நாலரை லட்சத்திற்கும் குறைவான தொகையே அருங்காட்சியத்திற்காக திரட்டப்பட்டது. இதில் ஐம்பதினாயிரம் ரூபாய் மட்டுமே வெளிநாட்டிலிருந்து கிடைத்த நன்கொடையாகும்.

இதே காலக்கட்டத்தில் சப்ரங் அறக்கட்டளைக்கு வெளிநாட்டு நன்கொடையாக 1.33 கோடி ரூபாய் கிடைத்தது. இதில் பெரும்பாலான தொகை சட்ட உதவிக்கு செலவழிக்கப்பட்டது. 1.15 கோடி ரூபாய் சி.ஜே.பி.க்கு கிடைத்தது. இந்த உண்மைகளுக்கு ஆதாரமாக தங்களுடைய வங்கிக் கணக்கு விபரங்களையும் வெளியிட்டனர். வங்கி அறிக்கையை அஹ்மதாபாத் குற்றப் பிரிவு திருத்தியது என்ற கடுமையான குற்றச்சாட்டை டீஸ்டா எழுப்பியிருந்தார்.

 அருங்காட்சியக திட்டத்தை கைவிடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக சப்ரங் அறிவித்ததை தொடர்ந்து குல்பர்க் சொஸைட்டி வீடுகளை விற்பதற்கு உரிமையாளர்களை அனுமதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1963ஆம் ஆண்டு சொஸைட்டி துவக்கப்பட்ட காலம் முதல் நடைமுறையில் இருந்ததுபோல சாதிமத வேறுபாடு இல்லாமல் வீடுகளை விற்கலாம் என்று கூறப்பட்டது.

சில மாதங்கள் கழித்து குஜராத் அரசு சட்டத்தை இயற்றியதை தொடர்ந்து தீர்மானத்தின் சாத்தியக்கூறும் நஷ்டமானது. ஒரு சமூகத்தின் நபர்களுக்கு சொந்தமான அசையா சொத்துகளை வெளியே உள்ளவர்களுக்கு விற்பதை தடை செய்வதே அந்த சட்டம். உண்மையில் குஜராத்தில் அசையா சொத்துகளை பிறருக்கு மாற்றுவதை தடுக்கும் சட்டம் 1986ஆம் ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்டது.

வகுப்புவாத வன்முறைகள் உருவாகும் காலக்கட்டங்களில் அந்த பகுதிகளில் உள்ளவர்களின் பாதுகாப்பே இந்த சட்டத்தின் நோக்கமாகும். பெருநகரங்களில் மக்கள் மத வன்முறை வதந்திகளை நம்பி தங்கள் சொத்துகளை விற்று விட்டு ஓடுவதை தடுக்கும் வண்ணம் இயற்றப்பட்ட சட்டம் இது. அஹ்மதாபாத்தில் 40 சதவீத சொத்துகள் இந்த சட்டத்தின் வரம்பிற்கு உட்பட்டவை.

குஜராத் அரசு குல்பர்க் சொஸைட்டி மற்றும் நரோட பாட்டியாவுக்கு இச்சட்டத்தின் வரம்பை விரிவுபடுத்திய காலம் முக்கியமானதாகும் என்று மிர்துலா சாரி கூறுகிறார். குல்பர்க் சொஸைட்டி கூட்டுப்படுகொலை வழக்கின் கோப்பை தொடர வேண்டாம் என்ற சிறப்பு புலனாய்வு குழுவின் க்ளோஷர் அறிக்கைக்கு எதிராக ஜகியா ஜாஃப்ரி முதல் வழக்கை பதிவு செய்து சில மாதங்களில் மேற்கண்ட சட்டத்தின் எல்லையை குஜராத் அரசு விரிவுபடுத்தியது. சொத்துக்கு உரிமையாளர்கள் தங்களுக்கு விருப்பமுடையவர்களுக்கு விற்கலாம் என்ற குல்பர்க் சொஸைட்டியின் தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டு எட்டு மாதங்களே அப்போது ஆகியிருந்தன. சொந்த நிலத்தை விற்பதற்கான உரிமையை இச்சட்டம் மீறுகிறது.

