டெல்லி காவல்துறை யாரை வேட்டையாடுகிறது?

0

டெல்லி காவல்துறை யாரை வேட்டையாடுகிறது?

டெல்லி இனப்படுகொலை வழக்கின் துணை குற்றப்பத்திரிகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் பெயர்களை சேர்த்திருப்பது அதிர்ச்சியூட்டுகிறது. டெல்லி காவல்துறையின் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. யெச்சூரியைத் தவிர, ஜே.என்.யூ பேராசிரியர் ஜெயந்தி கோஷ், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வானந்த், திரைப்பட தயாரிப்பாளர் ராகுல் ராய் மற்றும் சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் ஆகியோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும், இவர்கள் மீது குற்றம் சுமத்தவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாணவர்களின் வாக்குமூலத்தில் கூறிய பெயர்களை மட்டுமே பதிவு செய்துள்ளதாகவும் டெல்லி காவல்துறை விளக்கம் அளிக்கிறது.

நாடு முழுவதும் உள்ள ஜனநாயகவாதிகள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்த பின் டெல்லி காவல்துறை தனது கடுமையை சற்று தளர்த்தியது. மாணவர்கள் வாக்குமூலம் அளித்தார்கள் என்ற செய்தி புனையப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி காவல்துறை கூறும் எல்லா வாக்குமூலங்களும் ஒரே அச்சில் வார்க்கப்பட்டவை. மூத்த தலைவர்களின் உத்தரவின் பேரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சில மாணவர்கள் வாக்குமூலம் அளித்தனர் என்பது காவல்துறையின் புதிய கண்டுபிடிப்பாகும். சரி அவ்வாறு உத்தரவிட்டாலும் அது எவ்வாறு கலவரத்தை தூண்டியதாக அமையும்?

பா.ஜ.க. தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் ஆகியோர்தான் கலவரத்தை தூண்டியவர்கள். அவர்களை நோக்கி சுண்டு விரலை கூட நீட்டாத காவல்துறை ஜனநாயகவாதிகளை வழக்கில் சிக்க வைக்க முயற்சிக்கிறது. யெச்சூரி கூறியதைப் போல ’இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. போராட்டங்களை கலவரமாக முத்திரை குத்தும் மோசமான திசை திருப்பும் நடவடிக்கை. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் அநீதிக்கு எதிரான போராட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது’.

இந்நடவடிக்கை மக்கள் போராட்டங்களை அச்சுறுத்தி பலவீனப்படுத்தும் அரசின் தந்திரமாகும். நாட்டின் இரண்டாவது சுதந்திர போராட்டம் என்று வர்ணிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றது. கோவிட் பெருந்தொற்று நோயின் பரவல் அந்த போராட்டத்திற்கு தற்காலிகமான ஓய்வை அளித்த போதிலும் நாடு தழுவிய மக்கள் எழுச்சியாக மீண்டும் புத்துயிர் பெறும். “போராட்டக்காரர்களை அவர்களின் ஆடைகளை கொண்டு அடையாளம் காண முடியும்“ என்று கூறி சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்திற்கு வகுப்புவாத பிம்பத்தை உருவாக்க முயன்ற பிரதமருக்கு, அனைத்து தரப்பு மக்களும் வீதிகளில் இறங்கி பதிலளித்தனர். இந்த நாட்டின் பாரம்பரியம், அரசியல் சாசன தத்துவங்களுக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது.

