தங்கள் இயலாமைக்கு கஃபில்கானை பழிவாங்கும் உத்திர பிரதேச அரசு

0

கோரக்பூர் BRD மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்ந்து உத்திர பிரதேச பாஜக யோகி அரசு மீது கடும் விமர்ச்சனங்கள் எழுந்தன. அதேவேலை பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்ற தனது சொந்த பணத்தை செலவிட்டு, தனது முயற்சியால் ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்றுவந்த டாக்டர் கஃபில் கானிற்கு பாராட்டுகளும் குவிந்தது.

தங்கள் மீது விமர்சனம் வைக்கப்படுவதையும் டாகடர் கஃபில் கானிற்கு புகழ்ச்சி கிடைப்பதையும் விரும்பாத பாஜகவின் இணைய குண்டர் கும்பல் முதல் நாள் தொட்டே அவர் மீது பல்வேறு அவதூறுகளை பரப்பத தொடங்கியது. தற்போது இது ஒரு படி மேல் சென்று அவர் உத்தர பிரதேச சிறப்பு காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் அவர் ஆள்மாறாட்ட வழக்கும் கற்பழிப்பு புகாரும் அவர் மீது வைக்கப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு இந்தியர்களை வெளிநாட்டு மருத்துவ தரத்தில் சோதிக்கும் பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் டாக்டர் கஃபில் கான் டாக்டர் விஜய் குமார் என்பவர் சார்பாக தேர்வில் ஆஜரானார் என்று குற்றம் சாட்டப்பட்டது பின்னர் இவர் மீதான இந்த குற்றச்சாட்டை நீதிமன்றம் ரத்து செய்து அவரை விடுவித்து அந்த வழக்கும் மூடப்பட்டது. அது போன்றே 2015 ஆம் ஆண்டு டாக்டர் கஃபில் கான் மீதும் அவரது சகோதரர் மீதும் ஒரு பெண் கற்பழிப்புப் புகார் கொடுத்தார். இதன் பின்னர் கஃபில் கானுடைய சகோதரரின் தொழில்முனைப் போட்டியாளரிடம் அந்த பெண் பணியாற்றி வந்ததும் அந்தப் பெண் கூறிய புகார்களும் போலியானது என்றும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கஃபில் கான் BRD மருத்துவமனையில் பணியாற்றுவதோடு மட்டுமல்லாமல் தனியாக அவர் ஒரு மருத்துவமனை ஒன்று நடத்தியதாகவும் புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில் டாகடர் கஃபில் கான் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் எப்போதோ அவர் மீது வைக்கப்பட்டவை, மேலும் அந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டும் உள்ளார். அவர் நடத்திவந்த தனியார் மருத்துவமனை குறித்து கருத்து கூறும் அவரது உறவினர்கள், கஃபில் கான் தான் தங்கள் குடும்பத்தின் முதல் மருத்துவர் என்றும் அவர் மருத்துவ படிப்பை முடிவு செய்ததும் தங்களது கிராமத்தில் அவருக்கென சிறு மருத்துவமனை ஒன்றை தாங்கள் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் BRD மருத்துவமனையில் கஃபில் கான் ஒப்பந்த மருத்துவராக பணியாற்றிய போது கஃபில் கான் பகுதி நேரத்தில் இதனை பார்த்துக் கொண்டதாகவும், அவருக்கு நிரந்தர பணி கிடைத்ததும்  இந்த மருத்துவமனையில் பணியாற்றுவதை அவர் நிறுத்தி விட்டார் என்றும் கூறியுள்ளனர். மேலும் தங்கள் குடும்பத்தினருக்கு கஃபில் கான் BRD மருத்துவமனைக்கு பணிக்கு செல்வதை விட தங்களது மருத்துவமனையில் பணியாற்றுவதில் தான் விருப்பம் என்றும் ஆனால் கஃபில் கான் BRD மருத்துவமனையில் பணியாற்றவே விரும்பினார் என்றும் கூறியுள்ளனர்.

மருத்துவமனை ஊழியர்களோ கஃபில் கான் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் ஆனால் அவர் மிகுந்த கடமையுணர்ச்சி உடைய மருத்துவர் என்று கூறியுள்ளனர். இன்னும் அவரது பணியிடத்தில் அவரது பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகை ஒன்றை அவர் வைத்துள்ளதாகவும் இது BRD மருத்துவமனைக்கு அதித்யநாத் வருகை புரிந்த போது ஆவாரால் கண்டிக்கப்பட்டு பின்னர் அந்த பெயர்ப்பலகை கருப்பு மை வைத்து அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டாக்டர் கஃபில் கானை உத்திர பிரதேச சிறப்பு காவல்படை கைது செய்து கோரக்பூர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது. இவருடன் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் ஆறு பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அவர்களின் சொத்துக்களை முடக்க நீதிமன்றத்தை நாடப்போவதாக காவல்துறை கண்காணிப்பாளர் சத்யராஜ் அனிருத்தா பங்கஜ் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மரணம் தொடர்பாக இவர்கள் குற்றம் சாட்டப்பட்டு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று உத்திர பிரதேச அரசு கூறிவரும் வேலையில் தற்போது ஃபரூக்காபாத்  மருத்துவமனையில் ஒரு மாதத்தில் மட்டும் கோரக்பூர் போலவே ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 49 குழந்தைகள் மரணித்துள்ளன. (பார்க்க செய்தி)

Comments are closed.