குல்பர்க் சொஸைட்டி கூட்டுப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. நீண்ட சட்ட நடவடிக்கைகளும், நீதி கிடைப்பதற்கான கால தாமதம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் நிராசையுடன் பின்வாங்குவார்கள் என்று இந்திரா ஜெய்சிங் சுட்டிக்காட்டுகிறார். பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட்டவர்களே, பாதிக்கப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வருகிறார்கள். நிற்கதியான சூழலில் அக்கிரமக்காரர்களுக்கு ஆதரவாக நிற்பதற்கு பாதிக்கப்பட்டவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்று அரசு கணக்கு போடுகிறது.

குஜராத் கலவரத்தில் அரசின் பங்குள்ளது என்று குற்றம் சாட்டிய ஜகியா ஜாஃப்ரி, 2006 பிப்ரவரி 8ஆம் தேதி 119 பக்கங்களை கொண்ட மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொள்ள உச்சநீதிமன்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. சில வழக்கு கோப்புகளை மீண்டும் திறக்கவும், ஐந்து அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு புலனாய்வு குழு 2012ஆம் ஆண்டு மூடிய உறையில் அளித்த அறிக்கையை (இடூணிண்தணூஞு கீஞுணீணிணூt) தாக்கல் செய்தது.

ஆனால், குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை கிடையாது என்ற எஸ்.ஐ.டி.யின் கண்டுபிடிப்பை புகார் அளித்தவர்கள் அங்கீகரிக்கவில்லை. மீண்டும் தலையிட்ட உச்சநீதிமன்றம், அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. சிறப்பு புலனாய்வு குழு 2013 பிப்ரவரியில்தான் உயர்நீதிமன்றத்தில் இந்த அறிக்கையை தாக்கல் செய்தது.

எஸ்.ஐ.டி.யின் அறிக்கையை மோடிக்கான நற்சான்றிதழ் என்று மோடியின் ஆதரவாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர். தாங்கள் சேகரித்த ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் மோடி மீது வழக்கு தொடர அடிப்படை இல்லை என்று மட்டுமே எஸ்.ஐ.டி. அறிக்கையில் கூறியது.

சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்த உண்மைகளுக்கும் அதன் தலைவர் ராகவன் எடுத்த தர்க்க முடிவுக்கும் இருந்த வேறுபாட்டையும், முரண்பாட்டையும் கண்ட மனித உரிமை ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரனை நீதி நடுநிலையாளராக (ச்ட்டிஞிதண் ஞிதணூடிச்ஞு) நியமித்து சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கையை மீளாய்வு செய்ய கேட்டுக் கொண்டது.

ராஜூ ராமச்சந்திரன் வழங்கிய குறிப்புரையில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைவர் மீதும் (மோடி உட்பட) குற்றத்துக்கு உட்படுத்தும் ஆதாரங்கள் இருப்பதை வெளிக்கொணர்ந்தார்.

இந்த காலத்தில்தான் 2013 மார்ச் மாதம் டீஸ்தாவுக்கு எதிராக குல்பர்க் நினைவகம் தொடர்பான வழக்கு கொடுக்கப்பட்டது. அதாவது டீஸ்டாவும், ஜகியாவும் தங்களுடைய எதிர் மனுவை தாக்கல் செய்வதற்கு ஒரு மாதம் முன்பு. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் குஜராத் அரசு அசையா சொத்துகள் விற்பனை சட்டத்தின் வரம்பில் குல்பர்க் சொஸைட்டியையும் கொண்டு வந்தது.

டீஸ்டா தன்னை விடாது பின்தொடர்ந்ததில் மோடி அமைதி இழந்தார் என்று மோடியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் கூறுகிறார். கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிப்பதிலோ, மறுவாழ்வு பணிகளிலோ டீஸ்டா தீவிரமாக பங்கேற்பது பெரிய பிரச்சனை அல்ல. ஆனால், தனக்கு எதிரான போராட்டத்தில் நேரடியாக பங்கேற்பதுதான் மோடியை வாட்டியது.