ஒருவர் தனக்கு விருப்பமான மதத்தை நம்பவும், நடைமுறைப்படுத்தவும், பரப்புரை செய்யவும் அரசியலமைப்பு சுதந்திரம் அளிக்கிறது. ஒரு குடிமகன் ஏதேனும் ஒரு மதத்தை நம்புகிறான் என்ற காரணத்திற்காக அவனது குடியுரிமையை மறுப்பது கூடாது. இந்த அடிப்படைக் கொள்கையை குடியுரிமை திருத்தச் சட்டம் மீறுகிறது. தேசத்திற்கென ஒரு மதம் கிடையாது. ஆனால், பா.ஜ.க. அரசு தேசத்திற்கு விருப்பமான மதங்களையும், விருப்பமில்லாத மதத்தையும் வரையறைச் செய்ய துணிந்தது. இது மதச்சார்பின்மை தேசத்திலிருந்து மதவாத தேசத்தை நோக்கிய பயணமாகவே சிந்தனையாளர்களும், செயற்பாட்டாளர்களும், இந்துத்துவாவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பில்லாத அரசியல் தலைவர்களும் கண்டனர். அதனால் நாட்டின் அரசியலைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர்.

மக்களின் எதிர்வினையை ஒடுக்கிவிட முடியாது என்பதை அரசு உணர்ந்தது. அன்றிலிருந்து போராட்டக்காரர்களை வழக்கில் சிக்க வைப்பதையே உத்தியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் யெச்சூரியையும், யோகேந்திர யாதவையும் வழக்கில் சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. இதன் மூலம் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு உள்ளிட்ட அரசின் எதேச்சதிகார நடவடிக்கைக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு யாரும் ஆதரவளிக்க கூடாது என்பது அரசின் திட்டமாகும்.

சட்டத்தின் முன் அனைவருக்கும் சம நீதியை உத்தரவாதம் அளிக்கும் அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவை சுக்கு நூறாக கிழிக்கும் வகையிலான ஒரு குற்றப்பத்திரிகையை டெல்லி இனப்படுகொலை வழக்கில் காவல்துறை தாக்கல் செய்தது. வன்முறையில் ஈடுபட்டவர்களையும், கலவரத்தை தூண்டியவர்களையும், சதித்திட்டம் தீட்டியவர்களையும் தவிர்த்து விட்டு வன்முறையில் துளியும் சம்பந்தமில்லாத சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராளிகளையும், ஜாமிஆ மில்லியா மாணவர்களையும், செயற்பாட்டாளர்களையும் டிசம்பர் 13 முதல் பிப்ரவரி 25 வரையிலான நிகழ்வுகளுடன் தொடர்புப்படுத்தி குற்றப்பத்திரிகையில் சேர்த்திருக்கின்றனர். கலவரத்திற்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்த பா.ஜ.க. தலைவர் கபில் மிஸ்ரா, வகுப்புவாத வெறுப்பை தூண்டும் அறிக்கைகளை வெளியிட்ட அனுராக் தாக்கூர் மற்றும் பர்வேஷ் வர்மா ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லை.

மோடி அரசு அனுமதித்த ஒய் பிரிவு பாதுகாப்பில் கபில் மிஸ்ரா டெல்லியை சுதந்திரமாக வலம் வருகிறார். டெல்லிக்கு வெளியே இருந்து 2000 பேரை அழைத்து வந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை என்று கலவரம் குறித்து டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஸஃபருல் இஸ்லாம் கான் ‘தி வயர்’ இணைய தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். டெல்லியில் நடந்தது குடியுரிமை திருத்த சட்டத்தின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் அல்ல. 2002ல் குஜராத்தில் மோடியின் ஆசியோடு நடத்தப்பட்ட இனப்படுகொலையின் டெல்லி பதிப்பு இது.

அழிக்கப்பட்ட பள்ளிவாசல்களும், கடைகளும் வன்முறையின் திசையை சுட்டிக்காட்டுகின்றன. இந்த அட்டூழியத்தின் சதிகாரர்களை பல்கலைக் கழக வளாகங்களிலோ, மதவாதத்திற்கு எதிரான செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்களிடம் தேடக்கூடாது. டெல்லி இனப்படுகொலைக்கு திட்டமிட்ட சதிகாரர்கள் அங்குள்ள காவல்துறை தலைமையகத்திலும், சங்பரிவார அமைப்புகளின் அலுவலகங்களிலும்தான் இருக்கின்றனர்.

Comments are closed.