டொனால்ட் டிரம்ப் அறிவித்ததை போன்று முஸ்லிம் குடியேற்றத்திற்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும்: யோகி அதித்யாநாத்

0

புதிய அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைவதற்கு இடைக்கால தடை வித்தித்து சமீபத்தில் உத்தரவிட்டார். இது பல எதிர்ப்பலைகளை அவருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இது போன்ற குடியேற்றத் தடையை இந்தியாவும் விதிக்க வேண்டும் என்று சர்ச்சை சாமியாரான யோகி அதித்யநாத் தெரிவித்துள்ளார்.

பாஜக வின் எம்.பி.யான யோகி அதியநாத் இக்கருத்தை திங்களன்று பேரணி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், டிரம்ப் அறிவித்தது போன்ற தடை இந்நாட்டில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தேவை என்று கூறியுள்ளார்.

இதோடு கைரானாவில் இந்துக்கள் கூட்டாக வெளியேற்றப்பட்டார்கள் என்று குற்றம் சாட்டி அது பாஜக ஆட்சிக்கு வந்தால் கடுமையாக கையாளப்படும் என்று கூறியுள்ளார். கைரானாவின் நிலையம் கஷ்மீரின் நிலையும் ஒன்று தான் என்று கூறிய அவர், 1990 களில் கஷ்மீரை விட்டு பண்டிட்கள் வெளியேறியதை மறந்துவிட்டீர்களா என்றும் இப்போது நீங்கள் விழித்துக்கொள்ளவில்லை என்றால் நீங்களும் பிற இடங்களுக்கு வெளியேற்றப்படுவீர்கள் என்று கூறியுள்ளார்.

தனது தேர்தல் பிரச்சாரத்தில் அவர் கூறிய இந்த கருத்துக்களுடன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நரேந்திர மோடியை தனது அரசியல் முன்னோடி என்று கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்ஷியாவில் வசிப்பவர்கள் ரஷ்ஷிய சட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்றும் சிறுபான்மையினர்களுக்கு என்று தனி சலுகைகள் எதுவும் புதின் வழங்க வில்லை என்றும் கூறிய அவர் இந்தியாவில் வசிப்பவர்கள் இந்திய சட்டங்களை மதித்து வாழ வேண்டும் என்றும் அதனை பின்பற்ற மறுப்பவர்கள் ஷரியத் சட்டங்கள் எங்கு உள்ளதோ அங்கு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் தான் கூறியது போன்று காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பஹுஜன் சமாஜ் கட்சி, ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூற அவர்களுக்கு தைரியம் உள்ளதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஞாயிறு ஹிந்து யுவ வாஹினி அமைப்பின் மாநில தலைவரை அவரது பொறுப்பில் இருந்து அதித்யநாத் நீக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் அவர் பாஜகவிற்கு எதிராக வரும் தேர்தலில் வேட்பாளர்களை களம் இறக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த அதித்யநாத் யுவ வாஹினி அரசியல் அமைப்பு அல்ல என்று அதனால் அது அரசியலில் போட்டியிடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இவரின் இந்த கருத்துக்கு பதிலளித்த தெரிவித்த யுவ வாஹினியின் சுனில் சிங் கூறுகையில், “ஏறத்தாழ ஹிந்து யுவ வாஹினியின் அனைத்து உறுப்பினர்களும் தங்களுடன் உள்ளனர் என்றும் அதித்யநாத் ஒரு மனதாக எங்களை வெளியேற முடியாது என்றும் அது சட்டவிரோதமானது என்றும்  கூறியுள்ளனர். முன்னதாக யுவ வாஹினி சார்பில் ஆறு தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் சுனில் சிங் தெரிவித்திருந்தார். இவர்களின் இந்த முடிவு யோகி அதித்யனாத்தை உத்திர பிரதேசத்தின் முதல்வர் வேட்பாளராக நிறுத்த பாஜக மறுப்பு தெரிவித்தது காரணம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் தன்னை உத்திர பிரதேச மாநில முதல்வர் வேட்பாளராக நிறுத்த பாஜக சம்மதிக்காததால் அந்த கூட்டத்தை விட்டு அவர் பாதியில் வெளியேறியதாக கூறப்படுகிறது. (பார்க்கக் செய்தி)

Comments are closed.