2002 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக்கான சட்டப் போராட்டத்தில் சி.ஜே.பி.யின் ஆதரவு இருப்பது தெளிவான பின்னர் டீஸ்டா மீது குஜராத் காவல்துறை தொடர்ந்து எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்தது. அனைத்தையும் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. உதாரணத்திற்கு, 14 பேர் எரித்துக் கொல்லப்பட்ட பெஸ்ட் பேக்கரி வழக்கில் முதலில் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

முக்கிய சாட்சியான ஜாஹிரா ஷேக் தான் மிரட்டப்பட்ட உண்மையை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் தெரிவித்ததை அடுத்து வழக்கை குஜராத்துக்கு வெளியே மராட்டியத்துக்கு மாற்றியது உச்சநீதிமன்றம். இந்த வழக்கில் குற்றம் சõட்டப்பட்ட ஒன்பது பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கின் போக்கில் ஜாஹிரா ஷேக் திடீரென பல்டி அடித்தார். டீஸ்தா தன்னை கடத்தி வைத்திருப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்க கட்டாயப்படுத்துவதாகவும் வதோதராவில் பத்திரிகையாளர்களை கூட்டி தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் சென்ற டீஸ்தா, ஜாஹிராவின் புகாரை விசாரிக்க உயர்மட்ட விசாரணையை கோரினார். தனது விசாரணையில் ஜாஹிரா ஷேக்கின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று உணர்ந்த உச்சநீதிமன்றம், ஜாஹிராவுக்கு ஒரு வருட சிறை தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

இனப்படுகொலை தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் தண்டனை விதித்த போது குஜராத் அரசால் எதுவும் செய்ய இயலவில்லை. குஜராத் அரசு பதிவு செய்த வழக்குகளில் வெறும் ஐந்து சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். ஆனால், எஸ்.ஐ.டி. நடவடிக்கை எடுத்த, வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்ட வழக்குகளில் 39 சதவீத வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.

டீஸ்டாவின் போராட்டத்தில் அரசியல் நலன் இருப்பதாக குற்றம் சாட்டிய பா.ஜ.க.வுக்கு, டீஸ்டா தகுந்த பதிலை அளித்தார். புகாரில் எவ்வித உண்மையும் இல்லாதிருந்தால் உச்சநீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்காது. தெளிவான ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றே எஸ்.ஐ.டி. அறிக்கை அளித்தது. ஆனால், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமிகஸ் க்யூரி அதே ஆதாரங்களை மாறுபட்ட கோணத்தில் பார்த்தார்.

மோடியை மட்டும் குறிவைப்பதாக கூறப்படும் குற்றச் சாட்டிலும் உண்மை இல்லை. மோடியுடன் 60 பேர் மீதும் குற்றம் சாட்டப்படுகிறது. மோடியை குறி வைப்பது அவசியமற்றது என்ற கருத்தை கலவரத்திற்கு பிறகு பல மாதங்கள் குஜராத் உளவுத்துறை தலைவராக பணியாற்றிய கேரளாவை சõர்ந்த ஆர்.பி.ஸ்ரீகுமாரும் கூறுகிறார். அவர் மோடிக்கு எதிராக சூழ்நிலை ஆதாரங்கள் அடங்கிய 200 பக்கங்களை கொண்ட ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

2002 குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளையெல்லாம் குப்பைத்தொட்டியில் வீசவும், மோடியின் மீது குற்றம் சாட்டும் டீஸ்டாவை வில்லன் பாத்திரமாக சித்தரிக்கவும் அரசு முயற்சிக்கிறது. டீஸ்டாவையும், அவரது கணவரையும்  காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று குஜராத் காவல்துறை தீவிரம் காட்டுவதற்கு காரணம், அவர்களை அவமானப்படுத்துவதற்காகும் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். டீஸ்டா மற்றும் சி.ஜே.பி.யின் பொருளாதார பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தட்டும். ஆனால், காவலில் எடுத்து விசாரணை நடத்தவேண்டும் என்பது பழிவாங்கும் செயலாகும்.

மோடியும் அவர் தலைமை வகித்த மாநில அரசுமே குஜராத் கலவரத்திற்கு காரணம், அவர்கள் விசாரணையை சந்திக்க வேண்டும் என்பதில் டீஸ்டா உறுதியாக உள்ளார். நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு டீஸ்டாவை ஆதரிக்காமல் இருக்கவியலாது. இந்திரா ஜெய்சிங் சுட்டிக்காட்டியதைப் போல விசாரணை செய்யப்படவேண்டியது டீஸ்டா அல்ல, நீதிமன்றங்களே. ஆம், நமது நீதிமன்றங்களே!

(செப்டம்பர் 2015 இதழில் வெளியான கட்டுரை)

Comments are closed.