டெல்லி: குடிசைகளை அப்புறப்படுத்தும் போது இறந்த ஆறுமாத குழந்தை

0

மேற்கு டெல்லியில் உள்ள ஷகூர் பஸ்தி என்ற இடத்தில் ரயில்வே துறையினர் சனிக்கிழமை அன்று குடிசைகளை அப்புறப்படுத்தும் பணியில் இருந்த போது ஒரு குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏறத்தாழ 500 காவலர்களுடன் ஷகூர் பஸ்தி ரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள ஏறத்தாழ ஆயிரம் குடிசைகளை ரயில்வே துறையினர் புல்டோசர் இயந்திரங்களின் துணையுடன் அப்புறப்படுத்தினர்.
அப்போது அங்கிருந்த பொருட்கள் ஆறு மாத குழந்தை ஒன்றின் மீது விழுந்ததில் அக்குழந்தை இறந்தது.ரயில்வே துறையின் இந்த போக்கிற்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். அப்பகுதி மக்கள் 1992ல் இருந்தே அங்கு வாழ்ந்து வருவதாக தெரிவித்த கெஜ்ரிவால் இந்த குளிர் காலத்தில் இந்த இடிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடிசைகள் இடிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வாழ்ந்து வந்த மக்கள் கடுமையான குளிரில் தற்போது அவதியுற்று வருகின்றனர். இவர்களுக்கு தேவையான போர்வைகளையும் உணவுப் பொருட்களையும் வழங்க உத்தரவிட்டுள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.
ரயில்வே துறையின் இச்செயலை கண்டித்து ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments are closed.